திங்கள், 1 ஆகஸ்ட், 2022

ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களை காப்பாற்ற முயலவில்லை .. மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி

அசாத் சாலியின் கருத்து தொடர்பில் விசாரிக்க சிஐடி குழு நியமனம்

ஜாவ்நா முஸ்லீம் : ராஜபக்‌ஷக்களைப் பாதுகாக்கத்தான் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலில் முன்னிலைப் படுத்தப்பட்டதாகவும், இதற்காகவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகளவான எம்.பிக்கள் வாக்களித்தனர் என்பதும் எதிர்க்கட்சிகளின் வங்குரோத்துப் பிரச்சாரம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும்  மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்தார்.
கேள்வி:- ராஜபக்ஷக்களின் எதிர்காலத்தை மீளக்கட்டி எழுப்பும் நோக்குடனே புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொதுவாக விமர்சிக்கப்படுகிறது. இதிலுள்ள உண்மைகள் என்ன?


பதில்:- எவ்வித உண்மைகளும் இதில் இல்லை. அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் அவிழ்த்துவிட்ட வங்குரோத்து பிரச்சாரங்களே இவை. தென்னிலங்கை முற்றாக ராஜபக்‌ஷக்களை கைவிட்டுள்ள நிலையில், ரணிலால் மட்டுமல்ல எந்த அரசியல் சக்திகளாலும் அவர்களை மீளவும் அரசியலில் நிமிர்த்த.முடியாது. எதையாவது சொல்லி மக்களை குழப்பும் நோக்கில் இப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை இன்னுஞ் சில காலங்களுக்குத்தான். பின்னர், புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகள் அனைவரையும் கவர்ந்துவிடும்.

கேள்வி:-  ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளில் நல்லாட்சி அரசாங்கம் நடந்துகொண்ட விதங்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? இதில் பல சந்தேகங்கள் இருக்கிறதே.

பதில்:- நீதியமைச்சராக இருந்த விஜயதாஸ ராஜபக்‌ஷதான் இவர்களுக்கு எதிரான வழக்குகளை அவதானித்து, தேவையான சட்ட நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார். பின்னர், இவரது நிலைப்பாட்டில் சந்தேகம் மற்றும் சர்ச்சைகள் எழுந்து, தலதா அத்துக்கோரள நீதியமைச்சராக நியமிக்கப்பட்டார். விஷேட நீதிமன்றங்களை அமைத்து ராஜபக்‌ஷக்களை தண்டிக்கும் வரைக்கும் அந்த நகர்வுகள் முனைப்படைந்தன. பின்னர் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் அனைத்தும் தலைகீழாகின. எனவே, இதிலிருந்தாவது புரியவில்லையா ரணில் எவரையும் காப்பாற்றவில்லை என்பது.

கேள்வி:- புதிய ஜனாதிபதியின் முதற்கட்ட நடவடிக்கையே பலரையும் திகைக்க வைத்துள்ளதே! காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து விரட்டப்பட்ட விதத்தை சர்வதேசம் கண்டித்தல்லவா இருக்கிறது.?

பதில்:- மூன்று மாதங்களாக நாட்டின் நிர்வாகத்தை இயக்கும் முக்கிய அலுவலகங்களை முடக்கி, ஆர்ப்பாட்டம் செய்வதை அமைதியான ஆர்ப்பாட்டம் என்று சொல்ல முடியாது. இவர்களிடம் இருந்தவை அனைத்தும் திட்டமிட்ட அரசியல் நிகழ்ச்சிகள். ஏதோ ஒரு சக்தி, பின்னாலிருந்து இந்த "அரகலகாரர்களை" இயக்கிய இரகசியங்கள் எல்லாம் இப்போது வௌிச்சத்துக்கு வருகின. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்த இடங்களைப் பாருங்கள். ஷங்ரிலா ஹோட்டல், கோல்பேஸ் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், துறைமுக நகர், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகங்களையே இவர்கள் சுற்றிவளைத்தனர்.

சுற்றுலாத் துறையினர் வந்துபோகின்ற பிரதேசங்களே இவை. இவ்விடங்களை மறித்து மாதக்கணக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினால், அரச இயந்திரம் இயங்குவதில்லையா? சுற்றுலாத்துறையினர் வருவதில்லையா? இதற்காகத்தான், இவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஜனநாயக செயற்பாடுகள், சிவில் சமூக செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் இல்லாதிருக்க வேண்டும். ஆனால்,  ஆர்ப்பாட்டக்காரர்கள் முழுக்க, முழுக்க சிவில் செயற்பாடுகளை குழப்பிக்கொண்டே இருந்தனர். ஆர்ப்பாட்டம் செய்வது, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதெல்லாம் ஜனநாயக செயல்பாடுகளில் உள்ளவைதான். இதற்காகத்தான், விகாரமாதேவி பூங்கா மற்றும் ஹைட்பார்க் விளையாட்டுத்திடல் போன்ற ஒதுக்குப்புறங்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

கேள்வி:- சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் முயற்சிகளில் மும்முரம் காட்டுகிறது அரசு. மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதை தடுக்கவா அல்லது பொருளாதார பிரச்சினையை தீர்க்கத்தானா?

பதில்:- ஆர்ப்பாட்டங்கள் எதற்கும் அரசாங்கம் அஞ்சவில்லை. அதற்காகத்தானே, இதற்கென பொது இடங்களை ஒதுக்கியுள்ளோம். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் ஸ்திரம் அவசியம். மேலும், ஒத்துழைப்பு அரசியல் இன்றைய நெருக்கடிக்கு அவசியப்படுகிறது அவ்வளவுதான்.

கேள்வி:- ஜனாதிபதி அழைக்கிறார் என்பதற்காக எதிர்க்கட்சிகள் எல்லாம் இந்த அரசுடன் இணையுமென்று எதிர்பார்க்க முடியுமா?

பதில்:- நேர்மையாகச் சிந்திக்கும் மக்களின் அவலங்களை போக்க விரும்பும் கட்சிகள் இணையும் என்றே எதிர்பார்க்கிறேன். எல்லோரும் இணைந்தால் ஆறுமாதங்களில் நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும். மூன்று மாதங்களில் இதற்கான ஸ்திரம் ஏற்பட்டும்விடும். பொருளாதாரத்தில் முக்கியம் வகிப்பது போக்குவரத்து. இதற்கு எரிபொருள் அவசியம். இவை முறையாக வந்தால் வரிசைகள் மற்றும் சிரமங்கள் நீங்கி விடும்.

கேள்வி:- ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டலஸுக்கு முஸ்லிம் தலைமைகள் எதையாவது நிபந்தனையாக முன்வைத்தமை குறித்து ஏதாவது உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் சற்று விளக்குங்களேன்.

பதில்:- வழமையாக பேசுவதைப் பேசியிருப்பார்கள். வழமையான பதிலைப்போல் தருவதாகச் சொல்லப்பட்டிருக்கும். இதுவல்ல விடயம். போட்டியிட விரும்பிய சஜித் பிரேமதாஸ முஸ்லிம் தலைமைகளுடன் பேச்சு நடத்தியது சகலருக்கும் தெரியும். அதேபோன்று, போட்டியிலிருந்து விலகுவது குறித்து எந்த முஸ்லிம் தலைமையுடன் பேசினார்? தனது டுவிட்டரில் தன்னை வேட்பாளராக அறிமுகப்படுத்திக்கொண்டு பாராளுமன்றம் புறப்பட்ட சஜித் பிரேமதாஸ, திடீரென போட்டியிலிருந்து விலகி, டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக அறிவித்தார்.

எனவே, நிச்சயமாக  எந்தப் பேச்சுக்களும் நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பரவாயில்லை, இவ்வாறு தங்களை ஆலோசிக்காது பெறப்பட்ட முடிவில் இணக்கம் இல்லை என்பதை தெரிவிக்க, ஜனாதிபதி தெரிவில் வாக்களிக்காமல் நடுநிலை வகித்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால், இனவாதிகளான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, அத்துரலியே ரத்ன தேரர், சன்ன ஜயசுமான போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டுச்சேர்ந்த பாவத்திலிருந்தாவது தவிர்ந்திருக்கலாம்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து நாசகார செயற்பாடுகளுக்கும் இவர்கள்தானே பிரதானம். ஈஸ்டர் தாக்குதலை முஸ்லிம்களின் தலையில் சுமத்தி, அதற்காக முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டுமென உண்ணாவிரதமிருந்தவர் அத்துரலியே இல்லையா? முஸ்லிம்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லை, இங்கு அடிமையாக வாழ வேண்டும், இல்லாவிடின் அரேபியாவுக்குச் செல்ல வேண்டுமென விமல் வீரவன்ச கூறியதை அவர்கள் மறந்திருக்கலாம். நாங்களும், எங்களது முஸ்லிம் தாய்மார்களும் மறக்கவில்லை. ஹராம், ஹலால் மற்றும் எமது சகோதரிகளின் புனித ஆடையான ஹபாயாவை கழற்றி எறியுமாறு கேவலப்படுத்திய கம்மன்பில, முஸ்லிம் தலைமைகளுக்கு நண்பர்களாக இருக்கலாம். ஆனால், இன்று மட்டுமல்ல இறுதி வரைக்கும் எங்களுக்கும், இஸ்லாத்துக்கும் இவர்கள் எதிரிதான்.

கேள்வி:- புதிய ஜனாதிபதியின் அரசாங்கத்தில் ஏதாவது பதவிகள் அல்லது பொறுப்புக்கள் உங்களுக்கு கிடைக்கலாமென பேசப்படுகிறதே.

பதில்:- பதவிகளை எதிர்பார்த்து செயற்படுவது எனது கொள்கையிலே இல்லை. இறைவன் எனக்கு போதுமான பொருளாதார வசதிகளை தந்திருக்கிறான். மக்களுக்காக எனது பதவிகளை மூன்று தடவைகள் ராஜினாமா செய்திருக்கிறேன். மேல்மாகாண ஆளுநர், மத்திய மாகாண சபை உறுப்பினர், இன்னும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி  பதவி என்பவைகளே அவை.

கேள்வி:- மக்களால் தேந்தெடுக்கப்பட்டாலே நாட்டின் பொறுப்புக்களை ஏற்பேன், குறுக்கு வழிகளால் இல்லை என சஜித் பிரேமதாஸ சொல்வதிலிருந்து எதைப் புரிந்துகொள்ளலாம்?

பதில்:- எதையுமே புரிந்துகொள்ள முடியாதிருக்கிறது. பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க ஐந்து வருடங்கள் தேவைப்படும் என்கிறார். ஆனாால், இன்னும் இரண்டரை வருடங்களே எஞ்சியுள்ள ஜனாதிபதிப் பதவிக்கு பாராளுமன்றத்தில் போட்டியிடவும் முனைந்தார். இதில் இன்னொரு புதுமையும் இருக்கிறது. மக்களால் நேரடியாக தெரியப்பட்டால்தான் பதவிகளை ஏற்பேன் என்று கூறியவாறே, எம்.பிக்கள் வாக்களிக்கும் தேர்தலில் களமிறங்க நெருங்கினார்.

நெருக்கடியான நேரத்தில் பிரதமர் பதவியை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்த அழைப்பை நிராகரித்த சஜித், அதே பிரதமர் பதவியை ரணில் பாரமெடுக்க முன்வந்தபோது, தானும் தயாரென மீண்டும் அறிவித்தார். இவ்வாறு குழம்பிய நிலைப்பாடுகளையே தற்போது சஜித் பிரேமதாஸவிடம் காண முடிகிறது. ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்க வேண்டுமென்ற அவரது குறி, சஜித்தை குழப்பியுள்ளது. அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் ஆகக் குறைந்த அரசியல் சாணக்கியமும் அவரிடம் இல்லை.

கேள்வி:- அரச சொத்துக்கள் மற்றும் அரச அலுவலகங்களை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு, அரசாங்கம் சட்ட நடவடடிக்கை எடுக்க இருக்கிறதா? இது குறித்து அரச உயர்மட்டத்தின் நிலைப்பாடு என்ன?

பதில்:- அரச சொத்துக்கள் என்பது பொது மக்களுடையது. ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமரின் அலரிமாளிகை, பிரதமரின் அலுவலகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள ஆவணங்களை தீயிட்டு எரித்துள்ளனர். இதில், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பவற்றின் உறுதிமொழிக் கடிதங்களும் எரிந்துள்ளன.

வரலாற்றில், என்றும் நடந்திராத அவமானமிது. இனிமேல் இவ்வாறு நடக்க கூடாது. அவ்வாறு நடக்காத வகையில், சிலருக்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. நாளைக்கு யார் ஜனாதிபதியானாலும் அல்லது பிரதமரானாலும் இந்த அலுவலங்களையே பயன்படுத்துவர். எனவே, இந்த அலுவலகங்களை  ஆக்கிரமித்தது, அசிங்கப்படுத்தியது, எமது எதிர்கால தலைவர்களை அவமதித்தது போன்றதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக