செவ்வாய், 6 செப்டம்பர், 2022

பெங்களூரு வெள்ளம் டிராக்டர்களில் அலுவலகம் செல்லும் பெங்களூரு ஐடி ஊழியர்கள்

nakkheeran.in பெங்களூருவில் தொடரும் கனமழையின் காரணமாக ஐடி நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் டிராக்டர்களில் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.   
குறிப்பாக பெங்களூரு, ரெயின்போ டிரைவ் லேஅவுட், ஷார்ஜா நகர்  போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  முக்கிய சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஐந்திற்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி  நீர் சாலைகளில் புகுவதால் 2 அடிக்கும் அதிகமான நீர் சாலைகளில் காணப்படுகிறது.
சுரங்கப்பாதைகள் மொத்தமும் நீரில் மூழ்கியுள்ளன. ரயில்வே பாலங்களின் அடியில் மழைநீர் 3 அடி வரை தேங்கியுள்ளது. பெங்களூரு விமான நிலையத்திலும் கணுக்கால் வரை நீர் சூழ்ந்ததால் பயணிகள் அவதியுற்றனர்.

பெங்களூருவில் நேற்று முன்தினம் 16செமீ மழை பெய்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடானது. பல ஏரிகள் நிரம்பி வழிவதாலும் மழைநீர் வடிகால்கள் நிரம்பி மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் வேலைகளுக்கு செல்பவர்களும் படகுகளிலும் ட்ராக்டர்களிலும் மழைநீர் தேங்கிய சாலைகளை கடக்க வேண்டியுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களையும் டிராக்டர்களை கொண்டே மீட்கின்றனர்.

கடந்த கொரோனா காலத்தில் அலுவலர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ததால் பலகோடி ரூபாய் லாபம் என அறிவித்த நிறுவனங்கள் தற்போது 225 கோடிக்கும் அதிகமான இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கொரோனா காலத்திற்கு பிறகு பல நிறுவனங்கள்  30% ஊழியர்களை மட்டுமே அலுவலகத்திற்கு வர சொல்லியிருந்தது. ஆனால் தற்போது சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் காரணமாக அனைத்து ஊழியர்களையும் அடுத்த சில தினங்கள் வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன.

ரயில்வே பாலங்கள் இருக்கும் மெஜஸ்டிக், ஒகலிபுரம், கஸ்தூரிநகர் போன்ற பகுதிகளில் பாலத்திற்கு அடியில் வாகனங்கள் செல்லும் சாலைகளில் 3 அடிக்கும் மேல் நீர் சூழ்ந்துள்ளது. ஒயிட்ஃபீல்ட், கோட்டிகெரே, பன்னர்கட்டா சாலை, விஜயநகர், ராஜாஜிநகர், பசவேஷ்வர் நகர், யஷ்வந்த்பூர், பீன்யா, லாகரே, நந்தினி லேஅவுட், மல்லேஸ்வரம், சேஷாத்ரிபுரம், ஹெப்பால், சஞ்சய்நகர், ஆர்.டி.நகர், நாகவாரா, ஹென்னூர், பானஸ்வாடி, ஆர்.ஆர்.நகர் போன்ற பகுதிகள் மழைநீரால் பலத்த சேதம் அடைந்துள்ளது.

மழைநீர் வெள்ளத்தால் ஆங்காங்கு நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களும் கார்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும் நடக்கின்றது. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பேரிடர் மேலாண்மை குழுக்களை அனுப்ப முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக