வியாழன், 8 டிசம்பர், 2022

சென்னை-யாழ்ப்பாணம் இடையே 12-ந்தேதி முதல் விமான சேவை

மாலைமலர் : சென்னை - இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவையை தொடங்க இருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி சென்னை- யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவை வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது.
இதை அலையன்ஸ் ஏர் மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். முதல் கட்டமாக வாரத்துக்கு 4 விமானங்கள் சென்னை- யாழ்ப்பாணம் இடையே இயக்கப்படுகின்றன.
ஏற்கனவே 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை-யாழ்ப்பாணம் இடையே விமான போக்குவரத்தை தொடங்க சோதனை செய்யப்பட்டன.
அதே ஆண்டு நவம்பர் மாதம் சென்னை-யாழ்ப்பாணம் இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த விமான போக்குவரத்து நடைபெற்றது.


அதன்பிறகு கொரோனா தொற்று பரவியதால் சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிற 12-ந்தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது. யாழ்ப்பாணத்தின் பலாவி பகுதியில் இருந்து விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் சுற்றுலா துறை முற்றிலும் முடங்கியது. இதனால் பல்வேறு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்க கொரோனா பரவலும் ஒரு காரணமாகும்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கையில் சுற்றுலா துறை சற்று மேம்பட்டுள்ளது.
இதையடுத்து விமான சேவைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் முயற்சியில் உள்ள இலங்கைக்கு இந்த விமான சேவை மூலம் சுற்றுலா வருவாய் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா துறை இலங்கைக்கு அதிக வரு வாய் ஈட்டித்தரும் பிரிவாக உள்ளது.

சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கப்படும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இதற்கான ஓடுபாதைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான சேவையை யாழ்ப்பாணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்கள் வரவேற்றுள்ளனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக