வியாழன், 22 டிசம்பர், 2022

பாகிஸ்தானில் தாலிபான்கள் பிடியில் இருந்த போலீஸ் நிலையம் மீட்பு: 33 தாலிபான்கள் சுட்டுக்கொலை

தினத்தந்தி  : இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த போலீஸ் நிலையம் மீட்பு: 33 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் பன்னு மாவட்டத்தில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் வளாகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு பாகிஸ்தான் தலீபான் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சோந்தவா்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 33 பேரை போலீசார் விசாரணை கைதிகளாக பிடித்து வைத்திருந்தனா்.
இந்த நிலையில் கடந்த ஞயாற்றுக்கிழமை மாலை விசாரணை கைதிகளில் ஒருவர் போலீஸ்காரரை தாக்கி அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்தார். பின்னர் அவர் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளையும் விடுவித்ததை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சேர்ந்து போலீஸ் நிலையத்தை கைப்பற்றினர்.
அங்கிருந்த போலீசார் அனைவரையும் பிணைக்கைதிகளாக பிடித்த பயங்கரவாதிகள், தாங்கள் பாதுகாப்பாக தப்பி செல்ல உதவினால் பிணைக்கைதிகளாக விடுவிப்போம் என கூறினர். இது தொடர்பாக பயங்கரவாதிகளுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. எனினும் பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பயங்கரவாதிகள் தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை ராணுவ அதிகாரிகள் அறிந்தனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர்கள் சிறப்பு அதிரடிப்படை வீரர்களை போலீஸ் நிலையத்துக்குள் அனுப்பினர். அவர்கள் பயங்கரவாதிகள் 33 பேரையும் சுட்டுக்கொன்று பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவித்தனர். எனினும் இந்த அதிரடி தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் 2 பேர் பலியாகினர். மேலும் 15 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக