சனி, 19 நவம்பர், 2022

ஓமானில் விற்கப்பட்ட மகள்; தாய் கண்ணீர்

தமிழ் மிரர்  : எனது மகளை டுபாயில் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக தெரிவித்து ஓமானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர் என தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தமது மகளை மீட்டுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு – ஓட்டமாவடி, பாலைநகரைச் சேர்ந்த 51 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயாரான முகமது இஸ்மாயில் சித்திக்நிசா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
2 வயது குழந்தையின் தாயாரான 22 வயதுடைய முகமது அஸீம் பாத்திமா ஹமீதியாவை கணவர் விட்டுச் சென்ற நிலையில், வறுமையின் காரணமாக அவர் வெளிநாட்டுக்கு வீட்டு பணிபெண்ணாக செல்வதற்கு முடிவு செய்து களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த தரகர் ஒருவர் மூலம் கொழும்பிலுள்ள ஏஜென்சிக்கு கடவுச் சீட்டை வழங்கியள்ளார்.


அவர்கள் டுபாயில் காரியாலயத்தில் சுத்தம் செய்யும் வேலைக்கான வெற்றிடத்துக்கு அனுப்புவதாக தெரிவித்த நிலையில், கடந்த மார்ச் 6ஆம் திகதி அவரை ஓமானுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.
இதன் பின்னார் மகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதன் பின்னர் நான் கொழும்பில் உள்ள வேலைவாய்ப்பு பணியகத்துக்கு சென்று எனது மகளை மீட்டுத்தருமாறு கோரினேன்.

அதற்கு அங்குள்ள பெண் அதிகாரி 8 இலட்சம் ரூபாய் தந்தால் மகளை மீட்டுத்தருவதாக தெரிவித்ததுடன் மட்டக்களப்பு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு செல்லுமாறு தெரிவித்தனர்.

இதன் பின்னர் நான் மட்டக்களப்பு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு 16 தடவைகள் சென்றேன். அவர்கள் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதன் பின்னர் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சென்று முறைப்பாடு தெரிவித்து 6 தடவைகள் சென்றேன். அங்கும் எதுவும் செய்யவில்லை.

இதனை தொடர்ந்து சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு சென்றேன். அவர்களும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு கடந்த 9 மாதங்களாக எனது மகளை மீட்பதற்காக செல்லாத காரியாலயம் இல்லை.

எனது மகளுக்கு ஓமானில் சித்திரவதை செய்கின்றனர். அவருடன் அங்கு 90 பேர் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுவருதாக எனது மகள் வட்ஸ் ஆப் மூலம் வீயோ அனுப்பியுள்ளார். எனவே மகளையும் அங்குள்ள 90 பேரையும் முதலில் காப்பாற்றி மீட்டுத்தரவும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

யாராக இருந்தாலும் சரி வேலைவாய்ப்புக்காக சுற்றுலா விசாவில் செல்லவேண்டாம். மனிதர்களை கடத்திச்சென்று ஆடு மாடுகளை விற்கின்றதைப் போல் விற்கின்றனர்.

ஆகவே சட்டரீதியாக செல்லுங்கள் எனது மகள் போல போய் சிக்க வேண்டாம். எனது மகள் சென்று 9 மாதங்கள். இதில் என்னுடன் 3 தடவைகள் மாத்திரம் பேசியுள்ளார்.

மகளின் 2 வயது பெண் பிள்ளை அம்மா வேண்டும் என வீட்டின் வாசல் கதவில் தினமும் காத்திருக்கின்றார்.

எனவே இளம் பெண் பிள்ளைகளை கொண்டு சென்று ஆடு மாடு போல விக்கின்றவர்களை கைது செய்யவும், அப்போது தான் நாடு முன்னேறும். எனவே இந்த குழந்தைக்கு தாய் வேண்டும். எனவே அவரை மீட்டுத்தாருங்கள் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, அதே பகுதியைச் சேர்ந்த பர்திமா ஸபீரா. இவருக்கு திருமணம் முடித்து 9 மற்றும் 10 வயதுடைய இருபெண் பிள்ளைகள் உள்ளனர்.

தாயாரான இவரின் கணவன் போதைப் பொருளுக்கு அடிமையாகிய நிலையில் வறுமையின் காரணமாக வீட்டு பணிப் பெண்ணாக ஒமானுக்கு சென்று ஒரு வருடமாகின்ற நிலையில், 3 மாதங்களாக எந்தவிதமான தொடர்பும் இல்லை. எனவே அவரை மீட்டுத் தாருங்கள் என அவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓமானில் இலங்கை தூதரகத்தை சேர்ந்தவர் 17 இலட்சத்திற்கு பெண்களை விற்கிறார் – பாதிக்கப்பட்ட பெண் தகவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக