வியாழன், 20 அக்டோபர், 2022

ஈபிஎஸ் டீம் சைலண்ட் மோட்.. .. “சிக்கிய புள்ளி விஜயபாஸ்கர் ..”.. எல்லாம் போச்சே!

 tamil.oneindia.com - Vignesh Selvaraj  சென்னை : அடித்து ஆடியிருக்க வேண்டிய நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அமைதி காப்பது இதனால் தான் என அதிமுக வட்டாரத்தில் தகவல்கள் பரபரக்கின்றன.
ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியையும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி பற்றி எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை.
அதேநேரம், ஈபிஎஸ் எதிர்த்து வரும் சசிகலா இந்த விவகாரத்தில் கடுமையாகச் சிக்கியுள்ளார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாத நிலையிலும் கூட மௌனமாகவே இருந்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
அதற்குக் காரணம், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் சிக்கியிருப்பதால் தான். சசிகலாவுக்கு எதிராக அட்டாக் மோடை எடுக்க வேண்டிய விவகாரத்தில் விஜயபாஸ்கர் காரணமாகவே அமைதியாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது ஈபிஎஸ் டீம்.



ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சசிகலா, அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டடோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது ஆணையம். எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை, அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்ய பரிந்துரைத்திருந்தார். ஆனால் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவிடாமல் சசிகலா தடுத்துள்ளார் என ஆறுமுகசாமி ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

ஜெ. சசி இடையே சுமுக உறவு இல்லை
சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை. சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களால் சசிகலாவின் அரசியல் வாழ்வு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அமைத்த விசாரணை ஆணையத்தின் மூலமாகவே சசிகலாவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அடித்து ஆடவேண்டிய நேரம்
ஜெயலலிதா மர்ம மரணத்தில் எடப்பாடி பழனிசாமியையும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. ஆனால், ஆறுமுகசாமி அறிக்கையில் ஈபிஎஸ் பற்றி எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. அதேநேரம், சசிகலா கடுமையாகச் சிக்கவைக்கப்பட்டுள்ளார். இந்த அறிக்கை காரணமாக எடப்பாடி பழனிசாமி உள்ளூர மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், அதனை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் ஈபிஎஸ் டீமின் ஒருவரும் சிக்கியிருப்பதால் தான்.

சசிகலாவுக்கு எதிராக
சசிகலாவை கடுமையாக எதிர்த்துப் பேசி வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஈபிஎஸ் டீமின் ஜெயக்குமார், சிவி சண்முகம், கேபி முனுசாமி உள்ளிட்டவர்கள் சசிகலாவை கடுமையாக அட்டாக் செய்து வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஆறுமுகசாமி அறிக்கை மேட்டர் அவல் பொரி சாப்பிடுவது போலத்தான். ஏனெனில், சசிகலாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தான் இந்த அறிக்கையில் அடுக்கப்பட்டுள்ளன.

சான்ஸ் கிடைத்தும்
ஈபிஎஸ்ஸுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவோடு இணக்கமாகச் செல்லும் முடிவில் இருக்கிறார். இந்நிலையில், ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா தரப்பு சிக்கி இருப்பதால், ஓபிஎஸ் - சசிகலாவை விமர்சித்து அரசியல் அரங்கில் தங்களது ஸ்டாண்டை வலுவாக நிறுவிக் கொள்ளலாம். ஆனாலும், ஈபிஎஸ் தரப்பின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காரணம், சசிகலாவோடு சேர்ந்து சிக்கியிருப்பது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான ஈபிஎஸ் ஆதரவாளர் விஜயபாஸ்கர்.

அமைத்ததே அவர்கள் தான்
ஒருவேளை திமுக அரசு அமைத்திருந்த விசாரணை ஆணையமாக இருந்தால் கூட, அரசியல் பழிவாங்கலுக்காக அமைக்கப்பட்ட ஆணையம், விசாரணை அதிகாரி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளார் என்றெல்லாம் விமர்சித்து விடலாம். ஆனால், இப்போது எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அந்த வாய்ப்பு கூட இல்லை, ஏனெனில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை அமைத்ததே ஈபிஎஸ் - ஓபிஎஸ் தான்.

அது மட்டும் நடக்கலைன்னா
அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை, அதிமுகவினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரிப்போர்ட்டில் விஜயபாஸ்கர் மட்டும் சிக்காமல் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி தரப்பு, சசிகலாவை கடுமையாக விமர்சித்து இந்த விவகாரத்தில் தீவிரமாக இறங்கியிருக்கும். சசிகலாவோடு, ஈபிஎஸ் ஆதரவாளரான விஜயபாஸ்கரும் சிக்கியிருப்பதால், இப்போது ஒன்றுமே செய்ய முடியாமல் மறைமுக நெருக்கடியில் சிக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக