வெள்ளி, 28 அக்டோபர், 2022

கோவை குண்டு வெடிப்பு - சிலிண்டரை வெடிக்க வைப்பதற்கு ஆக்சிஜனை முபின் பயன்படுத்தினாரா

மாலைமலர் : சிலிண்டரை வெடிக்க வைப்பதற்கு ஆக்சிஜனை முபின் பயன்படுத்தினாரா?- தடயவியல் ஆய்வில் விடை கிடைக்கும்
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று மீண்டும் கோவை சென்று விசாரணை நடத்தினார்.
கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான நட வடிக்கைகளை முடுக்கி விட்டார்.
கார் வெடித்து சிதறியபோது அதில் பயணம் செய்த முபினும் கருகி உயிரிழந்து விட்டார். காரில் எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்ததாகவே முதலில் கூறப்பட்டது. ஆனால் சம்பவ இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெடி பொருட்களும் சிக்கின. இதனால் வெடி மருந்துடன் சேர்ந்து சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆணிகள், கோலி குண்டுகள் ஆகியவை காரில் வெடி பொருட்கள் இருந்ததற்கான அடையாளத்தை உறுதிப்படுத்தின. இருப்பினும் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தது எப்படி? என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

இந்த நிலையில் காரில் வெடி மருந்து மற்றும் 2 சிலிண்டர்களுடன் பயணம் செய்த முபின் புதிய முறையில் தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

2 சிலிண்டர்கள், வெடி பொருட்கள் ஆகியவற்றுடன் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றையும் முபின் எடுத்துச் சென்றுள்ளார். எல்.பி.ஜி. சிலிண்டரில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டால் தீப்பொறி உருவாகி வெடித்து சிதறி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள் தடயவியல் நிபுணர்கள்.

இந்த மாதிரியான முயற்சியில் ஈடுபட்டு முபின் சிலிண்டரை வெடிக்கச் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் கூறும்போது, எல்.பி.ஜி. சிலிண்டருடன் வெடிக்காத ஒரு சிலிண்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

அதை சென்னை தடயவியல் துறை நிபுணர்கள் நன்கு அலசி ஆய்வு செய்து வருகிறார்கள். இதுபற்றி அவர்கள் அறிக்கை கொடுத்த பிறகு கார் வெடிப்பு சம்பவம் நடந்தது எப்படி? என்பதற்கான விடை கிடைத்து விடும் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற தடயவியல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எல்.பி.ஜி. சிலிண்டரில் புரோப்பேன், யூட்டேன் என்கிற 2 திரவங்களே அடங்கி இருக்கும். இதுதான் கியாசாக வெளிவரும். கியாஸ் கசிவு ஏற்பட்டால் நாம் உணர்ந்து கொள்வதற்கு வசதியாக மெர்சேப்டன் என்கிற வாசனை திரவமும் சேர்க்கப்பட்டிருக்கும்.

அதுதான் கியாஸ் கசிவு ஏற்பட்டால் வாசனையை ஏற்படுத்தும். இதுபோன்ற நேரங்களில் சிறிய அளவிலான 'ஸ்பார்க்' ஏற்பட்டாலே சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு விடும். நமது வீடுகளில் கியாஸ் கசிவை கவனிக்காமல் விட்டால் சமையல் அறையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து ஏற்படும் கண்ணுக்கு தெரியாத வகையிலான ஸ்பார்க் கூட சிலிண்டரை வெடிக்க செய்து விடும்.

ஆக்சிஜனும் இதுபோன்ற சிலிண்டர் விபத்தை ஏற்படுத்தும் 'ஸ்பார்க்' திறன் கொண்டதுதான். ஒரு வேளை கோவை சம்பவத்திலும் இதுபோன்ற சிலிண்டர் விபத்தை உயிரிழந்த முபின் ஏற்படுத்தி இருக்கலாம். எல்.பி.ஜி. சிலிண்டர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டால் உடனடியாக வெடித்து சிதறி விடும்.

இவ்வாறு தடயவியல் அதிகாரி தெரிவித்தார்.

போலீஸ் வாகன சோதனையின்போது மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் முபின் சிலிண்டரை திட்டமிட்டே வெடிக்க செய்திருக்கலாமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதற்கும் விடை காணும் முயற்சியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களும் தங்களது ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக