செவ்வாய், 13 செப்டம்பர், 2022

ரணில் விக்கிரமசிங்க புதிய திட்டம் : அரசாங்கம் ஜனாதிபதி மாகாணசபை இணைந்த அதிரடி ....

 kuruvi.lk  :  விவசாயத்தை நவீனமயப்படுத்த பல அதிரடி திட்டங்கள் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு  
இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை ஜனாதிபதி இன்று (13) ஸ்தாபித்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாயத்தை நவீனமயப்படுத்தி உற்பத்தி மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்க முடியும் என்றும் இதன்மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டும் துறையாக விவசாயத்தை மாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.


உலகின் உணவு நெருக்கடியை கருத்திற்கொண்டு, இலங்கை எதிர்நோக்கும் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு திட்டமிட்டு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

“அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும். நமது பொருளாதாரம் மறை 7%ஆக உள்ளது. நாட்டின் பொருளாதாரம் மோசமடையும் போது மக்களின் வருமானம் குறைகிறது. மக்களின் வருமானம் குறையும் போது, அவர்கள் வாழ வழியின்றி சிரமப்படுகின்றனர்.

இன்று கட்டுமானத் துறையில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துள்ளது. அரசாங்கம் மீண்டும் அந்நியச் செலாவணியைப் பெற்று நிலைமையை சமாளிக்கும் வரை இந்த நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இன்று நாட்டில் ஒரு பகுதியினர் உணவின்றி தவிக்கின்றனர். நடுத்தர மக்கள் வருமானத்தை இழந்துள்ளனர். அவர்கள் யாரிடமும் பிச்சை எடுக்க விரும்புவதில்லை. அடுத்த வருடமும் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். இன்று உலகம் முழுவதும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் போர் காரணமாக, எங்களுக்கு தேவையான கோதுமை கிடைக்கவில்லை. அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அறுவடை நன்றாக இருக்கும். ஆனால் அது போதுமானதாக இல்லை.

மறுபுறம், பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் உணவுப் பயிர்கள் அழிவடைந்து, தற்போது பருப்பை இறக்குமதி செய்யும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. உலக உணவுச் சந்தையில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலை அதிகரித்து வருகிறது. இது இலங்கை போன்ற சிறிய நாடுகளைப் பெரிதும் பாதிக்கிறது. இப்போது இந்தியா உணவு ஏற்றுமதியை நிறுத்திவிட்டது. சீனாவும் குறைத்துவிட்டது. இந்த நிலைமை இந்த டிசம்பரில் முடிவுக்கு வராது. இந்த நிலை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கக்கூடும்.

இந்த இரண்டு பிரச்சனைகளால் பாரிய உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதேசமயம் தற்போது எண்ணெய் விலை குறைந்தாலும் குளிர்காலம் வரும்போது விலை அதிகரிக்கும். எனவே இதுபோன்ற பல சவால்கள் உள்ளன. எனவே, இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும். அந்த உணவை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். அதற்காகவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பெரும்போகம் ஆரம்பிக்கிறது. தற்போது உரம் பெறுவதற்கு சுமார் 200 மில்லியன் டொலர்களைத் தேடிவைத்துள்ளோம். அதற்காக இன்னும் 20 மில்லியன் டொலர்களைத் தேடிக் கொள்ள வேண்டும்.

இப்போது நாங்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறோம். சில இடங்களில் விதைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து தேவையான விதைகளைப் பெற அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இவற்றை நாம் செய்யவேண்டும். வெறுமனே விவசாயப் புரட்சியாக மட்டும் செய்வதில் பயனில்லை.

நாட்டிற்கு என்ன தேவை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். மேலதிக கையிருப்பு இல்லாமல் எவ்வாறு இந்தத் திட்டத்தை முன்னெடுப்பது என்பதை சிந்திக்க வேண்டும். ஏனெனில் விளைச்சல் அதிகமாக இருந்தால் சந்தை முற்றிலும் சரிந்துவிடும். நமக்குத் தேவையான உணவை எப்படிப் பெறுவது என்ற தேசியத் திட்டத்தை உருவாக்க வேண்டும். இது மாகாண மட்டத்தில், மாவட்ட மட்டத்தில், பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அரசாங்கத்தின் அதிகாரம், நிர்வாகத்திடம் உள்ளது. மாகாண சபையின் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. இப்போது மாகாண சபைகள் இல்லை. இந்த 03 துறைகளையும் ஒன்றிணைத்து கூட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அந்த திட்டங்களை செயல்படுத்த நமது மாவட்ட செயலாளர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.

அடுத்தது விவசாயத்தை நவீனமயப்படுத்த வேண்டும். விவசாய உற்பத்தியும், போட்டித் தன்மையையும் அதிகரிக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள், இதனை நவீனமயப்படுத்த வேண்டும். தேயிலை, தேங்காய், இறப்பர் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இதனைச் செய்தால் விவசாயத்தின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும்.

2050 இல் நமது மக்கள் தொகை 25 மில்லியனாக இருக்கும். வயது வந்தோர் அளவு அதிகமாக இருப்பார்கள். ஆனால் சவூதி அரேபியாவில் இருந்து இந்தோனேசியா வரை மக்கள் தொகை 500 மில்லியன் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். அப்போது அவர்களுக்கு தேவையான உணவுகளை நாங்கள் விநியோகிக்க முடியும். அதற்கு நாம் திட்டமிட வேண்டும்.

மேலும், மாவட்ட அலுவலகங்கள், பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் கிராமிய பிரிவுகள் ஏனைய பொருட்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நமது நடுத்தர, சிறு தொழில்களிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. வங்கிக் கடனை அடைக்க முடியாமல் பெரும் பிரச்சினை ஏற்படலாம். அடிமட்டத்தில் இருந்து என்ன நடந்தது என்பதைப் பார்த்து தேவையான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் பெரும் நெருக்கடி ஏற்படும். கிராம அளவில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டால், அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும்.

இந்த திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதனை விரைவில் ஆரம்பிக்க வேண்டும். இந்தப் பணிக்குத் தேவையான அனைத்து நிர்வாக நிறுவனங்களும் பிரதமரின் கீழ் உள்ளன. இதில் கவனம் செலுத்தி குறைகளை தவிர்த்து முன்னேறுங்கள். இதனை வெற்றியடையச் செய்ய நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

ஒக்டோபர் முதல் வாரத்தில் இந்தத் திட்டத்தை ஆரம்பிப்போம். இலங்கையின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கவும் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும் நீங்கள் அனைவரும் எமக்கு ஆதரவளிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.“ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக