நக்கீரன் : “ஆட்டை மாட்டை அடிக்கிற மாதிரி அடித்து விட்டார்கள்; ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள்'' - ரூபி மனோகரன் பேட்டி
காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
ரூபி மனோகரன் முறையாகப் பதிலளிக்கும் வரை அவரைத் தற்காலிகமாக நீக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரூபி மனோகர், ''கே.ஆர்.ராமசாமி அவர்களிடம் எனக்கு கொஞ்சம் நாள் கொடுங்கள் என்று கேட்டேன்.
கொலை குற்றத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு போனால் கூட என் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க எனக்கு நாள் கொடுங்கள் என்று சொன்னால் கூட பத்து நாட்கள் கொடுப்பார்கள்.
இது எல்லா இடத்திலும் உள்ளதுதான். ஒரு விசாரணைக்கு கூப்பிடும் பொழுது நேரம் காலம் கேட்பது எல்லா இடத்திலும் உள்ளது தான்.
ஆனால் என்னை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க.
ஐ ஃபீல் வெரி பேட். பத்து, இருபது ஆண்டுகளாக நான் என் தொழிலை கூட விட்டு விட்டேன். ஓஹோன்னு இருந்த என் தொழில் எல்லாத்தையும் இந்தக் கட்சிக்காக முழுக்க முழுக்க விட்டுட்டேன்.
இங்க நிக்கிற கிராமத்து மக்கள் எல்லார்கிட்டயும் கேளுங்க நான் எப்படி வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்னு. தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். நான் தங்கபாலு கூட வேலை செய்திருக்கிறேன், அதேபோல் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட வேலை செய்திருக்கிறேன். திருநாவுக்கரசர் கூட வேலை செய்திருக்கிறேன். இப்பொழுது இருக்கும் தலைவர் கூடவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன் நான். இப்படிப்பட்ட செய்தி வந்த உடனே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மையைச் சொன்னால் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கட்சியைப் பற்றியும் தலைவர்கள் பற்றியும் நான் எந்தக் குறையும் சொல்லவில்லை. ஆனால் எனக்கு மிகப்பெரிய வருத்தம் இருக்கிறது. என்னுடைய மக்கள், என்னுடைய பிள்ளைகள் களக்காட்டிலிருந்து வந்துள்ளார்கள். சென்னைக்கு வந்தவர்களை ஆட்டை மாட்டை அடிக்கிற மாதிரி அடித்து விட்டார்கள். அதற்கு யாரிடம் விளக்கம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் கேட்க வேண்டுமே தவிர நான் என்ன செய்தேன்? வாட் மிஸ்டேக் ஐ டன். எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? காங்கிரஸ் கட்சியில் தமிழகத்திலேயே நம்பர் ஒன்னாக 35 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளார்கள் இங்கு நிற்கிறவர்கள். வேறு எந்த தொகுதியிலாவது இந்த அளவிற்கு உறுப்பினர்கள் சேர்த்தார்களா என்று கேளுங்கள்.
உயிரோட்டமாக இருக்கிறது கட்சி, நல்லா இருக்கிறது கட்சி, வளர்ந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. பெருமையாக இருக்கிறது, சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. நான் முழுக்க முழுக்க என்னுடைய நேரத்தை இந்த நாங்குநேரி தொகுதி மக்களுக்காக இன்று முதல் முழுசாக ஒப்படைக்கிறேன். எனக்கு எந்த நடவடிக்கை எடுத்தாலும் கட்சி என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவேன். என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வருத்தம் இருக்கிறது. இன்னும் இந்தக் கிராமத்தில் கட்சியை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அந்த ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள். சரி பரவாயில்லை'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக