வியாழன், 15 செப்டம்பர், 2022

மீண்டும் இந்தி? அமித் ஷா பிரதமர் பதவிக்கு குறிவைத்து இந்தி வெறியை கையிலெடுக்கிறார்

tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :  சென்னை : இது இந்தியா. அதனை 'ஹிந்தி'யா என்ற பெயரில் பிளவுபடுத்திப் பார்க்கும் முயற்சிகள் வேண்டாம் என கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
முன்னதாக, கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியும் இந்தியைக் கொண்டாடும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு தென் மாநிலங்களில் இருந்து பரவலாக எழுந்துள்ள வன்மையான எதிர்ப்பு,
அமித்ஷாவின் இன்றைய பேச்சு மூலம் இன்னும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செயல்பாடுகள் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை முன்னிறுத்தும் வகையில் தொடர்ந்து இருந்து வருகிறது.
பாஜக அரசு இந்தியை உயர்த்திப் பிடிக்கும் போதெல்லாம், தமிழ்நாடு உள்ளிட்ட திராவிட நிலத்தில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், 'இந்தி மொழி நாள்' கொண்டாட்டம் மீண்டும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.
பெரியார் மண்ணில் இந்த நிலை.. சனாதன சக்திகளின் ஆட்டம்.. 'உஷார்'.. அரசுக்கு திருமா 'பகீர்’ எச்சரிக்கை! பெரியார் மண்ணில் இந்த நிலை.. சனாதன சக்திகளின் ஆட்டம்.. 'உஷார்'.. அரசுக்கு திருமா 'பகீர்’ எச்சரிக்கை!

அமித்ஷா + இந்தி
மத்திய பாஜக அரசால் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி திவாஸ் அல்லது இந்தி மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற இந்தி மொழி தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழி அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் நட்பு மொழி. இந்தியாவை ஒருங்கிணைக்கக் கூடிய மையமாக இருக்கிறது இந்தி மொழி. நம்
இந்திய வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள இந்தி மொழியை அனைவரும் கற்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.
கொந்தளிக்கும் திராவிட நிலம்
பாஜக அரசு தொடர்ச்சியாக இந்தி மொழியை முன்னிறுத்தி செய்து வரும் பணிகள் தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகின்றன. இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை வளர்க்க மிக அதிக நிதி ஒதுக்கப்படுவது, அரசு அலுவலகங்கள், விண்ணப்பங்கள், தேர்வுகளில் மற்ற மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவது அவ்வப்போது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று அமித்ஷா பேசிய பேச்சு, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னகத்தில் எழுந்த குரல்
முன்னதாக, கர்நாடகாவில் இந்தி மொழி நாள் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி, அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதினார். கர்நாடக மாநில அரசு இந்த் மொழி நாளை கொண்டாடினால் அது கன்னடர்களுக்கு இழைக்கும் துரோகம், ஆயிரக்கணக்கான மொழிகள், பன்முகத்தன்மை கொண்ட சமூக கலச்சார பண்பாடுகள் ஆகியவை தான் இந்தியாவை சிறந்த ஒன்றியமாக வைத்துள்ளது. அப்படிபட்ட நாட்டில், ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவது அநீதி எனக் கண்டித்தார்.

வெடித்த போராட்டம்
கர்நாடக அரசு சார்பில் இந்தி தினம் கொண்டாடப்படுவதை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கன்னட மொழியை தவிர்த்து இந்தி தினம் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூருவில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, ஜே.டி.எஸ். எம்.எல்.ஏக்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல கர்நாடகத்தின் பல்வேறு இடங்களில் கன்னட அமைப்பினர், பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

களமிறங்கிய ஸ்டாலின்
இந்த நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு. அந்த ஆதிக்க உணர்வை எதிர்த்து தாய்மொழி காத்திடத் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை அன்னைத் தமிழுக்கு ஈந்த தியாக வரலாற்றைக் கொண்டது எங்கள் தமிழ்நாடு.

ஹிந்தி யா?
இந்தி சட்டப்படியான தேசிய மொழியும் அல்ல, அது மட்டுமே ஆட்சி மொழியும் அல்ல. இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி உள்ளது. இந்தி பேசும் மாநிலங்கள் என சொல்லப்படும் பகுதிகளில் பேசப்பட்டு வந்த மைதிலி, போஜ்புரி, சந்தாலி, அவதி உள்ளிட்ட பல மொழிகள் இந்தி மொழியின் ஆதிக்கத்தால் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா. அதனை 'ஹிந்தி'யா என்ற பெயரில் பிளவுபடுத்திப் பார்க்கும் முயற்சிகள் வேண்டாம், இந்தி தினத்திற்குப் பதில் 'இந்திய மொழிகள் நாள்' கொண்டாடுங்கள் என கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மீண்டும் இந்தி பூகம்பம்
ஏற்கனவே பல முறை அமித்ஷா, இந்தி பற்றி பேசியது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் கூட மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திதான் இருக்க வேண்டும்; ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வரவேண்டும் என்று அமித்ஷா பேசினார். அப்போதே தென் மாநிலங்களில் மிகக் கடுமையான எதிர்வினைகள் எழுந்தன. இந்நிலையில் தான் மீண்டும், அமித்ஷா புயலைக் கிளப்பி இருக்கிறார். இந்த விவகாரம் மீண்டும் பெரிதாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக