திங்கள், 10 அக்டோபர், 2022

கோவை அரசுப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வீடியோ.. போலீசார் வழக்கு பதிவு

tamil.oneindia.com -  Yogeshwaran Moorthi    : கோவை: கோவையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடைபெற்ற விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் உள்ள தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி நடப்பதாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
இதுமட்டுமல்லாமல் மொத்தமாக 18 பேர் ஆர்எஸ்எஸ் உடை அணிந்து பயிற்சி வகுப்பில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பரவிய நிலையில், மாநகராட்சி பள்ளியில் பயிற்சி நடத்த அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் இன்று பள்ளியை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் தரப்பில், கோவை மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடைபெறுவது குறித்து உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், மாநகராட்சி பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த விவகாரம் குறித்து மாநகராட்சி சார்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் அரசுப் பள்ளியில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக