வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

இலங்கைக்கு கடன் வழங்குனர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயார்! சீனா தயாரா?

hirunews.lk  :  இலங்கைக்கு கடன் வழங்குனர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாக ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையை அதன் மோசமான கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து கடன் வழங்கும் நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு டோக்கியோ தயாராக உள்ளது.
எனினும் அதில் இலங்கையின் முன்னணி கடன் வழங்குனரான சீனா இணையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அத்துடன் இலங்கையின் நிதி பற்றிய தெளிவின்மை இன்னும் உள்ளதாக ரொயட்டர் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருதரப்பு அடிப்படையில் இலங்கையின் கடன் 6.2 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதனை தீர்ப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்தும் பட்சத்தில் சீனாவுடனான அத்தகைய சந்திப்பிற்கு ஜப்பான் தலைமை தாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பிரதான கடன் வழங்கும் நாடுகளை அழைக்குமாறு ஜப்பானை இலங்கை கோரும் என்று இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும்போது அடுத்த மாதம் டோக்கியோவில் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் ஜப்பானிய தரப்புக்களின் இந்த முயற்சி தொடர்பில் ஜப்பானிய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக