செவ்வாய், 29 நவம்பர், 2022

·தமிழ்நாடு அரசின் நிவாரணம் : நுவரெலியா மாவட்ட மக்களுக்கு முறையாக பகிரப்பட்டதா?

  மலையோரம் செய்திகள் ·தமிழ்நாடு அரசாங்கத்தின் நிவாரணம் : நுவரெலியா மாவட்ட மக்களுக்கு
முறையாக பகிர்ந்தளிக்கப்பட்டதா?
🛑31,350 கிலோ அரிசி மாயம்
🛑 பால்மாவும் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் எதிர்நோக்கிய உணவு, மருந்து பற்றாக்குறையினை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசாங்கத்தினால் இலங்கைக்கு மூன்று கட்டங்களில் 903 கோடி ரூபாவுக்கும் அதிகமான அத்தியாவசிய உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவை உணவு ஆணையாளர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டு மாவட்ட செயலகங்களின் ஊடாக விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிய அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளைகூட இலங்கை அரசாங்கம் முறையாக முன்னெடுக்கவில்லை. தமிழக மக்களின் உதவியுடன் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
நிவாரணங்களை பெறுவதற்கு தகுதியான பயனாளிகளின் தெரிவு, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வீட்டு வருமானம் மற்றும் செலவு கணக்கெடுப்பின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நிவாரணங்களை கையளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் 10 கிலோ அரிசி வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பிணிகள் மற்றும் 5 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு பால்மா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு பால்மா வழங்கி வைக்கப்படவில்லை. குறித்த பால்மா எங்கு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை.
நுவரெலியா மாவட்டத்துக்கு 2,244,250 கிலோ அரிசி உணவு ஆணையாளர் திணைக்களத்தால் விநியோகிக்கப்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட செயலகம் 2,212,900 கிலோ அரிசி மாத்திரமே வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் 31,350 கிலோ அரிசிக்கு என்ன நடந்ததென்பது தெரியவில்லை. 500 மெட்ரிக் தொன் பால்மா (500,000 கிலோகிராம்) வழங்கியதாக தமிழ்நாடு அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் 497,145 கிலோகிராம் பால்மாவே கிடைத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் அவற்றில் 497,088 கிலோ கிராம் மாத்திரமே நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் நுவரெலியா மாவட்டத்துக்கு விநியோகிக்கப்பட்ட 21,750 கிலோ கிராம் (62,973,427.5 ரூபா பெறுமதியானவை) பால்மாவில் பெரும்பாலானவை பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. அவற்றுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்தை பலமுறை தொடர்பு கொண்டபோதும் உரிய பதில் வழங்குவது மறுக்கப்பட்டது. பால்மா வழங்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதெனில் காலாவதி திகதி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். வழங்கப்பட்டுள்ளதெனில் வழங்கப்பட்ட முறை தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும்.
🛑 தமிழ்நாடு அரசாங்கத்தின் நிவாரணம்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு அரசாங்கத்தினால் 40 ஆயிரம் தொன் அரிசி, உயிர்காக்கக்கூடிய மருந்து பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்க 500 தொன் பால்மா ஆகிய அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக முதல்வரால் தமிழக சட்டப் பேரவையில் 29.04.2022 அன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அப்பொருட்களை வழங்க உரிய அனுமதி வழங்குமாறு 31.03.2022 அன்று டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்த போது தமிழக முதல்வர் வலியுறுத்தினார். மேலும், மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டதுடன் 15.04.2022 அன்று கடிதமும் எழுதி நினைவூட்டினார். இதனடிப்படையில் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
இதில் முதல் கட்டமாக 9200 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா, 25 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் என்பன அடங்கிய கப்பல் 18.05.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை துறைமுகத்தில் இருந்து கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 22.06.2022 அன்று 15,000 மெட்ரிக் தொன் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இரண்டாவது கப்பலையும் அடுத்த கட்டமாக 23.07.2022 ஆம் திகதி 16,595 மெட்ரிக் தொன் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மூன்றாவது கப்பலையும் தமிழ்நாடு அரசாங்கம் இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தது.
இந்நிலையில் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 102 மெட்ரிக் தொன் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் இலங்கை மக்களுக்கு இவ்வாறு மூன்று  கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்காக கப்பல் போக்குவரத்து செலவு உட்பட 196.83 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது. இத்தொகையில் 8.22 கோடி ரூபா தமிழ்நாடு  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்த பங்களிப்புகள் மூலமாகவும் எஞ்சியுள்ள 188.61 கோடி ரூபா தமிழ்நாடு அரசின் சொந்த நிதியில் இருந்தும் செலவிடப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் 25.06.2022 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சுக்கு (MD/ADM/12/01) தகவல் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன்படி அமைச்சின் தகவல் உத்தியோகத்தர், நிர்வாக அதிகாரி ஆர்.எம்.என்.எஸ்.செனெஹேலதா வழங்கிய தகவல்களின் அடிப்படையில்,
🛑 உணவு ஆணையாளர் நாயகம் வழங்கிய தகவல்
------------------------------------------------------------------------
இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக 50 கிலோ கிராம் பைகள் அடங்கிய 800,000 அரிசி பொதிகளும் 15 கிலோ கிராம் பைகள் அடங்கிய 33,134 பால்மா பொதிகளும் வழங்கப்பட்டன. நாடு முழுவதுமுள்ள 25 மாவட்டங்களுக்கும் 39,694,900 கிலோ அரிசியும் 497,085 கிலோ பால்மாவும் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக 286,350 கிலோ அரிசியும் 3 கிலோ பால்மாவும் ஏனைய தேவைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மொத்தமாக 39,981,250 கிலோ அரிசியும் 497,088 கிலோ பால்மாவும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதிகமாக கொழும்பு மாவட்டத்தில் 2,657,650 கிலோ அரிசியும் குருநாகல் மாவட்டத்தில் 48,000 கிலோ பால்மாவும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்துக்கு 2,244,250 கிலோ அரிசியும் 21,750 கிலோ பால்மாவும் வழங்கப்பட்டது. பதுளை மாவட்டத்துக்கு 2,183,050 கிலோ அரிசியும் 30,360 கிலோ பால்மாவும் கண்டி மாவட்டத்துக்கு 3,038,300 கிலோ அரிசியும் 30,750 கிலோ பால்மாவும் இரத்தினபுரி மாவட்டத்துக்கு 3,202,950 கிலோ அரிசியும் 36,750 கிலோ பால்மாவும் கேகாலை மாவட்டத்துக்கு 1,863,400 கிலோ அரிசியும் 22,500 கிலோ பால்மாவும் வழங்கப்பட்டுள்ளன. நிவாரண பொருட்களை விநியோகிப்பதற்காக லொறிகளுக்கான வாடகையாக 84,497,702.55 ரூபாவும் ரயில் பெட்டிகளுக்கு வாடகையாக 91,610,352.19 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிய 40,000 மெட்ரிக் தொன் அரிசியின் மொத்த சந்தை பெறுமதி 6,600,000,000 (660 கோடி) ரூபாவாகும். பால்மாவின் மொத்த சந்தை பெறுமதி 1,439,234,775 (143.9 கோடி) ரூபாவாகும். (06.10.2022 ஆம் திகதிய கொழும்பு மொத்த விலையின் அடிப்படையில்)
🛑 நிதி அமைச்சின் அறிவிப்பு
-----------------------------------------
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தினால் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் என்பன அன்பளிப்பு செய்யப்பட்டன. குறித்த அன்பளிப்பை தகுதியுடைய 2 மில்லியன் குடும்பங்களுக்கு பகிர்நதளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் குறைந்த வருமானம் பெறும் நபர்களின் அடிப்படையில் பயனாளிகள் தெரிவு இடம்பெற்றது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 கிலோ அரிசியும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 5 வயதுக்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஒரு கிலோ பால்மாவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனடிப்படையில் அரிசி மற்றும் பால்மா வழங்கும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் பிரதேச செயலகங்களுக்கு ஊடாக விநியோகிக்கப்பட்டது.
🛑 நுவரெலியா மாவட்ட செயலகத்தின் பதில்
-----------------------------------------------------------------
27.09.2022 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு (2022/26) தகவல் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன்படி நுவரெலியா மாவட்ட செயலகத்தின் தகவல் உத்தியோகத்தர், மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.பீ.கே.போதிமான்ன வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களில் நுவரெலியா மாவட்டத்துக்கு 10 கிலோ அடங்கிய 221,290 பொதிகளும் (2,212,900 கிலோ) 21,750 கிலோ பால்மாவும் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு 680,020 கிலோ அரிசியும் (68,002 பொதிகள்), அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு 733,050 கிலோ அரிசியும் (73,305 பொதிகள்), கொத்மலை பிரதேச செயலகத்துக்கு 299,920 கிலோ அரிசியும் (29,992 பொதிகள்), ஹங்குராங்கெத பிரதேச செயலகத்துக்கு 220,000 கிலோ அரிசியும் (22,000 பொதிகள்), வலப்பனை பிரதேச செயலகத்துக்கு 279,910 கிலோ அரிசியும் (27,991 பொதிகள்) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. பால்மா பொதிகள் நுவரெலியா பிரதேச சுகாதார வைத்திய பணிப்பாளர் அலுவலகம் ஊடாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இப்பொருட்கள் தோட்ட குடியிருப்புகள், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் பயனாளிகள் தெரிவு பிரதேச செயலகங்கள் ஊடாகவும் நுவரெலியா பிரதேச சுகாதார வைத்திய பணிப்பாளர் அலுவலகம் ஊடாகவும் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.
🛑 நிவாரணம் முறையாக பகிர்ந்தளிக்கப்பட்டதா?
------------------------------------------------------------------------
நிவாரணங்களை கப்பலில் இருந்து இறக்கி லொறிகள் மற்றும் ரயில் பெட்டிகள் மூலம் விநியோகிக்கும் செயற்பாடுகளின் போது பல கிலோ கிராம் அரிசி வீண்விரயம் செய்யப்பட்டிருந்தன. வீண்விரயம் செய்யப்பட்ட அரிசியும் பயனாளிகளின் நிவாரணத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் குடும்பமொன்றுக்கு 20 கிலோ அரிசி வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில் இறுதியில் குடும்பமொன்றுக்கு 10 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டிருந்தது. உணவு ஆணையாளர் திணைக்களத்தினால் நுவரெலியா மாவட்டத்துக்கு 2,244,250 கிலோ அரிசியும் 21,750 கிலோ பால்மாவும் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் நுவரெலியா மாவட்ட செயலகம் 2,212,900 கிலோ அரிசி மாத்திரமே வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் 31,350 கிலோ அரிசிக்கு என்ன நடந்ததென்பது தெரியவில்லை. இதனால் 3135 குடும்பங்கள் நன்மையடையும் நிலை தடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் அரிசியை விநியோகிக்கும் போது பல மூடைகள் உடைந்து வீண்விரயம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி - ஹப்புகஸ்தென்ன பொலிஸ் பகுதியிலுள்ள தோட்டமொன்றில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவிருந்த தமிழக அரசாங்கத்தின் 350 கிலோ (35 பொதிகள்) அரிசியை காணவில்லையென தோட்ட நிர்வாகத்தினால் பொலிஸில் முறையிடப்பட்டிருந்தது. இதன்படி தோட்ட தொழற்சாலையில் கடமையாற்றும் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டு 50 கிலோ அரிசி மீட்கப்பட்ட போதும் ஏனையவை மீட்கப்படவில்லை.
இதேவேளை தமிழக மக்களின் உதவியுடன் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 22.06.2022 ஆம் திகதி சனசமூக நிலையத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தோட்டத்தில் 200 குடும்பங்கள் இருந்தபோதும் வேலை செய்யும் 110 குடும்பங்களுக்கு மாத்திரம் 10 கிலோ கொண்ட அரிசி பொதி தோட்ட நிர்வாகத்தால் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் அனைத்து மக்களுக்கும் இந்த நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுமென தெரிவித்து, தோட்ட  நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 5 வயதுக்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஒரு கிலோ பால்மா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் குறித்த தகுதிகளை பூர்த்தி செய்திருந்த பெருந்தோட்ட குடும்பங்களில் பலருக்கு பால்மா வழங்கப்படவில்லை. பால்மா பொதிகள் நுவரெலியா பிரதேச சுகாதார வைத்திய பணிப்பாளர் அலுவலகம் ஊடாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டாலும் பெரும்பாலான பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அவ்வாறான விநியோகம் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை. டிக்கோயா பிரதேசத்திலுள்ள சில தோட்டங்களில் குறைந்த நிறையுடைய பிள்ளைகளுக்கு பால்மா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் அறிய முடிந்தது. அவை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதும் தகவல் வழங்குவது தவிர்க்கப்பட்டது. எனவே குறித்த பால்மாவுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான விபரங்கள் மர்மமாகவே உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பெருந்தோட்ட மக்கள் அதிகம் பாதிப்பினை எதிர்கொண்ட நிலையில் அரசாங்கம் அவர்களுக்கான நிவாரணங்களை உரிய முறையில் வழங்கவில்லை. அதேவேளை தமிழ்நாடு அரசாங்கத்தின் நிவாரணத்தையும் உரிய வகையில் பகிர்ந்தளிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக