திங்கள், 31 அக்டோபர், 2022

Morbi bridge விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை! ராகுல் காந்தி

nakkheeran.in  : குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள மோர்பி என்ற இடத்தில் மச்சு ஆற்றுக்கு மேல் தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த தொங்கு பாலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 230மீ நீளமுடைய இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு 140 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகப் பாலத்தின் கேபிள்கள் சரி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும்,
4 நாட்களுக்கு முன்புதான்  இந்தப் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில், 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அந்தப் பாலத்தின் மீது குவிந்தனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்த சமயத்தில், பாலத்தில் இருந்த மக்கள் உற்சாகத்தில் ஓடி விளையாடியுள்ளனர். இதனால், அந்த தொங்கு பாலமும் ஆடத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், என்ன செய்வது என யோசிப்பதற்குள் அவர்களின் எடையைத் தாங்க முடியாத மோர்பி தொங்கு பாலம் திடீரென அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது.

அதன் பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த தேசியப் பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநிலப் பேரிடர் மீட்புப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கர விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். தற்போது இந்த விபத்து குறித்துப் பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பாலத்திற்கான தகுதிச் சான்றிதழை மாநகராட்சி வழங்காமலேயே பாலம் திறக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய ராகுல் காந்தி “இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அவ்வாறு முயன்றால் இறந்தவர்களை அவமானப்படுத்துவது போல இருக்கும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக