புதன், 23 நவம்பர், 2022

சைதை சாதிக்கைவிட மோசமாக பேசினார் சூர்யா": காயத்ரி ரகுராம்

minnambalam.com -  Kalai  :  8 ஆண்டுகள் பாஜகவிற்கு உண்மையான உழைத்தேன், என்னால் களங்கம் ஏற்பட்டது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
கட்சி நடவடிக்கையை மீறி செயல்பட்டதாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராமை 6 மாத காலம் நீக்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் காயத்ரி ரகுராம் இன்று(நவம்பர் 22) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “என்னுடைய செயல்பாடுகள் அனைத்தும் தவறாகவே சித்தரிக்கப்பட்டு மேலிடத்தில் போய் சேருகிறது. இதுவரை எந்த ஒரு விளக்கமும் என்னிடம் கேட்கப்பட்டதில்லை.
என் வளர்ச்சியை சிலர் வேண்டுமென்றே தடுக்கிறார்கள், நான் முட்டி, மோதிதான் மேலே வரவேண்டும்” என்றார்.
ஆபாச ஆடியோ தொடர்பான புகாரில் சிக்கிய சூர்யா சிவாவை கண்டித்ததற்காக உங்களை கட்சியில் இருந்து நீக்கினார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த காயத்ரி ரகுராம், அரசியலைத் தாண்டி ஒரு பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசியிருக்கிறார் சூர்யா சிவா. சைதை சாதிக்கை விட மோசமாக பேசினார்.

அதுபோன்ற வார்த்தைகளை பேசியிருக்கும்போது எப்படி கொந்தளிக்காமல் இருக்கமுடியும். நிச்சயம் அதற்காக குரல் கொடுப்பேன். அது என் உரிமை.

ஒரு பெண்ணுக்கு துணை நிற்கவில்லை என்றால் நான் எப்படி ஒரு பெண்ணாக இருக்க முடியும்.

ஆனால் எதற்காக அண்ணாமலை என்னை கட்சியில் இருந்து நீக்கினார் என்பது தெரியவில்லை. தலைவர் என்ற முறையில் அவரின் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எனக்கு இது வருத்தமாகத்தான் இருக்கிறது என்றார்.

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம்.

ஆனால் என்னை யாராவது தாக்கினால் நானும் பதிலுக்குத் தாக்கும் சுபாவம் கொண்டவள். இதற்கும் கட்சியை களங்கப்படுத்திவிட்டேன் என்பதற்கும் சம்மந்தம் இல்லை.

8 வருட உழைப்பை பொய்யென்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளாக உங்களின் நிலை எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், பெப்சி சிவாவுக்கு எதிராக நான் புகார் கொடுத்தபோது என்னை பதவியில் இருந்து நீக்கினார்கள்.

2 மாதம் எந்த பதவியும் கொடுக்கவில்லை. ஆனால் அதற்காக நான் வருந்தவில்லை. உண்மையான பாஜக தொண்டன் என்பதால் கட்சிக்காக மட்டுமே உழைத்தேன்.

எனவே கட்சிக்கு என்னால் களங்கம் ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்ன ஆனாலும் பாஜகவில் தான் தொடர்வேன்.

என் மீது எந்த தவறும் இல்லை. அதனால் எனக்கு பயமுமில்லை. மேலிடத்தில் அழைத்து விளக்கம் கேட்டால் நிச்சயம் ஆரம்பம் முதல் இன்றுவரை நடந்த அனைத்தையும் சொல்வேன் என்று காயத்ரி ரகுராம் பேசினார்.

கலை.ரா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக