ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

அதானியின் கடன் 2.6 லட்சம் கோடி ரூபாய்! திவால் அறிவித்து விட்டு ஓடலாம்?

tamil.goodreturns.in - prasanna Venkatesh  :   கடனில் மிதக்கும் கௌதம் அதானி.. மொத்தம் எத்தனை கோடி தெரியுமா..?
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சுமார் 141 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ள கௌதம் அதானி-யின் அதானி குழுமம் கடனில் மிதக்கிறது.
உலகப் பணக்காரர்கள் மத்தியில் சில வருடங்களுக்கு முன்பு தான் டாப் 10 பட்டியலில் சேர்ந்த கௌதம் அதானி வேகமாக முன்னேறி உலகின் 3வது பெரும் பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார். தற்போது இவருக்கு மேல் 151 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜெப் பெசோஸ் மற்றும் 241 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
இந்த அதிரடி வளர்ச்சிக்கு அதானி குழுமத்தின் வர்த்தகம் விரிவாக்கம் முக்கியக் காரணமாக இருந்தாலும், தற்போது இக்குழுமத்தின் கடன் அளவு உச்சத்தைத் தொட்டு உள்ளது.

அதானி குழுமம்
அதானி குழுமம் சமீபத்தில் சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான ஹோல்சிம் நிறுவனத்தின் இந்திய வணிகங்கள் மொத்தமாக வாங்கியது. இந்த நிறுவ கையகப்படுத்தியதன் மூலம், அதானி குழுமத்தின் கடன் அளவு 40,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

5 வருடங்கள்
அதானி குழுமம் கடந்த 5 வருடங்களாகப் பல துறையில் பல வர்த்தகத்தைப் புதிதாகத் துவங்கியுள்ளது மட்டும் அல்லாமல் ஏற்கனவே இருக்கும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல நிறுவனங்கள், பங்குகள், சொத்துக்களை வாங்கியுள்ளது. இதில் பெரும்பாலானவை கடனில் செய்யப்பட்டது.

2.6 லட்சம் கோடி ரூபாய் கடன்
இதன் எதிரொலியாக அதானி குழுமத்தின் மொத்த கடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் குறைந்த காலகட்டத்தில் 2.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது எனக் கிரெடிட் சூயிஸ் ஆய்வறிக்கை கூறுகிறது.

வர்த்தக விரிவாக்கம்
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் கடன் அளவு கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 2.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதானி குழுமம் கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய அளவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.

முக்கியத் துறைகள்
அதானி குழுமம் துறைமுக வணிகத்தின் விரிவாக்கம், கிரீன் எனர்ஜிக்கான முதலீடுகள், டிரான்ஸ்மிஷன் வணிகத்தைக் கையகப்படுத்துதல் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் வாயிலாக விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் டேட்டா சென்டர் போன்ற புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த விரிவாக்கத்திற்குத் தான் அதிகப்படியான கடன்களைப் பெற்றுள்ளது அதானி குழுமம்

கிரெடிட் சூயிஸ்
கிரெடிட் சூயிஸ்-ன் ஆய்வாளர்கள் கூறுகையில் அதானி குழுமத்தின் மொத்தக் கடன் அளவுகள் 5 வருடத்தில் பெரிய அளவில் உயர்ந்திருந்தாலும், இக்குழுமம் தனது கடனை நீண்ட முதிர்வுக் காலத்துடன் கூடிய பத்திரங்கள் மற்றும் நிதி நிறுவன (FI) கடன் வழங்குபவர்களுக்குப் பன்முகப்படுத்தியுள்ளது.

5 ஆண்டுக் கடன்
2016 ஆம் நிதியாண்டின் இறுதியில் 1 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்த போது ஐந்து ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் கடனில் சுமார் 86 சதவீதம் இருந்தது. தற்போது கடன் அளவுடன் ஒப்பிடுகையில், இப்போது 26 சதவீதக் கடன் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடைகிறது என்றும் கிரெடிட் சூயிஸ் தெரிவித்துள்ளது.

18 சதவீதம் மட்டுமே
மேலும் அதானி குழுமத்தின் மொத்த கடனில் 30 சதவீதம் வெளிநாட்டு நாணய கடன்கள், இதேபோல் இந்நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பில் வெறும் 18 சதவீதம் மட்டுமே கடனில் உள்ளது. இந்தத் தரவுகள் அனைத்தும் அதானி குழுமத்திற்குச் சாதகமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக