சனி, 27 ஆகஸ்ட், 2022

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு வழங்கினார்

ரஞ்சன் அருண் பிரசாத்      பிபிசி தமிழுக்காக  : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சரும், இலங்கையின் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பு ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) முற்பகல் கையெழுத்திட்டிருந்தார்.
இதையடுத்து, குறித்த ஆவணங்கள் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், நீதி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால், அந்த ஆவணங்கள் சிறைச்சாலை திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியில், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்ஜன் ராமநாயக்க கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
ரஞ்ஜன் ராமநாயக்க
இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணைகளை நடத்திய உயர்நீதிமன்றம், 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், ரஞ்ஜன் ராமநாயக்கவை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு விடுதலை வழங்காத பின்னணியில், கொலை குற்ற வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இந்த செயற்பாட்டிற்கு பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில், புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, ரஞஜன் ராமநாயக்கவிற்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்ஜன் ராமநாயக்க சத்தியக் கடதாசி ஒன்றை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் சமர்ப்பித்திருந்தார்.

தான் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் பிழையானவை எனவும் அந்த கருத்துக்களினால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறையினர் அனைவருக்கும் அகௌரவம் ஏற்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாகவும் சத்தியக் கடதாசி மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

தனது கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு தான் வெளியிட்ட கருத்துக்களை மீளப் பெற்றுக்கொள்வதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க நீதிமன்றத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலத்தில் நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவோ, செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடுன் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்வாறான உறுதிமொழிகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஏற்படும் வெற்றிடத்தின் முதலாவது சந்தர்ப்பத்தில், தேசிய பட்டியல் ஊடாக ரஞ்ஜன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை சிங்கள திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் என கருதப்படும் ரஞ்ஜன் ராமநாயக்க, 2008ம் ஆண்டு சபரகமுவ மாகாண சபையின் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தார்.
அதன்பின்னர், 2010ம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக நாடாளுமன்ற பிரவேசித்தை பெற்றார்.

இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.
இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதன் ஊடாக, நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டது.சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதன் ஊடாக, அவருக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என மூத்த சட்டத்தரணி இளையதம்பி தம்பையா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக