செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

விடாத பிடிஆர்.. எதிர்கட்சிங்க இலவசம் தந்தா மட்டும் சட்ட விரோதமா?.. பரபர கேள்வி.. ஆதாரத்துடன் விளாசல்

May be an image of 2 people and text that says '23-08-2022 ஜனியர்'tamil.oneindia.com  -  Shyamsundar :  சென்னை: எதிர்க்கட்சிகள் இலவசங்களை வழங்கினால் மட்டும் அது சட்ட விரோதமா என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேர்தல் நேரத்தில் இலவச வாக்குறுதிகளை வழங்குவதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இன்று திமுக வழக்கறிஞர் எம்பி வில்சன் வாதிடும் போது தலைமை நீதிபதி ரமணா குறுக்கிட்டு முக்கிய கருத்து தெரிவித்தார்.
அதில், உங்கள் கட்சியை பற்றி நான் நிறைய சொல்ல வேண்டும். நீங்கள் மட்டும்தான் புத்திசாலி கட்சி என்று நினைக்கவேண்டாம். நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை என்று நினைக்காதீர்கள். நீங்கள் சொல்வதை நாங்கள் கவனிக்காமல் இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள், என்று குறிப்பிட்டார்.
இதனால் தமிழ்நாட்டில் இலவசங்கள் தொடர்பான விவாதம் தீவிரம் அடைந்துள்ளது.

இலவசம்
தமிழ்நாட்டில் இலவசங்கள் குறித்து தொடர்ந்து கருத்து கூறி வருவது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்தான். சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூட எங்களுக்கு அறிவுரை சொல்பவர்களுக்கு முதலில் சட்ட ரீதியான அனுமதி இருக்க வேண்டும். உங்களின் சாதனைகள், செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லாம். நீங்கள் கடனை அடைத்துவிட்டீர்கள், பொருளாதாரத்தை சரி செய்துவிட்டீர்கள், தனி நபர் வருமானத்தை உயர்த்திவிட்டீர்கள் என்றால் உங்கள் பேச்சை நாங்கள் கேட்கலாம். அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?, என்று குறிப்பிட்டார்.

விமர்சனம்
இலவசங்களை கொடுக்க கூடாது என்று எங்காவது சட்டத்தில் சொல்லி இருக்க வேண்டும். அது இல்லை. அல்லது இப்படி சொல்பவர்கள் துறை வல்லுனர்களாக இருக்க வேண்டும். அதாவது பொருளாதார நோபல், பிஎச்டி.. அல்லது இந்த துறைகளில் நீங்கள் எங்களை விட சிறந்தவர் என்று சொல்வதற்கான ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் நீங்கள் எப்படி இதை செய்ய கூடாது என்று சொல்ல முடியும். ஆனால் தமிழ்நாடு அரசிடம் இதெல்லாம் இருக்கிறது, என்று பிடிஆர் குறிப்பிட்டு இருந்தார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இந்த நிலையில் இன்றும் இலவசங்கள் குறித்து சரமாரி விமர்சனங்களை பிடிஆர் வைத்துள்ளார். அதில், பாஜக எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் நேரடியாக வெற்றிபெற வேண்டும் என்றால் இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கிறது (தேர்தலுக்கு பின் எம்எல்ஏக்களை காசு கொடுத்து இவர்கள் வாங்குவது வேறு கதை). பாஜக இபப்டி எதிர்க்கட்சியாக இலவசங்களை அறிவிப்பது மட்டும் சரி. அது மட்டும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா? பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் இலவசங்களை வழங்கினால் மட்டும் அது சட்ட விரோதமா என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

என்ன நியாயம்?
இதற்கான வாக்குறுதி ஆதாரங்களையும் பிடிஆர் வெளியிட்டுள்ளார். உத்தர பிரதேசம்,ஹரியானா , பஞ்சாப், புதுச்சேரி எல்லாம் பாஜக அரசுதான். இவர்கள் எல்லாம் பிரதமர் மோடியின் இலவசங்களுக்கு எதிரான கருத்துக்கு எதிராக செயல்படுகிறார்களா? இல்லை என்றால் எதிர்க்கட்சிகளுக்கு ஒருநியாயம், ஆளும் பாஜக கட்சிக்கு ஒரு நியாயமா? என்ன நியாயம் இது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக