நக்கீரன் : குஜராத் தேர்தல் நிலவரம் ஓர் அலசல்
2022 உத்தரப்பிரதேசத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, 2024ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை அரசியல் ஆர்வலர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
உ.பி.யில் ஆட்சி அமைக்கும் கட்சி அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர் கதையாக உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இருக்கும் எதிர்பார்ப்பைப் போல் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் தேர்தலும் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.
குஜராத் வரலாற்றில் இதுவரை காங்கிரஸ், பாஜக என இருமுனைப் போட்டியே நிலவி வந்தது.
தற்போது ஆம் ஆத்மியின் வருகையால் குஜராத் களம் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி, 2013, 2015, 2020 எனத் தொடர்ந்து மூன்று முறை டெல்லியில் ஆட்சி அமைத்தது. மாநிலக் கட்சியான ஆம் ஆத்மி கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, டெல்லியைத் தாண்டி கோவாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும், பஞ்சாபில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியையும் அமைத்தது.
பஞ்சாப் தந்த தேர்தல் வெற்றியின் உத்வேகத்தில் அதே முனைப்புடன் 2022 குஜராத் தேர்தலிலும் போட்டியிடுகிறது ஆம் ஆத்மி.
குஜராத்தில் பத்திரிகையாளராக இருந்து, ஆம் ஆத்மியில் இணைந்த இசுதான் காத்வியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது.
இசுதான் அறிவிப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பி வரும் வேளையில், குஜராத்தின் பாரம்பரியமான காங்கிரசும், பாஜகவும் தங்களது முதல்வர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை.
குஜராத்; முதல்வன் பட பாணியில் முதல்வர் வேட்பாளர்; யார் இந்த இசுதான் காத்வி?
பாஜகவின் கோட்டையாகச் சொல்லப்படும் குஜராத்தில் கடந்த தேர்தலில் காங்கிரசுடன் கடும் போட்டியிட்டு, பாஜக போராடிக் குறைவான சதவீதத்திலேயே ஆட்சியைப் பிடித்தது.
அந்தத் தேர்தலில் ஜி.எஸ்.டி, மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்டவை பாஜகவுக்கு நெருக்கடியைத் தந்தது. முக்கியமாகக் குஜராத்தில் இருக்கும் பட்டேல் சமூக மக்களுக்கான உரிய அங்கீகாரத்தை பாஜக தரவில்லை எனக் கூறி, பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து தனக்கு பெரும் வாக்கு வங்கியைச் சேர்த்து வைத்திருந்தார். இவர்,
2017 தேர்தலுக்கு முன் காங்கிரசில் இணைய அது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இதே ஹர்திக் பட்டேல் தேர்தலுக்குப் பின் எடுத்த முடிவால் குஜராத் அரசியல் நிலைமை அப்படியே மாறியது.
காங்கிரசில் இருந்த ஹர்திக் பட்டேல், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவில் இணைந்தார். குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபாணி திடீரென ராஜினாமா செய்ய அந்த இடத்தை பாஜக புபேந்திரபாய் பட்டேலைக் கொண்டு நிரப்பி பட்டேல் சமூகத்திற்கு பாஜக மீது இருந்த அதிருப்தியைச் சமாளித்தது. அடுத்தடுத்து குஜராத்தில் நடந்த இந்த அரசியல் மாற்றங்களால் காங்கிரசின் பலம் குறைந்து பாஜகவின் கை ஓங்கியது.
குஜராத் காங்கிரசின் முக்கிய அடையாளமாக இருந்த அகமது படேல் மறைவு, ஹர்திக் பட்டேல் விலகல், அதன் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும் தோல்வி என காங்கிரஸ் தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வருகிறது. இது 2022 தேர்தலிலும் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
Gujarat Election analyses
காங்கிரசின் சறுக்கலை பாஜக தனக்குச் சாதகமாக்க முயன்றாலும் திடீர் முதல்வர் மாற்றம், பில்கிஸ் பானு வழக்கு, சமீபத்தில் நேர்ந்த மோர்பி பாலம் விபத்து உள்ளிட்டவை பாஜகவிற்கு மீண்டும் குஜராத்தில் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தத் தேர்தலில் புதிதாகக் குஜராத் மக்களுக்கு அறிமுகமாகியுள்ள ஆம் ஆத்மி பஞ்சாபில் கொடுத்த சில கவர்ச்சி அறிவிப்புகளான 300 யூனிட் மின்சாரம் இலவசம், உலகத் தரம் வாய்ந்த பள்ளிகள், சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதியால் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
பாரம்பரியமான காங்கிரஸ், 27 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பாஜக, தனது வாக்கு அரசியல் யுக்தியுடன் களம் இறங்கியுள்ள ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டியைச் சந்திக்கும் குஜராத்தில் பாஜக தொடருமா? இழந்த காங்கிரஸ் மீளுமா? பஞ்சாபில் ஏற்பட்டது போல் புதிய திருப்பம் ஏற்படுமா? என வாக்கு எண்ணிக்கை நாளான டிச. 8ம் தேதி தெரிந்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக