புதன், 26 அக்டோபர், 2022

‘ஹரிஜன்’ என கூறக்கூடாது என்பது ஆளுநருக்குத் தெரியாதா?” - திருமாவளவன்

 minnambalam.com  - christopher  : பட்டியல் சமூகத்தவரை ‘ஹரிஜன்’ என குறிப்பிடக் கூடாது என்ற இந்திய அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடு தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியாதா? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநருக்குத்‌ தெரியுமா? தெரியாதா?
இது குறித்து திருமாவளவன் இன்று (அக்டோபர் 25) வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த அக்‌ -17 ஆம்‌ தேதி சென்னையில்‌ மாணவர்‌ விடுதியொன்றைத்‌ திறந்து வைத்துப்‌ ‘பேசிய தமிழ்நாடு ஆளுநர்‌ மேதகு ஆர்‌.என்‌.ரவி அவர்கள்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள பட்டியல்‌ சமூகத்தவரை “ஹரிஜன்‌’ எனக்‌ குறிப்பிட்டுப்‌ பேசியிருக்கிறார்‌. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
ஹரிஜன்‌ என்பது கடவுள்‌ ஹரியின்‌ குழந்தைகள்‌ எனும்‌ பொருளைத்‌ தருவதால்‌, அது பட்டியல்‌ சமூகத்தினரை இழிவுபடுத்தக்‌ கூடியதாகவுள்ளது என அக்காலத்திலேயே அதற்கு கடுமையான எதிர்ப்புக்‌ கிளம்பியது.


அதாவது, அச்சொல்லானது, “அப்பன்‌ பெயர்‌ தெரியாதவர்கள்‌’ என்னும்‌ பொருளைத்‌ தருவதால்‌ அதனைப்‌ பயன்படுத்தக்கூடாது என இந்திய ஒன்றிய அரசு 1982 ஆண்டிலேயே ஆணையிட்டுள்ளது. அது ஆளுநருக்குத்‌ தெரியுமா? தெரியாதா?

அரசிலமைப்புச்‌ சட்டத்தைப்‌ போற்ற வேண்டிய ஒரு பொறுப்புள்ள பதவியில்‌ இருப்பவர்‌ ஆளுநர்‌. அவரே இப்படிப்‌ பேசியிருப்பதால்‌ மற்றவர்களும்‌ அச்‌சொல்லைத்‌.
தயக்கமில்லாமல்‌ பயன்படுத்தக்கூடும்‌. எனவே, மேதகு ஆளுநர்‌ அவர்கள்‌ அவ்வாறு தான்‌ பேசியது ஏன்‌ என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்‌ எனக்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

சனாதன உளவியல்தான்‌ காரணமா?

எஸ்‌.ஆர்‌.எஸ்‌ சர்வோதயா பள்ளியின்‌ மாணவியர்‌ விடுதியைத்‌ திறந்துவைத்து உரையாற்றிய ஆளுநர்‌ அவர்கள்‌, தமிழ்நாட்டின்‌ உயர்கல்வி நிலையை விமர்சித்துப்‌ பேசியிருக்கிறார்‌. அப்போது, “உயர்கல்வியில்‌ சேரும்‌ ‘ஹரிஜன்களின்‌’ (GER) விகிதம்‌ 13% அல்லது 14% ஆக இருப்பதாகத்‌ தெரிவித்துள்ளார்‌.

பட்டியல்‌ சமூகத்தின்‌ உயர்கல்வி குறித்து ஆளுநர்‌ அவர்கள்‌ அக்கறை காட்டியிருப்பதை வரவேற்றுப்‌ பாராட்டுகிறோம்‌. ஆனால்‌, ஆதிதிராவிடர்‌ எனும்‌ சொல்‌ இங்கே அதிகாரபூர்வமாக நடைமுறையிலிருக்கும்போது, ஹரிஜன்‌ எனக்‌ குறிப்பிட்டு பேசியது ஏன்‌ என்கிற கேள்வி எழுகிறது? திராவிடர்‌ என்னும்‌ சொல்‌ மீதான வெறுப்புதான்‌ காரணமா? அல்லது சனாதன உளவியல்தான்‌ காரணமா?

அதிமுக ஆட்சியை குற்றம்‌ சாட்டவேண்டும்!

தமிழ்நாட்டில்‌ உயர்கல்வி பெறுவோரில்‌ பொதுவான நிலையில்‌ உள்ளோரின்‌ சதவிகிதத்துக்கும்‌ பட்டியல்‌ சமூக மாணவர்களின்‌ விகிதத்துக்கும்‌ இடையே வேறுபாடு
இருப்பது உண்மைதான்‌. ஆனால்‌, பட்டியல்‌ சமூக மாணவர்களின்‌ விகிதம்‌ ஆளுநர்‌ குறிப்பிட்டதைப்போல அது 13-14 சதவீதமல்ல; மாறாக 39.6 சதவீதமாகும்‌.

உண்மையில்‌, தமிழ்நாடு அரசைக்‌ குறை கூறுவதற்காக இப்படி ஆளுநர்‌ பேசியிருக்கிறார்‌. ஆனால்‌, அவர்‌ குறிப்பிட்ட புள்ளி விவரம்‌ உயர்கல்வி குறித்த அனைத்திந்திய அறிக்கை 2019-20 இல்‌ உள்ளதாகும்‌. அதாவது அதிமுக ஆட்சிக்‌ காலத்தில்‌ இருந்த நிலையைக்‌ காட்டுவதாகும்‌.

‘திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின்‌ தலைமையிலான அதிமுக ஆட்சிக்‌காலத்தில்‌ பட்டியல்‌ சமூகத்தினர்‌ பலவாறாகப்‌ பாதிக்கப்பட்டனர்‌. அதில்‌ முக்கியமான
பாதிப்பு அவர்களது உயர்கல்வியில்‌ ஏற்பட்ட சரிவாகும்‌. எனவே, ஆளுநர்‌ குறைகூற விரும்பினால்‌ கடந்த அதிமுக ஆட்சியையே குற்றம்‌ சாட்டவேண்டும்‌.

ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும்!

“ஹரிஜன்‌’ என்ற சொல்லை சாதிச்‌ சான்றிதழிலோ, பிற இடங்களிலோ பயன்படுத்தக்கூடாது என 1992 ஆம்‌ ஆண்டிலேயே இந்திய ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. திரு. ஜைல்‌ சிங்‌ அவர்கள்‌ உள்துறை அமைச்சராக இருந்தபோது அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின்னரும்‌ ஒருசிலரால்‌ அந்தச்‌ சொல்‌ பயன்படுத்தப்படுவதாகப்‌ புகார்‌ எழுந்ததையொட்டி 1990 ஆம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ 16 ஆம்‌ நாள்‌ இந்திய ஒன்றிய
நலத்துறை அமைச்சகம்‌ மாநிலங்களுக்கும்‌ யூனியன்‌ பிரதேசங்களுக்கும்‌ புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

அதற்குப்‌ பிறகும்கூட சிலர்‌ அந்த சொல்லைப்‌ பயன்படுத்துவதாகப்‌ புகார்‌ எழுந்த நிலையில்‌ சமூக நீதி அமைச்சகத்துக்கான பாராளுமன்ற நிலைக்குழு புதிய உத்தரவு
ஒன்றைப்‌ பிறப்பிக்குமாறு தனது ஒன்பதாவது அறிக்கையில்‌ பரிந்துரை செய்தது.

மாநிலங்களவையில்‌ 19.08.2010 அன்று வைக்கப்பட்ட அந்த அறிக்கையில்‌ “சாதிச்‌ சான்றிதழ்களில்‌ மட்டுமல்ல: மற்ற விதங்களிலும்‌ ”ஹரிஜன்‌” என்ற வார்த்தையைப்‌
பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடுமாறு கூறியது. அதனடிப்படையில்‌ 2012 ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ 22 ஆம்‌ நாள்‌ இந்திய ஒன்றிய சமூக நீதி அமைச்சகம்‌ புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்திய ஒன்றிய அரசு இவ்வளவு சுற்றறிக்கைகளை வெளியிட்ட பின்னரும்‌ அந்த அரசின்‌ பிரதிநிதியாக இருக்கும்‌ மேதகு ஆளுநர்‌ அவர்கள்‌ இவ்வாறு பொது வெளியில்‌ அதுவும்‌ மாணவர்களிடையே அந்த சொல்லைப்‌ பயன்படுத்திப்‌ பேசியிருப்பது சரியானதுதானா? என அவர்‌ சிந்திக்க வேண்டும்‌. அவரைப்‌ பின்பற்றி வேறு யாரும்‌ அந்தச்‌ சொல்லை பயன்படுத்தாமல் இருக்க ஆளுநர் ஆர். என். ரவி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக