புதன், 26 அக்டோபர், 2022

ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வான 3 சகோதரிகள்.. தமிழ்நாட்டில்

ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வான 3 சகோதரிகள்
dailythanthi.com : தமிழகத்தில் 9,791 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான 7 மாதம் அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது.

இதில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான பிரீத்தி (வயது 28), வைஷ்ணவி (25), நிரஞ்சனி (22) ஆகிய 3 பேரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
இதில் பிரீத்திக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் சகோதரிகள் 3 பேரும் 2-ம் நிலை காவலர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.


பிரீத்தி தேர்வு எழுதிய முதல் தடவையே வெற்றி பெற்றுள்ளார். வைஷ்ணவி 4 முறையும், நிரஞ்சனி 3 தடவையும் போராடி தேர்வாகியுள்ளனர்.
மகள்களின் வெற்றி குறித்து அவர்களின் தந்தை வெங்கடேசன் கூறியதாவது:- ”எனது மனைவி ஷகிலா இறந்த நிலையில் மகள்கள் பிரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி, மகன் கார்த்திகேயன் ஆகியோரை நன்றாக படிக்க வைத்து அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று பாடுபட்டேன்.

நான், பிளஸ் 2 முடித்த பிறகு போலீஸ் தேர்வுக்கு சென்றேன். ஆனால் என்னால் தகுதி பெற முடியவில்லை.
இதனால் இருக்கின்ற 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிள்ளைகளை படிக்க வைத்தேன்.
எனது 3 மகள்களும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். மகன் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
மூத்த மகள் பிரீத்திக்கு ராஜீவ்காந்தி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். மற்றவர்கள் திருமணமாகாத நிலையில் போலீஸ் பணிக்கு சகோதரிகள் 3 பேரும் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தனர்.

”எனக்கு கிடைக்காத காவலர் வேலை எனது மகள்களுக்கு கிடைத்ததில் பெருமையாக இருக்கிறது. மகள்கள் 3 பேரும் அரசுப் பள்ளியில்தான் படித்தார்கள்.
மூத்த மகளும், 3-வது மகளும் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்தனர். 2-வது மகள் அரக்கோணம் அரசு கல்லூரியில் படித்தார். 3 மகள்களும் வீட்டில் இருந்தே காவலர் தேர்வுக்கு படித்தார்கள். எனது விவசாய நிலத்திலே 3 பேரும் ஓட்டப்பயிற்சி எடுத்தார்கள்.

அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது” எனது மகள்கள் 3 பேரும் ஒரே நேரத்தில் காவலர் பணிக்கு தேர்வானதற்கு மருமகன் ராஜூவ்காந்தி தான் காரணம் என்றார்.
வாழ்க்கையின் அடித்தட்டு நிலையில் இருந்து சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட சகோதரிகள் 3 பேரும் ஒரே நேரத்தில் காவலர் பணிக்கு தேர்வாகி பயிற்சி முடித்துள்ளதை அந்த கிராம மக்கள் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக