ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ஸ்டாலின், பிடிஆர் தொடரும் பனிப்போர்... எங்கே போய் முடியுமோ? அவாள் பத்திரிகைகள் கவலை

tamil.samayam.com  :  தனித்துவம்: பிடிஆர் என்ற இந்த மூன்றெழுத்துக்கு சொந்தக்காரரான அமைச்சர், தமது வெளிப்படையான விமர்சனங்கள் மற்றும் செயல்பாடுகளால் வேறு எந்த அமைச்சருக்கும் இல்லாத அளவுக்கு கட்சிக்குள்ளும், ஆட்சிக்கு வெளியே மக்கள் மன்றத்திலும் எப்போதும் தனி கவனம் பெற்று வருகிறார். இதற்கு அவர் வெளிநாட்டில் மெத்த படித்தவர் என்பது மட்டுமல்லாமல், அமெரிக்காவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவசாலி என்பதும் முக்கிய காரணம்.

நிதியமைச்சர் பொறுப்பு: திராவிட சித்தாந்தங்களோடு, தமது சுய சிந்தனையுடன்கூடிய ஆட்சி நிர்வாகத்தால் அடிதட்டு மக்களின் கல்வி, பொருளாதார நிலையில் மாற்றத்தை கொண்டு வந்துவிடலாம் என்ற அசாத்திய நம்பிக்கையுடன் மாநில அரசின் முக்கிய பொறுப்பான நிதியமைச்சர் பொறுப்பை ஏற்று கொண்டுள்ளவர் பிடிஆர். இவரது திறமையின் மீது தான் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகவே முதல்வர் ஸ்டாலினும் தமது அமைச்சரவையில் பிடிஆருக்கு நிதி அமைச்சர் எனும் உயர்ந்த பொறுப்பை கொடுத்து வைத்துள்ளார். பிறகென்ன? எல்லாம் சரியாகதானே போய் கொண்டிருக்கிறது எனக் கேட்டால், அதுதான் இல்லை என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்.

பதிலடி: அறநிலையத் துறையின் வசமுள்ள இந்து சமய கோயில்கள் அனைத்தையும் மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக ஆட்சிக்கு வந்த உடனே கொளுத்திப் போட்டார் ஜக்கி வாசுதேவ். அதற்கு ஆளுங்கட்சியை சேர்ந்த தலைவர்கள் யாரும் எதிர்வினை ஆற்றாதபோது, நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பிறகு, சனாதன சக்திகளிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்ட கோயில்களின் நிர்வாகத்தை மீண்டும் அவர்களிடம் ஒப்படைப்பதற்காகவா நாங்க ஆட்சி வந்தோம்? என்று காட்டமாக பதிலடி கொடுத்தார் பிடிஆர். ஜக்கி வாசுதேவுக்கு பிடிஆர் கொடுத்த பதிலடிக்கு ஹிந்துத்துவ அமைப்புகள் மத்தியில் கடும் கண்டன குரல்கள் எழுந்ததும் இனிமேல் அவரைப் பற்றி பேச வேண்டாம் என்று பிடிஆருக்கு வாய்ப்பூட்டு போட்டது கட்சித் தலைமை.

பனிப்போர்: அப்போது தொடங்கியது ஸ்டாலினுக்கும், பிடிஆருக்கும் இடையேயான பனிப்போர் எனக் கூறும் உடன்பிறப்புகள், ஜிஎஸ்டி விவகாரம், பெட்ரோல், டீசல் வரி பங்கீட்டில் தமிழகத்தை மத்திய பாஜக அரசு எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பிடிஆர் அவ்வப்போது துறைரீதியாக விமர்சித்து வருவதையும் கட்சித் தலைமை விரும்பவில்லை என்கின்றனர்.

இதேபோன்று, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்று சட்டமன்றத்திலேயே பிடிஆர் ஓபனாக பேசியது, திமுகவின் மிகப் பெரிய வாக்கு வங்கியாக உள்ள அரசு ஊழியர்கள் மத்தியில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலின் ஆக்ஷன்: இவை போதாதென்று, பிடிஆருக்கு திமுகவில் நாளுக்கு நாள் பெருகிவரும் ஆதரவை பொறுக்க முடியாத உடன்பிறப்புகள் சிலர், கட்சித் தலைமையை தாண்டி, தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள முயல்கிறார் என்று அறிவாலயத்தில் பற்றவைத்துள்ளதன் விளைவாகவும், துறைரீதியாக அவர் கோப்பைகளை மிகவும் மெதுவாக கையாளுவதாக நிதித் துறை ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் பிடிஆர் மீது முதல்வரிடம் ரிப்போர்ட் வாசித்து வருவதன் காரணமாகவும் முதல்வருக்கும், பிடிஆருக்கும் இடையே கட்சிரீதியாகவும், நிர்வாகரீதியாகவும் பனிப்போர் தொடர்ந்து கொண்டிருப்பதாக கூறும் உடன்பிறப்புகள், இதன் வெளிப்பாடாகவே, பிடிஆர் வசம் இருந்த திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியில், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வந்த மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டு, பிடிஆர் டம்மி ஆக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற அமைச்சரின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்தின் எதிர்வினையாக, பாஜகவில் இருந்து விலகி மீண்டும் தாய் கழகமான திமுகவில் இணைய டாக்டர் சரவணன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து விருப்பம் தெரிவித்த பிறகும், அவரை கட்சியில் சேர்ப்பது குறித்து ஸ்டாலின் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்காமல் உள்ளார்.

அத்துடன் தமிழக நிதித் துறையை மேம்படுத்துவதற்காக, சிறப்பு நிதிச் செயலகம் ஒன்றை ஏற்படுத்தி, அதனை திறம்பட நிர்வகிக்க மத்திய அரசுப் பணியில் இருந்த தமிழரான எம்.எல்.கே. ராஜாவை, அப்பணியி்ல் இருந்து விடுவித்து, அவரை பிடிஆர் தமிழகம் அழைத்து வந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. ஆனால், இதுவரை இந்த செயலகம் செயல்படாததால், பிடிஆர் அழைத்து வந்த உயரதிகாரியான ராஜா மீண்டும் மத்திய அரசு பணிக்கே திரும்பும் நிலை உருவாகி உள்ளது.

உடன் பிறப்புகள் கலக்கம்: இவையெல்லாம் பிடிஆருக்கும், தமக்கும் இடையேயான பனிப்போரின் வெளிப்பாடாகவே கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் செய்துவருகிறாரோ என வருந்தும் திமுக உடன்பிறப்புகள், இருவருக்கும் இடையேயான பனிப்போர் விரைவில் முடிவுக்கு வந்து, திமுக ஆட்சி நிர்வாகம் சிறக்க பிடிஆரை ஸ்டாலின் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்கின்றனர் மதுரை திமுக உடன்பிறப்புகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக