வியாழன், 27 அக்டோபர், 2022

ராஜபக்‌ஷர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

.tamilmirror.lk : முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்து, நாட்டை விட்டு ஓடிப் போய், தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்து, மூன்றரை மாதங்களாகப் போகின்றது.
கோட்டாவுக்கு முதலே மஹிந்த, பசில், சமல், நாமல், சசீந்திர என மற்றைய ராஜபக்‌ஷர்களும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர்.
கோட்டா நாட்டை விட்டு ஓடியதிலிருந்தே, பொதுவௌியில் பெருமளவுக்கு அமைதிகாத்த ராஜபக்‌ஷர்கள் தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் கூட்டங்களை நடத்தி, தமது இருப்பைத் தக்க வைப்பதற்கான அடுத்தகட்ட காய்நகர்த்தலுக்காக களநிலைவரத்தை பரிசீலித்து வருகிறார்கள். இந்தக் கூட்டங்களுக்கு, அவர்கள் வைத்துள்ள பெயர் ‘எக்வ நகிட்டிமு’ (ஒன்றாக எழுவோம்) என்பதாகும்.


இந்தப் பெயர் எதைச் சொல்கிறதோ இல்லையோ, ஒன்றை மிகத்தௌிவாகவே சுட்டிக்காட்டுகிறது.
தாம் வீழ்ந்ததை, ராஜபக்‌ஷர்கள் மறைமுகமாகவேனும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். விழுந்தவர்கள்தானே எழ வேண்டும். அதனால் தான் ‘ஒன்றாக எழுவோம்’ என்ற பெயரில் கூட்டம் நடத்துகிறார்கள்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டபின்னர், தமக்கு இனி வீழ்ச்சியே இல்லை என்று நினைத்திருந்த ராஜபக்‌ஷர்களுக்கு, 2015 இல் இலங்கை மக்கள் கொடுத்தது முதல் அதிர்ச்சி. ஆனால் 2019இல் அதிலிருந்து ராஜபக்‌ஷர்கள் மீண்டு விட்டார்கள். அவர்கள் வளர்த்தெடுத்த பேரினவாதமும் 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களும், ராஜபக்‌ஷர்களின் மீட்சிக்கு வழிவகுத்தன.

ஆனால், பெரும் பலத்தோடு பதவிக்கு வந்த ராஜபக்‌ஷர்களுக்கு, 2022இல் இலங்கை மக்கள் கொடுத்ததுதான் பேரதிர்ச்சி. மக்கள் எழுச்சிக்கு பயந்து ஓடி ஒளிய வேண்டிய நிர்ப்பந்தம், ராஜபக்‌ஷர்களுக்கு ஏற்பட்டமையானது, ராஜபக்‌ஷர்கள் கனவிலும் கண்டிராத ஒன்று!

ராஜபக்‌ஷர்களுக்கு ஏன் இந்த நிலைமை வந்தது என்பதற்கான அரசியல், சமூகக் காரணங்கள் பரவலாக ஆராயப்பட்டுவிட்டன.

ஆனால், ராஜபக்‌ஷர்களின் வீழ்ச்சிக்கு, அவர்களது குடும்பத்துக்குள் இடம்பெறும் பனிப்போரும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. ராஜபக்‌ஷர்களின் பலமும் அவர்களது குடும்பம்தான்; பலவீனமும் அதுதான்.

ராஜபக்‌ஷர்களின் அரசியல் தலைமகனான மஹிந்த ராஜபக்‌ஷவின் 2005 – 2015 வரையான ஆட்சிக்காலத்தைப் பொறுத்தவரையிலும், ஆரம்பத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ எனும் அரசியலில் பழுத்த அனுபவம் மிக்கதொரு தலைமை, ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் இருந்தது.

யார் என்ன செய்ய நினைத்தாலும், அநேகமான விடயங்களில் மஹிந்தவின் முடிவே, கடைசி முடிவாக இருந்தது.

காலப்போக்கில், குறிப்பாக 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்குப் பின்னர், பசில், கோட்டா, நாமல் மற்றும் அவரது சகோதரர்கள், ஷிரந்தி என ஆளாளுக்கு தமக்கு வேண்டியவற்றைச் செய்ய முனைய, அவர்கள் இழுத்த இழுவைக்கெல்லாம் இழுபட அல்லது, அவர்களை தமது இஷ்டத்துக்கு ஆடவிட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டியதொரு நிலை மஹிந்தவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படத்தொடங்கியது.

இதற்குக் காரணம், மஹிந்தவின் ஜனாதிபதியான இரண்டாவது பதவிக்காலம் என்பது, அவரது கடைசிப் பதவிக்காலமும் கூட! அடுத்த ஜனாதிபதி யாரென்று முறுகலுக்கான முஸ்தீபுகள் அன்றே தொடங்கியிருந்தன.

ஆனால், அன்று மஹிந்த இன்றுள்ளதை விட மேம்பட்ட உடல் மற்றும் உள ஆரோக்கியத்தோடு இருந்தார். அரசியல் திமிரும் பெருமளவு இருந்தது.

தன்னை மீறி அடுத்த ஜனாதிபதியாக எந்த ராஜபக்‌ஷ வருவது என்ற போட்டியை தவிர்க்க, மிகுந்த சர்ச்சைக்குரிய வகையில் அரசியலமைப்புக்கான 18ஆம் திருத்தத்தைக் கொண்டு வந்து, ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற மட்டுப்பாட்டை இல்லாதொழித்து, 2015 ஜனாதிபதி தேர்தலில் தானே போட்டியிட்டார்.

2010 போலவே, தேர்தலில் வென்றுவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கை மஹிந்தவுக்கு இருந்தது. அரசியல் திமிரின் விளைவு அது.

2015 ஜனவரி எட்டாம் திகதி அவர் சந்தித்த தோல்வி, மஹிந்தவை மனரீதியில் மிகுந்த பலவீனப்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அங்கு பெருவெற்றி ஈட்டியிருந்தாலும், அவர் அரசியல் முன்னரங்கிலிருந்து ஒதுங்கியே இருந்தார். கிட்டத்தட்ட ஒன்று, ஒன்றரை ஆண்டுகள் அளவிற்கு அவர் ஒருவகை அஞ்ஞாதவாசத்திலேயே இருந்தார்.

அவருடைய கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மைத்திரிபால சிரிசேனவிடம் போயிருந்தது; கூட இருந்தவர்களில் பலரும் போயிருந்தார்கள். 2016 நவம்பரில் ‘ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன’ என்ற பெயரில், பசில் ராஜபக்‌ஷவின் இயக்கத்தில், ராஜபக்‌ஷ அணியினர் புதிய கட்சியை ஆரம்பித்த போதுகூட, அதற்குத் தலைமை வழங்க மஹிந்த வரவில்லை.

அதிகாரத்தின் நிரந்தரமற்ற தன்மை மஹிந்தவுக்குப் புரிந்தகாலம் அது.
ஆனால், மஹிந்த தோற்ற பின்னர், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம், தகுந்த தலைமையின்றி வெற்றிடமாகவே இருந்தது.

அதாவது, இந்நாட்டின் பெரும்பான்மை வாக்கு வங்கியின் தலைமை வெற்றிடமாக இருந்தது. அந்த இடத்தை, தாமே நிரப்புவோம் என்று பலர் ‘பகற்கனவு’ கண்டுகொண்டிருந்தார்கள். அதற்காக பேரினவாத வெறியை பரப்பவும் தொடங்கினார்கள்.

அன்றைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்துக்கு எதிரான திட்டமிட்ட பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது எல்லாம், மஹிந்தவுக்கு எதிராக, மைத்திரிக்கு வாக்களித்த மஹிந்தவின் முன்னாள் வாக்காளர்களுக்கு, ஒரு கழிவிரக்க மனநிலையைத் தோற்றுவித்தது.

‘மைத்திரிக்கு வாக்களித்து, நாம் தவறிழைத்துவிட்டோமோ’ என்று எண்ணி வருந்தும் மனநிலையை, ‘நல்லாட்சி’ அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரம் தோற்றுவித்திருந்தது. மைத்திரி-ரணில் முரண்பாடுகள், இந்த மனநிலைக்கு இன்னும் உரமூட்டின.

‘சிங்கள-பௌத்த’ பேரினவாத வாக்குவங்கி, மீண்டும் ராஜபக்‌ஷ யுகம் வேண்டும் என யோசிக்கத் தொடங்கிய போதுதான், ரணிலுடனான தனது முரண்பாட்டுக்கு மஹிந்தவை பகடைக்காயாக மைத்திரி பயன்படுத்தினார்.

2018 டிசெம்பரில், அரசியலமைப்புக்கு முரணான வகையில், மஹிந்தவை பிரதமராக மைத்திரி நியமித்தார்.

இப்படி ஒரு வௌிப்படையான அரசியலமைப்பு விரோத செயற்பாட்டுக்கு மஹிந்த ஏன் உடன்பட்டார் என்பது அவருக்கு மட்டும்தான் வௌிச்சம். அதுவரைகாலமும்,‘நல்லாட்சி’ அரசாங்கத்துக்கு எதிரான திட்டமிட்ட பிரசாரங்களால், சிங்கள-பௌத்த’ பேரினவாத வாக்குவங்கியிடம் ஏறுமுகத்திலிருந்த ராஜபக்‌ஷர்களின் பெயர், 52 நாள் சட்ட விரோத அரசாங்கம் அமைத்ததில் மீண்டும் சரிந்துபோனது. அதிலும் குறிப்பாக மஹிந்தவின் பெயர், முற்றாகச் சிதைந்து போனது.

அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றால், பெயர் கெடாமல் என்ன செய்யும்? இது ஏன் மஹிந்தவுக்கப் புரியவில்லை? இதை மீறி, மைத்திரியின் ஆட்டத்தில் மஹிந்த, தன்னை பகடைக்காயாக்கியது ஏன்? இவையெல்லாம் சுவாரஸ்யமான அரசியல் கேள்விகள். காலம் இதற்கு ஒருநாள் பதிலளிக்கலாம்.

ஆனால், ஒன்று நிச்சயம். இந்த இடத்தில்தான் மஹிந்தவை தாண்டிய இன்னொரு ராஜபக்‌ஷ தலைமையின் தேவை, ராஜபக்‌ஷ ஆதரவு அரசியல்வாதிகளால் உணரப்பட்டது. இந்த நிலையில், ‘ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன’ என்ற புதிய கட்சியை வைத்து, 2018 உள்ளூராட்சித் தேர்தல்களில் ஏறத்தாழ 40% வாக்குகளைப் பெற்று, ஒரு சாதனையையே பசில் ராஜபக்‌ஷ நிகழ்த்திக் காட்டியிருந்தார்.

ஆகவே, பசிலிடம் கட்சி எனும் பலம் இருந்தது. ஆனால், பொதுமக்களிடம் பசில் என்ற தனிநபருக்கு ஆதரவு பெரிதாக இருக்கிறது என்ற எவராலும் அடித்துச் சொல்லிவிட முடியாது. ‘மிஸ்டர் 10 பேசண்ட்’ என்பது பசிலுக்கு வழங்கப்பட்ட பிரபலமான பட்டப்பெயராகவே இருந்தது.

ஆகவே, கட்சியின் அமைப்பாளராக, பசில் வெற்றிகரமாகச் செயற்பட்டாலும், மஹிந்தவுக்கு அடுத்ததாக தலைமைக்கு, பசிலை முன்னிறுத்துவதில் பல ராஜபக்‌ஷ விசுவாசிகளுக்கும் தயக்கம் இருந்தது.

நாமல் கத்துக்குட்டி; அதுபோலவே, 2005-2015 காலப்பகுதியில் நாமல் மற்றும் அவரது சகோதரர்களின் பெயர் பிரபல்யம் இழந்துபோயிருந்தது. சமல், சசீந்திர ஆகியோருக்கு நாடளாவிய பிரபல்யம் கிடையாது.

ஆகவே, இந்த நிலையில்தான், சிங்கள-பௌத்த பேரினவாதிகளான, அதேவேளை மஹிந்தவின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்பட முடியாதவர்கள் சிலர், இன்னொரு ராஜபக்‌ஷவை பல்லக்கில் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

இதற்குப் பின்னால் சிங்கள-பௌத்த மக்களிடையே பிரபல்யமான ஊடகங்களின் பிரசார பலமும் சேர்ந்துகொண்டது. மஹிந்தவுக்கே அதிர்ச்சியளிக்கும் வகையில், மஹிந்தவை மீறி இன்னொரு ராஜபக்‌ஷ முன்னிலைக்கு கொண்டுவரப்பட்டார்.

-என்.கே அஷோக்பரன்–

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக