சனி, 10 செப்டம்பர், 2022

இலங்கையின் விக்டோரியா அணைக்கட்டு . எலிசபெத் மகாராணியின் அன்பளிப்பு

kuruvi.lk  :  இலங்கையின் விக்டோரியா நீர்த்தேக்கமும், 2 ஆம் எலிசபெத் மகாராணியும்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி இலங்கையின் மிகப்பெரிய நீர்மின் நிலையம் – அதேபோல உயரமான அணை அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்க வளவில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் இன்று பறக்கவிடப்பட்டது. அத்துடன், வெள்ளைக்கொடியும் பறக்கவிடப்பட்டு அனுதாபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரத்துடன், இரண்டாம் எலிசபெத் மகாராணியை தொடர்புபடுத்தி பார்க்கையில், இந்த விக்டோரியா நீர்த்தேக்கத்தை மறந்துவிடமுடியாது. மகாராணி கருணை காட்டியதால்தான் , மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் உயிர் நாடியான – இலங்கைக்கு எல்லா விதத்திலும் முக்கியத்துவம் மிக்க அந்த வளம் இலங்கைக்கு கைகூடியது எனலாம்.
விக்டோரியா அணையானது, மகாவலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் நீர் மின்நிலையமும் உள்ளது. இதுவே இலங்கையின் மிகப்பெரிய நீர்மின்நிலையமாகும். அதேபோல உயரமான அணையாகவும் அமைந்துள்ளது.

விக்டோரியா செயல் திட்டத்தை முன்னெடுப்பதற்கான மதிப்பீடுகள் 1947 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் 30 வருடங்கள்வரை அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. அதற்கான பெருமளவு நிதி பலம் இலங்கையிடம் இருக்கவில்லை.

இந்நிலையில்தான் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர். ஜயவர்தன, குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக இங்கிலாந்திடம் கடன் கோர திட்டமிட்டிருந்தார்.

இதற்கமைய காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத்முதலி உள்ளிட்ட தமது அமைச்சர்களுடன் இங்கிலாந்து சென்று , இரண்டாம் எலிசபெத் மகாராணியை சந்தித்து, பேச்சு நடத்தியுள்ளனர்.

மேற்படி வேலைத்திட்டத்தின் முக்கதியத்துவம் பற்றி மகாராணிக்கு எடுத்துரைத்துள்ளதுடன், நிர்மாணிக்கப்படும் நீர்த்தேக்கத்துக்கு ‘விக்டோரியா மகாராணி’யின் பெயரே சூட்டப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எல்லா விடயங்களையும் கேட்டறிந்த 2 ஆம் எலிசபெத் மகாராணி, ‘விக்டோரியா மகாராணி’ பெயரில்தானே அமைகின்றது…, கடனாக அல்ல, நன்கொடையாகவே உதவி செய்கின்றோம் எனக் குறிப்பிட்டு, பிரதமரை சந்திக்குமாறு கூறியுள்ளார். (100 கோடிக்கு மேல் உதவி )
அப்போது இங்கிலாந்தில் பிரதமராக செயற்பட்டவர் இரும்பு சீமாட்டி என கருதப்பட்ட மாக்ரட் தட்சர். அவரை சந்தித்த பின்னர் , அவரும் பச்சைக்கொடி காட்டினார். இங்கிலாந்தின் பொறியியல் நிறுவனமொன்றே நிர்மாணப்பணிகளையும் முன்னெடுத்திருந்தது.

1978 இல் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகின. 1954 ஆம் ஆண்டுக்கு பின்னர், 1981 இல் 2 ஆவது தடவையாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட 2 ஆம் எலிசபெத் மகாராணி, நிர்மாணப்பணிகளை அவதானித்தார். 1985 இல் திறப்பு விழா நடைபெற்றது. பிரதம அதிதியாக இங்கிலாந்தின் அப்போதைய பிரதமர் மாக்ரட் தட்சர் பங்கேற்றிருந்தார்.

ஆர்.சனத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக