திங்கள், 24 அக்டோபர், 2022

சமணர்களின் தீப ஒளியும் இந்துக்களின் தீபாவளியும்

 keetru.com :  சமணர்களின் தீப ஒளியும் இந்துக்களின் தீபாவளியும்
எழில்.இளங்கோவன்
புத்தரின் சமகாலத்தில் வாழ்ந்தவர் வர்த்தமான மகாவீரர். 25ஆம் தீர்த்தங்காரர் என்று இவரைச் சொல்வார்கள். இவரால் தொடங்கப் பட்ட சமயம் - சமணம். ஜைனமதம் என்று இன்று மாறிவிட்டது.
சமணமும் பவுத்தமும் ஆரியத்தை மிகக் கடுமையாக எதிர்த்தன. ஆரியத்தால் தாக்குபிடிக்க முடியவில்லை.
சமணம் மக்களைக் கல்வி அறிவுடையவர் களாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சமணத் துறவிகள் தாம் தங்கியிருக்கும் இடங்களில், கல்வியைச் சொல்லிக் கொடுத்தார் கள். ஒரு படிமேலேயே சென்ற பவுத்தம், மக்களுக்குக் கல்விமட்டும் போதாது, பகுத்தறிவும் சுயசிந்தனையும் பெற வேண்டும் என்று, அவர்கள் தங்கி இருக்கும் இடங்களில் கல்வி கற்பித்தார்கள்.


பவுத்த சமணத் துறவிகள் தங்கும் இடங்களை “ பள்ளி ” என்று அழைக்கப்பட்டன. அங்கு கல்வி சொல்லிக் கொடுக்கப்பட்டதால் அப்பள்ளி பின்னாளில் பள்ளிக் கூடம் என்று அழைக்கப் பட்டது.

இதைக் கூடப் பொறுக்க முடியாத பாரதியார் பள்ளித் தலம் அனைத்தும் (மாற்றி) கோயில் செய்குவோம் என்று பாடியதை நாம் அறிவோம்.

இப்படி மக்களை அறியாமையில் தள்ளும் ஆரியத்திற்கு எதிராக பவுத்த சமணம் களம் இறங்கியது.

அந்த நாளில் ஒரு சமணப் பள்ளியில் ஒரு சமணத் துறவி, குழந்தைகள் பெயரிவர்களுக்கு அறிவுக் கல்வியை கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அவர் முதுமை வயது உடையவர். இரவு பாடங்களை முடித்துவிட்டுத் தூங்கியவர் அப்படியே இறந்துவிடுகிறார்.

அந்த சமணத் துறவி இறந்து போன செய்தி அறிந்து மக்கள் கூடினார்கள். பெரும்பாலும் அப்போதைய சமணத் துறவிகள் குகைகளில் தங்குபவர்கள். இறந்து போன இந்தத் துறவியும் குகையில்தான் மக்களுக்குக் கல்வி புகட்டிவிட்டு அங்கேயே இறந்துவிடுகிறார்.

குகை என்றால் உள்ளே இருள் சூழ்ந்து இருக்கும். அதனால் வெளிச்சம் பரவலாக வேண்டும் என்பதற்காக அங்கு சிறுசிறு விளக்குகள் வைக்கப்பட்டன.

அறிவு ஒளியைக் கொடுத்த சமணத்துறவிக்கு, இந்த “ தீப ஒளியைச் ” சமர்ப்பிக்கின்றோம் என்றார்கள் மக்கள்.

இதுதான் தீப ஒளி - சமணத்தில் உருவாகியது.

இதைக் கண்ட ஆரியம் அறிவுக்கு ஒளி கொடுப்பதா என்று  ஒரு சூழ்ச்சி செய்தது.

அந்த சூழ்ச்சியின் வடிவமே நரகாசுரன் வதம், தீபாவளி என்ற இந்துப் பண்டிகை.

சமணர்களின் தீபஒளி வரலாற்று நிகழ்வு. இந்துத்துவாவின் தீபாவளி ஒரு புராண பித்தலாட்ட நாடகம், கதை! திராவிடர்களின் பண்பாட்டின் மேல் ஆரியப் பண்பாட்டைத் திணிக்கும் போராட்டம் இது.

தீபாவளி நாளில் காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துப் பல்சுவை உணவு வகைகளை உண்டு, புத்தாடை அணிந்து மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.

மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பது மகிழத்தக்கச் செய்தி. அவர்களின் மகிழ்ச்சிக்கு உரிய  தீபாவளி பண்டிகை மகிழ்ச்சிக்கு உரியதா, ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன?

பிராக்சோதிடபுரி என்றொரு நாடு இருந்தது. அந்த நாட்டை ஆண்ட மன்னன் நரகாசுரன். இவன் மக்களைத் துன்புறுத்தி ஆட்சி நடத்தி இருக்கிறான். இதனைக் கண்ட கிருஷ்ணன் நரகாசுரனைக் கொல்லத் திட்டமிடுகிறான். அதற்காக கிருஷ்ணன் திட்டமிட்ட நேரம் வந்தது. ஐப்பசி மாதம், கிருஷ்ணபக்சம் திரலோசிதி இரவில், சதுர்த்தி சம்பந்தம் அடைகையில் அதாவது சதுர்த்தி நேரத்தில் கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்து கொன்று விடுகிறான். அந்தநாள் தீபாவளியாக மாறுகிறது.

இதுதான் தீபாவளியின் கதை. இது எந்தப் புராணத்தில் இருக்கின்ற கதை என்பது புரியவில்லை. ஆனால் இது புராண ஐதீகக் கதை என்று பார்ப்பனியம் சொல்கிறது. இங்கே கதை என்று சொன்னதை  கவனிக்க வேண்டும்.

பண்டைய கால இந்திய வரலாற்றில் பிராக்சோதிடபுரி என்ற ஒரு நாடு இருந்ததாக சுவடுகூட இல்லை. நரகாசுரன் என்ற மன்னன் இருந்தான் அல்லது அந்நாட்டை ஆண்டான் என்பதற்கும் சான்று எதுவும் இல்லை.

ஆகவே பொய்யாகப் புனையப்பட்ட ஒரு கதையை, உண்மைபோல ஆக்கி, அதை திணித்து, இது இந்துக்களின் பண்டிகை என்று மக்களைப் பார்ப்பனியத்திற்கு அடிமையாக்கிவிட்டார்கள் பார்ப்பனர்கள்.

தவறே செய்திருந்தாலும் கூட அவனைத் தண்டிக்கக் கூடாது, மன்னிக்க வேண்டும், திருத்த வேண்டும், மனிதனாக மாற்ற வேண்டும், கொலை செய்யக் கூடாது என்கிறார்கள் புத்தர், இயேசு கிருத்து, நபிகள் நாயகம் போன்றவர்கள்.

இயேசு, நபிகள் நாயகம ஆகியவர்கள் மதம் சார்ந்தவர்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், மனித நேயத்தை அவர்கள் பெரிதும் மதித்தார்கள். மதத்தை ஏற்க மறுத்த புத்தர் கொலை செய்வதை எதிர்த்துக் கடுமையாகப் போராடியிருக்கிறார்.

ஆனால் இந்து மதம் அப்படியல்ல, அது, மனித நேயத்தை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டது. கொலை செய்வது மட்டுமல்ல, கொலை செய்யப்பட்ட நாளைக் கொண்டாடவும் செய்து விடுகிறார்கள் - கேட்டால் இந்துப் பண்டிகை என்று சொல்லி மக்கள் மனங்களை மாயப்படுத்தி விடுகிறார்கள்.

கொலை என்பதற்கு இந்துத்துவா கொடுக்கும் இன்னொரு பெயர், வதம்.

இரணியன் கொலைக்கு, இரணிய வதம், பத்மாசுரன் கொலைக்குப் பத்மாசுர வதம், நரகாசுரன் கொலைக்கு நரகாசுர வதம் என்ற வரிசை நீளுவதைப் பார்க்கலாம்.

ஆரியர்களின் தொடக்கமே திராவிடர் களுக்கு எதிரான போராட்டம் என்பதை இருக்வேதம் உறுதிசெய்கிறது. திராவிடர்களை தஸ்யூக்கள் என்று இருக்கு வேதம் சொல்கிறது.

திராவிடர்களின் வாழ்விடங்களை அழிக்க வேண்டும், தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர்நிலை களை அழிக்க வேண்டும், கால்நடைகள் உற்பத்திப் பொருள்களைக் கைப்பற்ற வேண்டும், சூறையாட வேண்டும், திராவிடர்களை அழிக்க வேண்டும் என்பதுதானே இருக்கு வேதத்தின் அடிப்படை.

தருமம் என்ற ஒன்றைக் காப்பதற்காகச் சொந்த உறவுகளைக் கூடக் கொல்லச் சொன்ன வன்தானே கிருஷ்ணன். அதுதானே கீதை !

அதே கிருஷ்ணன் மூலம் நரகாசுரனைக் கொன்று இன்று தீபாவளியைக் கொண்டு வந்து விட்டது பார்ப்பனியம்.

அதனால்தான் தந்தை பெரியார் தீபாவளியைக் கண்டித்தார். தீபாவளியைக் கொண்டாடுவது ஆரியர்களிடம் இருந்து சூத்திரத் தன்மையை ஏற்றுக்கொள்வதற்குச் சமம் என்றார்.

தீபாவளி - ராமநவமி - கிருஷ்ண ஜெயந்தி - வினாயக சதுர்த்தி இப்படியயல்லாம் பலப்பல பார்ப்பனியக் கதை நிகழ்வுகளை புராணம் என்ற பெயரால், தமிழர்களின் மேல் திணித்துத் தமிழர்களின் பண்பாட்டின் மேல் ஆரியர்கள் நடத்தும் மறைமுகப் போர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.

பண்டிகைகள் என்பதே மூடநம்பிக்கையைத் திணித்து பகுத்தறிவை, சுயசிந்தனையை சுய மரியாதையை மழுங்கடிக்கும் முயற்சி அல்லது நடவடிக்கை.

தீபாவளி பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் இல்லை. அது மிகப் பிற் காலத்தில் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டு மக்களிடையே திணிக்கப்பட்டது.

தமிழர்களின் ஒரே திருநாள் தைத்திருநாள். தைப்புத்தாண்டு நாள். தைப் பொங்கல் நாள் ! - தீபாவளிப் பண்டிகை அல்ல !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக