புதன், 5 அக்டோபர், 2022

"திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல!" - வள்ளலார் 200 விழாவில் முதல்வர் ஸ்டாலின்

மின்னம்பலம் : வள்ளலாரின் முப்பெரும் விழாவில் இன்று (அக்டோபர் 5) கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் வள்ளலார் முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் விழாவினை தொடங்கி வைத்தார்.
வள்ளலார் 200 இலச்சினை மற்றும் சிறப்பு மலரை வெளியிட்ட அவர் தொடர்ந்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், “வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள், அவர் தொடங்கிய தர்மசாலைக்கு 156 ஆண்டுகள் மற்றும் வள்ளலார் ஏற்றிய தீபத்துக்கு 152 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த முப்பெரும் விழா சிலருக்கு ஆச்சரியமாக, அதிர்ச்சியாக இருக்கலாம்.
திராவிட மாடல் ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது மற்றும் மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று மதத்தை வைத்து பிழைக்கக்கூடிய சிலர் பேசி வருகிறார்கள்.
அவர்களின் அவதூறு கருத்துகளுக்கு பதில் சொல்லும் விழாவாக வள்ளலார் முப்பெரும் விழா அமைந்துள்ளது.

திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல. ஆன்மிகத்தை அரசியலுக்கும், சுயநலத்துக்கும் பயன்படுத்துவதற்கு எதிரானது தான் திமுக கட்சி.
தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்தவர்கள் இதனை நன்கு அறிவார்கள். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்று பிற்போக்குத்தனங்களை எதிர்க்ககூடிய வள்ளுவரின் மண் தான் இந்த தமிழ் மண்.

பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும், அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தது திமுக அரசு

வள்ளலார் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது.
கோட்டைக்கு வருவதை விட கோவிலுக்கு அதிகம் வரக்கூடியவர் தான் நம்முடைய
அமைச்சர் சேகர்பாபு. அறப்பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு அவர் சென்று வருகிறார்.
அந்த வகையில் அமைச்சர் சேகர்பாபு ஒரு ஆன்மிக செயற்பாட்டாளர்.
இது தான் திராவிட மாடலின் ஆட்சியின் புகழுக்கும், சிறப்புக்கும் காரணமாக அமைந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.  
கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக