ஞாயிறு, 2 அக்டோபர், 2022

மல்லிகார்ஜுன கார்கே Vs சசி தரூர் - யாருக்கு வெற்றி வாய்ப்பு? (மல்லிகார்ஜுன கார்கே?)

hindutamil.in : புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே - சசி தரூருக்கு இடையே வரும் 17-ம் தேதி நேரடி போட்டி நடக்கிறது. இதில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைமை, காந்தி குடும்பத்தின் கைகளிலேயே உள்ளது. இதையே புகாராக எழுப்பும் பாஜக.வை சமாளிக்க, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகி நிற்க காந்தி குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தேசியத் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், அவர் போட்டியிடுவார், இவர் போட்டியிடுவார் என்று தினமும் செய்திகள் வெளியாயின. இது நாடு முழுவதிலும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அத்துடன் கட்சித் தலைமையும் கடும் விமர்சனங்களில் சிக்கியது.
கட்சி தலைமைக்கு 5-வது முறையாக நடக்கும் தேர்தலில், முதல் நபராக திருவனந்தபுரம் மக்களவை தொகுதி எம்.பி. சசி தரூர் போட்டியிட முன்வந்தார். இதையடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பலரது பெயர்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சித் தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இவருடன் ஜார்க்கண்ட் மூத்த காங்கிரஸ் தலைவர் கே.என்.திரிபாதியும் மனு தாக்கல் செய்தார். திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், கார்கே - சசி தரூர் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? காந்தி குடும்பத்தின் ஆதரவு பெற்றவர் யார்? வாக்களிக்க உள்ள காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு யாருக்கு போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தன்னை விட கல்வியில் சிறந்தவராக தரூர் இருந்தாலும், அவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸில் இணைந்தவர் கார்கே. தற்போது 80 வயதாகும் கார்கே, சொந்த மாநிலமான கர்நாடகாவில் சேட் சங்கர் லஹோத்தி சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். 66 வயது தரூர், டெல்லியின் பிரபல செயின்ட் ஸ்டீபனில் உயர்க்கல்விக்கு பின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கர்நாடகாவில் 1969-ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் கார்கே. ஐ.நா. வெளியுறவுத் துறை நிபுணரான தரூர், 2009-ல்தான் அரசியலில் நுழைந்து காங்கிரஸில் இணைந்தார்.

அப்போது முதல் சசி தரூர் தொடர்ந்து 3-வது முறையாக திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக பதவி வகிக்கிறார். தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கத் தொடங்கிய கார்கே, 2004-ல் மக்களவை எம்.பி.யானார். சசி தரூரை விட அரசியல் மற்றும் அரசு நிர்வாகங்களில் மல்லிகார்ஜுன கார்கேவின் அனுபவம் அதிகம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (யுபிஏ) 2-வது ஆட்சியில் தொழிலாளர் நலன் மற்றும் ரயில்வே என 2 துறைகளில் மத்திய அமைச்சராக இருந்தவர் கார்கே. இதற்கும் முன்பாக கர்நாடகாவில் 6 முறை அமைச்சர் பதவிகளை வகித்தவர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரானவர். கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து கார்கே நேற்று விலகி உள்ளார்.

யுபிஏ.வின் 2-வது ஆட்சியில் ஒரு குறுகிய கால கட்டத்துக்காக மத்திய வெளியுறவுத் துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக மட்டுமே இருந்தவர் சசி தரூர். எனினும், இவருக்கு 1978 முதல் 2007 வரை ஐ.நா. வெளியுறவுத் துறையின் நிர்வாகத்தில் ஆழமான அனுபவம் உள்ளது.

அரசியலில் காங்கிரஸின் அடிமட்ட தொண்டராகக் கருதப்படும் கார்கே, 1972 முதல் கர்நாடகாவில் 9 முறை எம்எல்ஏ.வாக இருந்தவர். 2 முறை மக்களவை எம்.பி.யாகவும் இருந்தவர். இவர், கர்நாடக காங்கிரஸ் தலைவராகவும் 2005 முதல் 2008 வரை பதவி வகித்துள்ளார். இக்கால கட்டத்தில் காங்கிரஸுக்கு பெரும் வெற்றி கிடைத்திருந்தது. அதேநேரத்தில் மூன்றாவது முறையாக எம்.பி. தேர்தலில் போட்டியிட்ட சசிதரூர், பிரதமர் மோடி அலையை மீறி வெற்றி பெற்றுள்ளார். ட்விட்டரில் பின்பற்றுவோரின் எண்ணிக்கையில் பிரதமர் மோடி 2013-ம் ஆண்டு முதலிடம் பிடிக்கும் வரை, அதிகம் பேர் சசி தரூரை பின் தொடர்பவர்களாக இருந்தனர். ஆனால், கார்கேவுக்கு இன்று வரை ஒரு லட்சம் பேர் கூட இல்லை.

இவை அனைத்தையும் விட முக்கியமாக, காங்கிரஸ் தலைமையை எதிர்த்து முதல் முறையாக கொடி தூக்கிய ஜி-23 தலைவர்களில் ஒருவராக சசி தரூர் இருந்தவர். எனினும், ஜி-23-யின் பெரும்பாலான முக்கியத் தலைவர்கள் கார்கேவுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் கட்சித் தலைமையில் மாற்றத்தை விரும்பியவர்கள். காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக பல போராட்டங்களில் முன்னணி வகித்தவர் கார்கே. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் கார்கே வேட்பு மனு தாக்கல் செய்த போது காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான முக்கியத் தலைவர்கள் பலர் உடன் இருந்தனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பதவிக்கு கடந்த 1999, 2004 என 2 முறை கார்கே முன்னணி போட்டியாளராக இருந்தார். எனினும், அவரை முதல்வராக்கவில்லை. தற்போது, தலித் சமூகத்தினருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கார்கேவுக்கு கிடைத்துள்ளது. இவர் வெற்றி பெற்றால் ஜெகஜீவன் ராமிற்கு பிறகு காங்கிரஸ் தலைவராகும் 2-வது தலித் தலைவராக கார்கே இருப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக