மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை:வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. லொக்கேஷன் அறிவாலயத்தைக் காட்டியது. கொஞ்ச நேரத்தில் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று (செப்டம்பர் 22) முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் மாற்றப்பட மாட்டார்கள் என்றும் லியோனி தலைமையில் பட்டிமன்றம் வைக்காத குறைதான்.
ஏற்கனவே சபரீசன் மேற்பார்வையில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 15 மாவட்டச் செயலாளர்கள் செயல்பாடு சரியில்லாத காரணத்துக்காக ரெட் பட்டியலில் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மாற்றப்பட வேண்டும் என்று கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இப்படித்தான் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மாற்றப்படக் கூடும் என்று பேச்சு எழுந்த நிலையில், அவர் அறிவாலயத்துக்கு வந்து ஸ்டாலினை சந்தித்து கண்ணீர் விட்டு அழுது தனது மாவட்டச் செயலாளர் பதவியை தக்க வைக்க முயற்சி எடுத்தார்.
சீனியர்கள் மனது ஒருபோதும் நோகக் கூடாது என்று நினைக்கிறார் ஸ்டாலின். அதன் அடிப்படையில் இன்னும் சில பரிந்துரைகளை ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார் சபரீசன். அதாவது மாவட்டச் செயலாளர்களாக இப்போது இருக்கும் சீனியர்களுக்கு மாநில அளவிலான பதவிகளை வழங்கிவிடலாம். அதற்காக கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவிகளை அதிகரிக்கலாம்.
இப்போது அனைத்து மாவட்ட அமைப்புகளின் பிரச்சினைகள், பஞ்சாயத்துகளை தீர்க்க அமைப்புச் செயலாளராக ஆர்.எஸ்.பாரதி ஒருவர்தான் இருக்கிறார். அவரோடு துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை இருக்கிறார். இவர்களால் அனைத்து மாவட்ட கட்சிப் பஞ்சாயத்துகளையும் தீர்க்க முடியவில்லை.
எனவே இப்போது மிக சீனியர்களாக இருக்கும் ஏழு மாவட்டச் செயலாளர்களை அந்த பதவியில் இருந்து விடுவித்து விட்டு அதேநேரம் அவர்களின் அனுபவத்தை விட்டுவிட வேண்டாம்.
துணைப் பொதுச் செயலாளர்களாக அவர்களை நியமித்தால் அறிவாலயத்தில் தயிர் வடை சாப்பிட்டு விட்டு போய்விடுவதோடு அவர்களின் வேலை முடிந்துவிடும். ஆனால் அவர்களது அனுபவத்தை கட்சி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.எனவே சீனியர்களை உள்ளடக்கி ஏழு அமைப்புச் செயலாளர்களை உருவாக்கலாம்.
மூத்த மாசெக்களான கடலூர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ஈரோடு முத்துசாமி, நெல்லை ஆவுடையப்பன் மற்றும் மதுரை முத்துராமலிங்கம் உள்ளிட்டோரை அமைப்புச் செயலாளர்களாக ஆக்கலாம்.
அவர்களின் இத்தனை வருட அனுபவத்தைப் பயன்படுத்தி மொத்தமுள்ள சுமார் எழுபது மாவட்டங்களில் ஏழு அமைப்புச் செயலாளர்களுக்கும் தலா பத்து மாவட்டங்கள் என பிரித்துக் கொடுத்துவிடுவோம். அந்தந்த மாவட்ட உட்கட்சி விவகாரங்களை தீர்க்கும் பொறுப்பைக் கொடுத்துவிடுவோம் என்பதுதான் சபரீசனின் பரிந்துரை.
dmk sabareesan alternate plan submit to mkstalin
ஆனால் பொதுச் செயலாளர் துரைமுருகனோ, ‘தம்பீ… பார்லிமென்ட் எலக்ஷனுக்கு இன்னும் ஒரு வருஷம்தான் முழுசா இருக்கு. இந்த நிலைமையில சீனியர் மாவட்டச் செயலாளர்களை மாத்தினா அது சரியா வராதுனு நினைக்கிறேன்.
தேர்தல் நேரத்துல கோஷ்டிகளை அதிகமாக்கிட்டோம்னா கட்சிக்குதான் பிரச்சினை’ என்று தனது கருத்தையும் ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார். இதனால் ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களை மாற்றுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.
மேலும்… ஸ்டாலின் இளைஞரணிக்கு வந்தபோது ஆக்டிவ் ஆக இருந்த மாவட்டச் செயலாளர்கள்தான் இப்போது சீனியர்களாகி விட்டார்கள். ஒரு பக்கம் அன்று தனக்கு அவர்கள் தந்த ஆதரவு ஸ்டாலினின் கண் முன் வந்து போகிறது.
இன்னொரு பக்கம் கட்சியின் கட்டமைப்புக்காக அவர்களை மாற்ற வேண்டும் என்ற நிர்பந்தமும் ஸ்டாலினிடம் இருக்கிறது. சபரீசனின் இந்த அமைப்புச் செயலாளர் பதவிகள் பற்றிய ஆலோசனை முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது, இன்னும் முடிவெடுக்கவில்லை” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் சென்றது வாட்ஸ் அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக