சனி, 22 அக்டோபர், 2022

ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!- சாதித்த தி மு க அரசு! செயல்படுத்தியது எப்படி?

tamil.oneindia.com   - Kadar Karay  : சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பே 'நாங்கள் சொன்னதையும் செய்வோம்; சொல்லாததையும் செய்வோம்' என்றார். அதன் அடையாளமாக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை வழங்கி சர்ப்ரைஸ் தந்துள்ளார்.
15,691 நிறுவனங்கள்; 99,989 பேருக்குப் பணி
திமுகவின் கடந்த 15 மாதகால ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள 65 பெரிய கல்லூரிகளில் 882 வேலைவாய்ப்பு முகாம்கள் இதுவரையில் நடைபெற்றுள்ளன. இதுதவிர, தனியாக 817 வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.
'இதுவரை 15,691 நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் 99,989 பேருக்குப் பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுவிட்டன' என்று முன்பே முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன் அடுத்தகட்ட பாய்ச்சலாக அண்மையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு 1 லட்சமாவது வேலைவாய்ப்பு கடிதத்தை வழங்கி அசத்தியுள்ளார்.

3,327 நலத்திட்ட அறிவிப்புகள்
திமுக அரசு ஆட்சிக்கு வந்து இதுவரை 3,327 நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் 78 சதவீத அறிவிப்புகள் முழுமையாக செயல்வடிவம் பெற்றுள்ளன. அதாவது, 2,607 அறிவிப்புகளுக்கு அரசாணையே வெளியிடப்பட்டுவிட்டது. இவற்றில் 791 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வந்துவிட்டன.

மேலும், இந்த மாதம் மட்டுமே அரசுப் பணிக்கான பல ஆணைகளை ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். பள்ளிக்கல்வித்துறையில் பணிக்காலத்திலேயே இயற்கை எய்திய 269 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

2,849 நபர்களுக்கு பணி நியமன ஆணை
அதேபோல பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் ஆகிய பணியிடங்களுக்கு 2,849 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முன்னோட்டமாக 10 நபர்களுக்கு நேரடியாக முதலமைச்சரே ஆணைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்காலிகமாக பணிபுரிந்துவந்த 586 பருவகால பட்டியல் எழுத்தர்கள் மற்றும் உதவியாளர்கள் மற்றும் பருவகால காவலர்கள் ஆகியோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய 75 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

அதிகரிக்கும் வேலைவாய்ப்பு பதிவுகள்
அடுத்ததாக, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்புப் பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்துக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களில் முதல்கட்டமாக 11 பேருக்கு முதலமைச்சரே பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

ஒருபக்கம் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பை உண்டாக்கித் தருவதுடன் அரசு சார்ந்த வேலைக்கான பணி ஆணைகளை வழங்கும் நடவடிக்கைகளிலும் திமுக அரசு சமஅளவில் தீவிரம் காட்டி வருகிறது. அதற்குச் சான்றாக ஒரு புள்ளிவிவரத்தை இங்கே நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு வேலைக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 63 லட்சமாக இருந்தது. அதே திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 73 லட்சமாக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய இந்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்ய முன்வந்துள்ளனர். இதன்மூலம் இளைஞர்களிடையே அரசுப் பணியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள இந்த மாற்றம் குறித்து திமுகவை சேர்ந்த மனு சுந்தரத்திடம் பேசினோம். "திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என உறுதியளித்திருந்தோம். இப்போது ஒன்றரை ஆண்டில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அதில் ஒரு லட்சம் பேருக்குப் பணி ஆணையையே வழங்கிவிட்டோம்.

தமிழர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு
இத்துடன் மட்டும் நிற்காமல், வேலைவாய்ப்பில் நான்கில் 3 பங்குக்கான வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவீத முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

'தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்' என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். மேலும், 'அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று குறிப்பிட்டிருந்தோம்..

ஒருபக்கம் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். இன்னொரு பக்கம் வெளிநாட்டு முதலீட்டை அதிகம் ஈர்க்க வேண்டும். இந்த இரண்டையும் மிகச் சரியாக முதலமைச்சர் செய்து வருகிறார். இதைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் 'திராவிட மாடல் அரசு' என அவர் குறிப்பிடுகிறார்.

தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, மாநிலத்தின் நிதி ஆதாரம் சரியாக இல்லை. அதை முதலில் சரி செய்தால்தான் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். இந்த இரண்டு சவால்களையும் ஸ்டாலின் மிகத் திறமையாகக் கையாண்டு, ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளுக்கான ஆணையை வழங்கியிருக்கிறார்.

மேலும், கடந்த ஆட்சியில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டைவிட்டு அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டன. இங்கே திடமான ஆட்சி இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஒரு தள்ளாட்டம் இருந்தது. அந்த அச்சத்தில் புதிய நிறுவனங்கள் வரத் தங்கின. முன்பே இயங்கி வந்த நிறுவனங்களுக்கும் சிக்கல்கள் நிலவின.

புதிய பாய்ச்சலில் ஹெச்.சி.எல்
அந்தவகையில், மாநிலத்தின் நிதி நிலைமை மிகுந்த சிரமத்துக்கு உள்ளானது. அந்தக் குறைகளை அகற்றித்தான் இந்த அளவுக்கு திமுக அரசு முன்னேறி இருக்கிறது. அப்படிப் பார்த்தால் இது ஒரு நல்ல முன்னேற்றம்" என்கிறார்.

இவர் குறிப்பிடுவதைப்போல் தமிழகத்தில் பல நிறுவனங்களை முதலீடு செய்ய வைப்பது தொடர்பான பணிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். அதற்காகவே அவர் துபாய்க்கு பயணம் மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக அண்மையில் ஹெச்.சி.எச் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, சிவநாடார் அறக்கட்டளையின் தலைவர் ஷிகர் மல்ஹோத்ரா ஆகியோர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது அவர்கள், தமிழ்நாட்டில் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் சார்பில் செயல்படுத்த உள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலினே அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஆக, தமிழ்நாட்டில் தனது புதிய திட்டத்தை ஹெச்.சி.எல் செயல்படுத்த உள்ளது. அதன்பலனாக இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன என்பது அனைவருக்கும் நம்பிக்கையளிக்கக் கூடிய செய்தியாக உள்ளது.

நாள் முழுவதும் oneindi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக