திங்கள், 3 அக்டோபர், 2022

யுக்ரேன் பதிலடித் தாக்குதல்: முக்கிய நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா

இழந்த பகுதிகளை மீட்க யுக்ரேன் படைகள் நடத்தும் போராட்டம்.

bbc.com  :        ஹ்யூகோ பச்சேகா & ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்டு
    பிபிசி நியூஸ், கீயவ்வில் :  இழந்த பகுதிகளை மீட்க யுக்ரேன் படைகள் நடத்தும் போராட்டம்.
தமது அண்டை நாடான யுக்ரேன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த லைமன் நகரில் இருந்து பின் வாங்கியது.
ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் நகரத்தில் சுற்றி வளைக்கப்படுவார்கள் என்ற அச்சத்திற்கு இடையே இந்தப் பின்வாங்கல் நடந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லைமன் நகரை யுக்ரேனியப் படைகள் மீண்டும் கைப்பற்றியிருப்பதன் மூலம், டோனியெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் உள்ள முக்கிய நிலப்பகுதிகளை அவர்கள் மீண்டும் கைப்பற்ற வழி ஏற்படும்.
லைமன் நகரிலிருந்து ரஷ்ய படைகள் அனைத்தும் வெளியேறிவிட்டதாக யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா இந்தப் பின்வாங்கலை அறிவிப்பதற்கு முன்னதாக, கடந்த சனிக்கிழமை இணையத்தில் பகிரப்பட்ட காணொளியில் யுக்ரேனிய வீரர்கள் தங்கள் நாட்டின் தேசியக்கொடியை புறநகர் பகுதிகளில் அசைப்பதைப் பார்க்க முடிந்தது.
ரஷ்யாவால் தளவாட மையமாகப் பயன்படுத்தப்பட்ட லைமன் நகரை, மீண்டும் கைப்பற்றியிருப்பது யுக்ரேனியப் படைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இது மாதிரியான தோல்விகளை எதிர்கொள்ளும்போது ரஷ்யா குறைந்த சக்தி கொண்ட அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என செச்சென் குடியரசின் தலைவரும் கடும்போக்கு மாஸ்கோ கூட்டாளியுமான ரம்ஜான் கதிரோவ் தெரிவித்துள்ளார்.

பகுதியளவு ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு யுக்ரேனிய பிராந்தியங்களில் ஒன்றான டோனியெட்ஸ்கில் லைமன் நகரம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியை கடந்த வெள்ளிக்கிழமை தங்கள் நாட்டோடு ரஷ்யா இணைத்தது. யுக்ரைனும், அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் இந்த நடவடிக்கையை சட்டவிரோத நில அபகரிப்பு என்று நிராகரித்துள்ளன.

இது குறித்து பிபிசியிடம் பேசிய யுக்ரேனின் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் யூரிக் சாக், கடுமையான சண்டைக்குப் பிறகு லைமன் பகுதியைச் சுற்றிய சமீபத்திய வெற்றிகளை குறிப்பிடத்தக்க வெற்றி என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய வீரர்கள் சரணடைவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கும் யூரிக் சாக், ரஷ்ய ராணுவத் தலைமை அவர்களை நடத்துவதைவிட போர்க்கைதிகளாக சிறந்த முறையில் அவர்கள் நடத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

லைமன் பகுதியை சோவியத் காலப் பெயரான 'க்ராஸ்னி'எனக் குறிப்பிட்டு அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்த ரஷ்யா, அந்தப் பகுதியில் யுக்ரேனின் படை பலம் அதிகமாக இருப்பதையும் ஒப்புக்கொண்டது.

தற்போது போரில் யுக்ரேன் உத்வேகம் கொண்டிருப்பதாகக் கூறும் ராணுவ ஆய்வாளர்கள், எதிர்த்தாக்குதலுடன் முன்னோக்கிச் சென்று ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் மீட்டெடுக்க அவர்கள் உறுதியெடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

"எங்கள் முழு நிலத்தையும் விடுவிப்பதற்கான முயற்சிகள், சர்வதேச சட்டத்தை யாரும் மீற முடியாது என்பதற்கு சான்றாக இருக்கும்" என யுக்ரேனின் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்தார். யுக்ரேனின் கிழக்கு நகரமான லைமனில் இருந்து தன்னுடைய படைகளை ரஷ்யா திரும்பப்பெற்றிருப்பது, ரஷ்யாவிற்கான பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக