புதன், 3 ஆகஸ்ட், 2022

காட்டாற்று வெள்ளத்தில் தவித்த காட்டுயானை.. மனித நேயத்தோடு மீட்ட கேரள அரசு

கலைஞர் செய்திகள் : கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய காட்டுயானையை மீட்க அம்மாநில அரசு எடுத்துள்ள முயற்சி பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
கேரளாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல பகுதியில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கும் பணியை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இதனிடையே காடுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வனவிலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய காட்டுயானையை மீட்க அம்மாநில அரசு எடுத்துள்ள முயற்சி பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

கேரள மாநில திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அருகே சாலக்குடி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. இந்த வெள்ளத்தில் ஒற்றை ஆண் காட்டுயாணை சிக்கிக்கொண்டுள்ளது. வெள்ளத்தில் இருந்து வெளிவரமுடியாமல் யானை திணறியது.

ஒருகட்டத்தில் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்ட யானை அங்கிருந்த மரத்தின் அருகே பாதுகாப்பாக நின்றது. மேலும் யானையின் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பழங்குடியின மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் யானையை மீட்க முயற்சித்தனர். ஆனால் வெள்ளம் அதிமாக இருந்ததால் மீட்க முடியாமல் போனதைத் தொடர்ந்து, யானை காப்பாற்ற அணையின் ஷட்டரை அடைத்துள்ளனர். பின்னர் நீர்வரத்து குறைந்ததும் யானை மறு கரையை அடைந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக