சனி, 5 நவம்பர், 2022

கோவை சிக்கிய பென் டிரைவ்... 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். ஆதரவு வீடியோக்களை ஆய்வு செய்யும் போலீஸ்

மாலை மலர் :   கோவை:  கடந்த 2019-ம் ஆண்டில் இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களுடன் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக கோவையில் சிலரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அப்போது விசாரணை மேற்கொண்டனர். அதில் முபினும் ஒருவர். மேலும் 2 பேரை கைதும் செய்தனர். மற்றவர்களிடம் விசாரணை நடத்தி விட்டு அவர்களை விட்டுவிட்டனர். இருப்பினும் அவர்களின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி கோவை கோட்டைமேட்டில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்ட முபின் திட்டமிட்டு தனது கூட்டாளிகளுடன் இந்த தாக்குதலை நடத்தியதும், அவர் அதில் இறந்து விட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் இறந்த முபின் மற்றும் அவரது கூட்டாளிகளான முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகியோரது வீடுகளில் அதிடி சோதனை மேற்கொண்டனர்.

இறந்த முபினின் வீட்டில் இருந்து வெடி பொருட்கள், ஐ.எஸ். இயக்க வாசங்கள் அடங்கிய குறிப்புகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மூலம் முபின் ஐ.எஸ். இயக்க ஆதரவாளராக இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதேபோல் கோவை மாநகரில் ஏற்கனவே என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டவர்களின் வீடு, பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் சந்தேகத்தின்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது குனியமுத்தூரில் ஏற்கனவே என்.ஐ.ஏவால் விசாரிக்கப்பட்டவரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் போலீசாருக்கு ஒரு பென்டிரைவ் கிடைத்தது.

அந்த பென் டிரைவில், 100க்கும் மேற்பட்ட ஐ.எஸ். இயக்கத்தின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. ஐ.எஸ். இயக்கத்தினர் மிக கொடூரமாக சிலரை கழுத்தை அறுத்து கொல்லும் காட்சிகளும் அதில் இடம் பெற்று இருந்தன.

ஐ.எஸ். இயக்கத்தின் பிரசார வீடியோக்கள், அவர்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த வீடியோக்களும் இருந்துள்ளன.

இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளியான ஷக்ரான் ஹசீம் பேசிய வீடியோக்கள், 2019-ம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த தேவலாய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விளக்கங்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சுகள் போன்ற வீடியோக்களும் அதிகளவில் இருந்தன. இது தொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் கடந்த 2015-ம் ஆண்டு தான் ஐ.எஸ் இயக்க கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அதில் இருந்து விடுபட்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏனென்றால் ஏற்கனவே என்.ஐ.ஏ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட முபின் அமைதியாக இருந்ததும், தற்போது கார் வெடிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் தொடர்ந்து அவரையும் போலீசார் கண்காணிக்கின்றனர்.

பென்டிரைவை கைப்பற்றியுள்ள போலீசார் அந்த வீடியோக்கள் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களை காவலில் எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கைதான 6 பேரையும் கோவை மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றவும் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக