வியாழன், 20 அக்டோபர், 2022

புதிய விமான நிலையம் நமக்கு ஏன் தேவை? : புள்ளி விவரத்துடன் பேரவையில் விளக்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

கலைஞர் செய்திகள்  : 10 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது என பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் அவை நடவடிக்கையில் மறைந்த உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மீண்டும் 2வது நாள் சட்டப்பேரவை நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 3வது நாள் சட்டப்பேரவை கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாகப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு கொண்டுவந்தார்.

அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை விமான நிலையம் நாட்டிலேயே 3ம் இடத்திலிருந்தது, தற்போது பயணிகளை கையாளுவதில் 5ம் இடத்தில் உள்ளது. சரக்குகளைக் கையாளும் திறனில் சென்னை விமான நிலையம் 7% வளர்ச்சி பெற்றுள்ளது. அண்டை மாநிலங்களில் புதிய விமான நிலையம் இருப்பதால் தான் வளர்ச்சி பெற்று வருகின்றன. 30 ஆண்டுக்கான தேவையை இப்போது நாம் கட்டமைக்க வேண்டியது அவசியம்.

10 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது. தற்போது உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதால் புதிய விமான நிலையம் அமைப்பது அவசியம். புதிய விமான நிலையம் அமைப்பதால் புதிய வழித்தடங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

புதிய விமான நிலையத்திற்காக 11 இடங்களை ஆய்வு செய்த பிறகே பரிந்துரை தேர்வு செய்தோம். பரந்தூரில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு சூழலைக் கருத்தில் கொண்டே அங்கு புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற 13 கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 13 கிராம மக்களின் கருத்துக்கள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக