வெள்ளி, 21 அக்டோபர், 2022

உணவளித்த மனிதர் இறப்பு ! முத்தம் கொடுத்து எழுப்பிய குரங்கு.. தேம்பி அழுத மாருதி! நெஞ்சை உலுக்கும் வீடியோ

Vishnupriya R  -  Oneindia Tamil News : இலங்கையில் மட்டக்களப்பில் தனக்கு அன்றாடம் உணவு வைக்கும் நபர் இறந்ததை அடுத்து அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்ட குரங்கு, அவரை எழுப்புவதற்கு முயற்சித்த காட்சிகள் அங்கிருந்தோரை கலக்கமடைய செய்தது.
மனிதர்களை விட ஐந்தறிவு ஜீவராசிகள் மிகவும் அன்பானவை. உணவு புகட்டி அன்பாக இருக்கும் மனிதர்கள் மீது ஐந்தறிவு ஜீவன்கள் பாசத்துடன் இருக்கும். அவர்களுக்கு ஒரு ஆபத்து என வந்துவிட்டால் தனது உயிரை கொடுத்தும் காப்பாற்றும் பொதுநலவாதிகள் அவை.
அண்மையில் நிறைய செய்திகளை பார்த்துள்ளோம். எஜமானரை கடிக்க வந்த பாம்பை கடித்து உயிர்விட்ட பாசக்கார நாய், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் அருகே சென்ற பாம்பை கடித்துகுதறி உயிரை விட்ட கதையெல்லாம் பார்த்திருக்கிறோம்.
சக மனிதர்களுக்கு கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் நன்றி என்ற ஒன்று அவர்களில் எத்தனை பேருக்கு இருக்கும் என்பதை தெரியாது.
ஆனால் விலங்குகள் அப்படியில்லை, சாலையில் செல்லும் நாய்களுக்கு ஒரே ஒரு நாள் உணவிட்டாலும் அது காலத்திற்கும் நன்றியுணர்ச்சியுடன் இருக்கும். வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் எஜமானர் இறந்துவிட்டால் அது கண்ணீர் விட்டு அழும்.

உரிமையாளர்கள்
கூடுமானவரை உரிமையாளர்களுக்கு வரும் ஆபத்தை தன் பக்கம் எடுத்து கொள்ள முயற்சிக்கும். அது முடியாதபட்சத்தில் எஜமானர்கள் இறந்துவிடும் துர்பாக்கிய நிலை அந்த ஐந்தறிவு ஜீவன்களை சொல்லொண்ணாதுயரத்தில் ஆழ்த்திவிடும். இப்படித்தான் இலங்கையில் மட்டக்களப்பில் தனக்கு தினமும் உணவளித்த ஒருவரின் இறப்பை தாங்கிக் கொள்ளாத குரங்கு அவரின் உடல் அருகே நீண்டே நேரம் அமர்ந்து கொண்டு அஞ்சலி செலுத்தியது.

சமூகவலைதளங்கள்
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இறந்தவரின் அருகே சென்று உட்கார்ந்த அந்த குரங்கு அந்த நபரின் கால்களை தொட்டு அந்த குரங்கு வணங்கியது. அங்கு கூடியிருந்தோர் இறந்த நபரை குரங்கு ஏதேனும் செய்துவிட போகிறது என்ற அச்சத்தில் அதை விரட்ட முயற்சித்தனர். ஆனால் அது அந்த நபரை விட்டு எங்கு செல்லவில்லை. அந்த நபரை எழுந்திருக்க வைக்க முயற்சித்தது.மேலும் அந்த நபருக்கு முத்தமிட்டு தேம்பி அழுதது.

சோகம்
அவரை தொட்டு தொட்டு எழுப்பியது. ஆனால் அவர் எழாததால் குரங்கு ஏமாற்றமடைந்து சோகமானது. இந்த சம்பவத்தை பார்த்த மக்கள் குரங்கின் பாசத்தை கண்டு கண்ணீர் சிந்தினர். எப்போதாவது அந்த நபர் தமக்கு வந்து உணவு வைப்பார் என்ற எதிர்பார்ப்புடன் அந்த நபருக்கு குரங்கு பிரியாவிடை கொடுத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக