திங்கள், 14 நவம்பர், 2022

322 கைதிகள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல்!

மின்னம்பலம் -monisha  :  அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறைக்கைதிகள் 322பேரை விடுவிக்க கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு ஓர் ஆண்டு கழித்து இப்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
திமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட நாட்களாகச் சிறையில் உள்ள கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கம். கடந்த ஆண்டு(2021) 509கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக அரசு ஆளுநரிடம் பரிந்துரைத்தது.
ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டார்.
ஆளுநர் மீதான விமர்சனங்கள்
இந்நிலையில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த 6 பேரை விடுவிக்க ஆளுநர் தாமதம் செய்ததால் நீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இதன் பிறகு ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

322 பேர் விடுதலை

இந்நிலையில், கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 509 கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக அரசு பரிந்துரைக்கு தற்போது ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அதன்படி ஆளுநர் 322கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநர் காலம் தாழ்த்தி நேற்று(நவம்பர் 13) ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்த ஒப்புதலால்… வீரப்பன் கூட்டாளிகளான ஆண்டியப்பன், பெருமாள் இருவரும் 30 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர்.

30 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள வீரப்பன் கூட்டாளிகளை விடுதலை செய்யுமாறு மனிதஉரிமை ஆர்வலர்கள் கோரி வந்தனர். சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று ஆண்டியப்பன், பெருமாள் இருவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு திமுக அரசு பரிந்துரைத்தது.

187கைதிகளை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.

மோனிஷா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக