மின்னம்பலம் : இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடக்க இருக்கிறது. 3-வது முறை பிரதமர் ஆவதற்காக மோடியும், மோடி அலைக்கு முடிவு கட்டுவதற்காக மாநிலக் ட்சிகளும் தற்போதே கூட்டணி குறித்து பேச களமிறங்கிவிட்டன.
தெலுங்கு தேசத்தில் கால் பதிக்கும் நோக்கோடு கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஐதராபாத்தில் வைத்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ சந்தித்த நிலையில்,
தேசிய அரசியலுக்கே டஃப் கொடுக்கும் விதமாக இன்று பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை சந்தித்துள்ளார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.
பொதுத் தேர்தலில் கொள்கைகளைக் கடந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவ்வளவு சுலபம் இல்லை என அரசியல் விமர்சகர்கள் பலர் ஆரூடம் கணித்தாலும் அதை எல்லாம் கடந்து கூட்டணிக்கான வெளிச்சம் தற்போது தெரியத் தொடங்கி உள்ளது.
பிரதமர் பதவிக்கு குறி வைக்கிறாரா நிதிஷ் குமார்?
பிகாரில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து அமித் ஷா-மோடி கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுத்த நிதிஷ் குமார், தற்போது எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும் பிகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமார் தான் தகுதியான பிரதமர் வேட்பாளராக இருப்பார் என பேசியிருந்தார்.
ஏற்கனவே 2014-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மோடியால் பிரதமர் வாய்ப்பை இழந்த நிதிஷ் குமார், இந்த முறை பிரதமர் பதவிக்கான குறி தப்பிவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.
பாஜகவுக்கு முடிவுகட்ட ஒன்றிணையும் எதிர்கட்சிகள்!
இதே போல, மத்திய பா.ஜ.க. அரசின் சிபிஐ, அமலாக்கத்துறை ரெய்டு மற்றும் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளால் நொந்துபோய் உள்ள கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுகட்ட மும்முரம் காட்டி வருகின்றனர்.
kcr met nitish kumar
இந்த கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தன்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில் காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா, பிகாரின் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரை அவர் ஒரே மேடையில் ஒருங்கிணைத்து காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைமையில் தான் தற்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ரேஸின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கிவிட்டுள்ளார் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார். சந்திரசேகர ராவுடனான அவருடைய சந்திப்பு பா.ஜ.க.வினருடைய புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.
பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவுடன் மேடையை பகிர்ந்துகொண்ட சந்திர சேகர ராவ், கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தெலங்கானா அரசு சார்பில் தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மத்திய பா.ஜ.க. அரசின் கீழ் அனைத்து அரசுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சாடினார்.
மாநிலக் கட்சிகள் பரம்பரைக் கட்சிகள் என பா.ஜ.க. பகடி பேசி வரும் நிலையில், பா.ஜ.க.வுக்கு பாடம் கற்பிக்க அதே மாநிலக் கட்சிகள் கைகோர்க்க முடிவு செய்துள்ளது தெளிவாகி உள்ளதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதேநேரத்தில்தான் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி குமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி நடைபயணம் மேற்கொள்கிறார்.
ஸ்டாலின் போன்ற தலைவர்கள் காங்கிரஸோடு இப்போது வரை உறுதியாக இருக்கிறார்கள்.
ஆனால் மற்ற மாநிலக் கட்சித் தலைவர்கள் காங்கிரசை எந்த நிலையில் வைத்துப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணிக்கான அர்த்தம் முழுமை பெறும்.
அப்துல் ராஃபிக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக