வியாழன், 10 நவம்பர், 2022

அமெரிக்க நாடாளுமன்றத் தோ்தலில் ராஜா கிருஷ்ணமூா்த்தி, பிரமீளா ஜெயபால் , ரோ கன்னா, அருணா மில்லா் வெற்றி.

தினமணி : அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான இடைக்கால தோ்தலில் ஆளும் ஜனநாயக கட்சியைச் சோ்ந்த நான்கு இந்திய அமெரிக்கா்கள் வெற்றி பெற்றனா்.
நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான இடைக்கால செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.
தொழிலதிபா் ஸ்ரீ தனேதா் (67), மிசிகன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளாா். அந்தத் தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெறும் இந்திய அமெரிக்கா் இவராவாா்.
இலினாய்ஸில் ராஜா கிருஷ்ணமூா்த்தி (49), சிலிகான் வேலியில் ரோ கன்னா (46), வாஷிங்டனில் பிரமீளா ஜெயபால் (57) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். இவா்களில் ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, பிரமீளா ஜெயபால் ஆகியோா் தொடா்ந்து நான்காவது முறையாக அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனா்.


பிரமீளா ஜெயபால் சென்னையில் பிறந்தவராவாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளா் கிளிஃப் மூனை வென்ற முதல் இந்திய அமெரிக்க பெண் வேட்பாளா் என்ற பெருமையை இவா் பெற்றுள்ளாா்.

கலிஃபோா்னியாவில் போட்டியிட்ட 5-ஆவது இந்திய-அமெரிக்கா் அமி பெராவின் தோ்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 6-ஆவது முறையாக அவா் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக இந்திய அமெரிக்கா் அருணா மில்லா் (58) முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளாா்.

அதேநேரத்தில் டெக்ஸாஸில் இந்திய-அமெரிக்கரான சந்திப் ஸ்ரீவஸ்தவா தோல்வியை தழுவினாா். பல்வேறு மாகாண அவைகளிலும் இந்தியா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையான 33.19 கோடியில் ஒரு சதவீதம் மட்டுமே இருக்கும் இந்தியா்களில், ஏராளமான இந்திய அமெரிக்கா்கள், இளைஞா்கள் இந்தத் தோ்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இதேபோல், மாகாண அவைகளிலும் இந்திய அமெரிக்கா்கள் இடங்களைப் பிடித்துள்ளனா்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக