சனி, 19 நவம்பர், 2022

அமைச்சர்களுக்குள் மோதல்: கூட்டு உறவை உடைத்த கூட்டுறவுத்துறை

dinamalar.com  : மதுரை: கூட்டுறவுத்துறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ‛ரேஷன் கடை பக்கமே போகாத தியாகராஜன் திருப்தி அடையலைனா எனக்கு கவலையில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
ஒரே கட்சிக்குள் அமைச்சர்களுக்குள் இருக்கும் மோதல் கருத்துகளால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
மதுரையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவுத்துறையை கடுமையாக விமர்சித்து பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மக்களுக்கு சேவை செய்யும் துறையாக கூட்டுறவுத்துறையை மாற்ற வேண்டும்.


கூட்டுறவுத்துறையின் செயல்பாடு கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாக உள்ளது என்றாலும், தற்போதைய செயல்பாட்டு திறன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்.

கூட்டுறவுத்துறையில் தினமும் ரெய்டுகள் நடத்தப்படுவது, ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பது என பல செய்திகள் வருகின்றன. கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்படாமல் இருப்பதால் பல பிழைகள்,
தவறுகள் நடைபெறுகின்றன. நிதி அமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் எனக்கு திருப்திகரமாக இல்லை. இவ்வாறு விமர்சித்து பேசியிருந்தார்.


அதேபோல், நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரை முருகன், ‛சில கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களும், செயலாளர்களும் சேர்ந்தால் இந்தியாவையே கொள்ளையாடித்து விடுவார்கள். 90 சதவீத ஊழியர்கள் நேர்மையாக இருக்கின்றனர்.

ஒரு சில தவறுகளால், நல்ல திட்டங்களை தரும் கூட்டுறவு சங்கங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது' எனவும் பேசியிருந்தார்.
கூட்டுறவுத்துறை சார்ந்து தன் கட்சி அமைச்சர்களே குற்றம் சாட்டிய நிலையில், அத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ‛திருப்தி அடையவில்லை என மக்கள் தான் சொல்ல வேண்டுமே தவிர மற்றவர்கள் சொல்லக்கூடாது.

ரேஷன் கடையே தெரியாதவங்க திருப்தி இல்லைனு சொல்லுறதை பற்றி எனக்கு கவலை இல்லை' என பதிலளித்தார். சொந்த கட்சியிலேயே அமைச்சர்கள் இப்படி மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளது, திமுக தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக