ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

இலங்கை வடக்கு கிழக்கு இடைக்கால நிர்வாகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சகல தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு

Trial begins in 30-year-old Douglas Devananda case | Page 21 | Daily News

samugammedia.con  வடக்கு, கிழக்குக்கென இடைக்கால நிர்வாகம்!
தமிழ்க் கட்சிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிரங்க அழைப்பு.
“வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் சூழல் தற்போது இல்லாத பட்சத்தில் அந்த மாகாணங்களை நிர்வாகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் உள்ள சகல அரசியல் தரப்புகளையும் ஒன்றிணைத்து இடைக்கால நிர்வாகம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.”
இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழ்க் கட்சிகள் இது குறித்துப் பேசி தமக்குள் ஒரு பொது முடிவுக்கு வரவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் இதுவரை காலமும் தமக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நம் மக்களைக் கைவிட்ட வரலாற்றை நாங்கள் இனியும் தொடர முடியாது.

அதனை மாற்றி அமைத்து எமக்குள் ஒரு ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி, அந்த ஒருமித்த நிலைப்பாட்டை மத்திய அரசின் தலைமைக்குக் கொண்டு வர வேண்டிய ஒரு சரியான சந்தர்ப்பம் இப்போது எழுந்துள்ளது.

எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக தமிழ்க் கட்சிகள் தமக்கிடையே இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஒருமித்த நிலைப்பாட்டைக் கண்டு அதனை அரசிடம் சமர்ப்பிக்க முன் வர வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் நம்பிக்கை கொண்டு செயற்படுகின்ற நிலைமையை நாங்கள் காண்கின்றோம். அதேபோன்று அவரும் சிறுபான்மையினரின் கட்சிகளில் நம்பிக்கை கொண்டுள்ளார்.

எனவே, இந்தச் சந்தர்ப்பத்தையும் தற்போதைய அரசியல் சூழ்நிலையையும் நாங்கள் சரியாகப் பயன்படுத்தி ஒரு முன்நகர்வைக் காண முன்வர வேண்டும்.

முப்பது வருட கால யுத்தம் குறித்து இனியும் பேசிக் கொண்டிருப்பதில் பலன் இல்லை. அதனால் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும்.

நமக்கு இடையே தலைமை யார் என்கின்ற போட்டியைத் தவிர்த்து, தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காகச் சிந்தித்து, ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

இதனையே தமிழ் மக்களும், தமிழ் புத்திஜீவிகளும், மதத்தலைவர்களும், கல்விமான்களும், வர்த்தகர்களும் மாணவ சமூகத்தினரும் விரும்புகின்றனர்.

எனவே, இனியும் நாங்கள் இந்த விடயத்தைத் தட்டிக் கழிக்க முடியாது. தமிழ் கட்சிகள், தமிழ் மக்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோம். இந்த முயற்சிக்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.

எனக்குத் தலைமை தாங்க வேண்டும் என்ற எண்ணம் துளி அளவும் இல்லை. இந்த நல்ல விடயத்துக்கு யார் முன் நின்று தலைமை தாங்கி நடத்தினாலும் அவர்களுடன் இணைந்து செல்ல – இணைந்து பயணிக்க – நான் தயாராகவே இருக்கின்றேன்.

எனவே, பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதை விடுத்து சகலரும் ஒன்றிணைந்து இந்த நல்ல பணியை முன்னெடுப்போம் என்று அனைத்துத் தமிழ் கட்சித் தலைமைகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் நான் பகிரங்கமாகவே அழைப்பு விடுக்கின்றேன்” – என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக