புதன், 19 அக்டோபர், 2022

மல்லிகார்ஜுனை கார்கே காங்கிரஸ் தலைவராக தெரிவானார் கார்க்கேக்கு 7,897 வாக்குகளும், சசிதரூருக்கு 1,072 வாக்குகளும் கிடைத்தன

தினகரன் : புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிந்த நிலையில், இன்று டெல்லியில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நாடு முழுவதும் அந்த மாநில தலைமையகத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடத்தப்பட்டது. தேர்தலில் தகுதியான 9,915 பிரதிநிதிகள் வாக்களித்தனர்; 96 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப் பெட்டிகள் மூடி சீல் வைக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டன.
இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணும் பணி டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது மாநிலம் வாரியாக வாக்குபெட்டிகள் பிரிக்கப்பட்டு, அவற்றில் இருந்து வாக்குச்சீட்டுகள் டிரம்மில் கொட்டப்பட்டன.

எந்த மாநிலத்தில் யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பதை கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின், வாக்குச் சீட்டுகள் நூறு நூறாக பண்டல்களாக கட்டப்பட்டன. தொடர்ந்து பதிவான வாக்குகள் வேட்பாளர் வாரியாக பிரிக்கப் பட்டு எண்ணப்பட்டன.

மொத்தம் பதிவான வாக்குகளில் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1,072 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே அகில  இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். காந்தி குடும்பத்தினர் அல்லாத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது , காங்கிரஸ் வரலாற்றில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக