மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகளில் தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த 2018-ம் ஆண்டு, மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் மீது போலீசார் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
விசாரணை+அறிக்கை
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது. பின்னர், தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை, மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய 17 காவல்துறையினரின் பெயர்களையும் குறிப்பிட்டு அறிக்கை அளித்தது. இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் 17 பேர் மீதும், துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட 3 தாசில்தாரர்கள் மீதும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இழப்பீடு கோரி வழக்குகள்
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்கக்கோரி ராஜ்குமார் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கோரி, விஜயகுமார் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இழப்பீடு+தண்டனை கோரி மனு
இதேபோல், துப்பாக்கிச் சூட்டில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்கக்கோரியும், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சந்திரசேகர் என்பவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.
அரசு சார்பில் விளக்கம்
இந்த வழக்குகுள் அனைத்தும், நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, விசாரணை அறிக்கை கடந்த மே மாதம் 18-ம் தேதி அரசிடம் சமர்க்கப்பட்டு விட்டது. அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வழக்குகள் முடித்து வைப்பு
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொடர்பாக மனுத் தாக்கல் செய்தவர்கள், தங்களது கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தலாம் என கூறினர். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக