வியாழன், 1 செப்டம்பர், 2022

பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நோக்கம் - தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

நக்கீரன் : “பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நோக்கம்” - தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் உதவியால் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வரானார்.
இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று நிதிஷ்குமாரைச் சந்தித்தார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், “பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நோக்கம்" எனக் கூறியுள்ளார்.
2024 மக்களவை தேர்தலுக்கு பாஜகவிற்கு எதிரான அணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அனைத்து மாநிலங்களிலும் பாஜகவிற்கு எதிரான கட்சி தலைவர்களைச் சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில், நேற்று அவர் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரையும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவையும் சந்தித்து பேசினார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகு மாற்றுக்கட்சித் தலைவர்களுடன்  நிதிஷ்குமாருக்கு நடைபெற்ற சந்திப்பு என்பதால் முக்கியத்துவம் பெற்றது.

சந்திப்பிற்கு பின் பேசிய சந்திர சேகர ராவ், நிதிஷ்குமார் தன்னுடைய மூத்த சகோதரர் போன்றவர் என்றும் பாரதிய ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நோக்கம் என்றும் கூறினார். எதிர்க் கட்சிகளின் தலைவர் பற்றிய அறிவிப்புக்கு தற்போது அவசரம் இல்லை எனவும் உரிய நேரத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் கூறினார். இதற்கிடையே எதிர்க் கட்சிகள் ஒரே அணியில் இணைவது அவசியமென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பிற்கு எதிர்வினையாக பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, “ நிதிஷ்குமார் பிரதமர் ஆகும் கனவில் உள்ளார். ஆனால் அவரது தற்போதைய முதல்வர் பதவியே நெடுங்காலத்திற்கு நீடிக்காது. லாலு பிரசாத் கட்சியை பிளவுபடுத்தி தனது மகன் தேஜஸ்வி யாதவை முதல்வராக்குவார்” என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக