செவ்வாய், 4 அக்டோபர், 2022

கொட்டும் மழையில் பேசிய ராகுல் : காங்கிரஸில் புயல் வீசுமா?

மின்னம்பலம் : கொட்டும் மழையில் நேற்று உரையாடிய ராகுல் காந்தி இன்று (அக்டோபர் 3) தனது 25 ஆவது நாள் யாத்திரையை மைசூருவிலிருந்து தொடங்கினார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
தமிழகம், கேரளாவைத் தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று இரவு, காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மைசூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாடினார்.
அப்போது அங்கு மழை பெய்யத் தொடங்கியது. எனினும் அவர் உரையை நிறுத்தவில்லை.
மழையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உரையாற்றிய அவர், “எனது யாத்திரையை இந்த மழையோ, வெயிலோ தடுத்து நிறுத்த முடியாது” என்று கூறினார்.
இதனைக் கேட்ட அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். மழையில் நனைந்தபடியே தனது உரையைக் கேட்டுக் கொண்டிருந்த தொண்டர்களுக்கு ராகுல் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “தனது பாரத் ஜோடோ யாத்திரை மகாத்மா காந்தியைக் கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம். காந்தி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போராடினார். அதுபோன்று காந்தியைக் கொன்ற சித்தாந்தத்துடன் இன்று நாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

கடந்த 8 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் நாட்டு மக்களின் சுதந்திரம் பறிபோய்விட்டது” என்று குறிப்பிட்டார்.

மேலும் தனது உரையின் போது, வெறுப்பு, பிரித்தாளும் அரசியல், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றையும் குறிப்பிட்டுப் பேசினார்.

நேற்று கொட்டிய மழையில் உரையாற்றிய ராகுல் இன்று காலை மீண்டும் தனது பயணத்தை மைசூரிலிருந்து தொடங்கினார்.

இந்நிலையில் ராகுல் காந்தி மழையில் நனைந்து பேசிய புகைப்படத்தையும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மழையில் நனைந்தபடி பேசிய புகைப்படத்தையும் ஒப்பிட்டு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் க்ளைட் க்ராஸ்டோ ட்வீட் செய்துள்ளார்.

2019 மக்களவை இடைத்தேர்தலின் போது அக்கட்சி சார்பில் ஸ்ரீனிவாஸ் பாட்டீல் மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா தொகுதியில் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த உதயன் ராஜே போட்டியிட்டார்.

அப்போது சத்தாரா தொகுதியில் மழையில் நனைந்தபடியே சரத் பவார் ஸ்ரீனிவாஸ் பாட்டீலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அந்த தேர்தலில் 87000 வாக்கு வித்தியாசத்தில் பவார் கட்சி வேட்பாளர் பாட்டீல், பாஜக வேட்பாளர் உதயன் ராஜேவை வெற்றி பெற்றார்.

அப்போது மழையில் சரத் பவார் பிரச்சாரம் செய்ததும், ஸ்ரீனிவாஸ் பாட்டீலின் வெற்றியும் அதிகளவில் பேசப்பட்டது.
Rahul spoke in pouring rain

இந்நிகழ்வை குறிப்பிட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் க்ளைட் க்ராஸ்டோ , “காலம் நிரூபித்துவிட்டது… காலம் மீண்டும் நிரூபிக்கும்… மழை கடவுளாக உங்களை ஆசீர்வதிக்க முடிவு செய்தால், எதிர்க்கட்சி முகாமில் விரைவில் புயல் வீசும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தசூழலில் ராகுல் மழையில் நனைந்தபடி பேசிய வீடியோவும், புகைப்படமும் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக