புதன், 10 ஆகஸ்ட், 2022

தேசியக்கொடி வாங்கலைனா ரேஷன் பொருள் இல்லை..? - ‘நாட்டுக்கே வெட்கக்கேடு’ - கொந்தளித்த ராகுல்,

Vignesh Selvaraj - Oneindia Tami :  சன்டிகர் : பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் தேசியக்கொடியை வாங்கினால் தான் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும் எனக் கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வீடு தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்ட நிலையில், இந்த ஆண்டு அரசு சார்பில் தபால் நிலையங்கள் வாயிலாகவே தேசியக்கொடி விற்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரேஷனில் பொருட்கள் வாங்குவோர் கட்டாயமாக தேசியக் கொடியை வாங்க வேண்டும் இல்லாவிட்டால் ரேஷன் பொருட்கள் அளவு குறைக்கப்படும் என ரேஷன் கடை ஊழியர் மிரட்டும் வீடியோவை பகிர்ந்துள்ள பாஜக எம்.பி வருண் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மூவர்ணக்கொடியுடன், பாஜக அரசு நம் நாட்டின் ஏழைகளின் சுயமரியாதையையும் தாக்குகிறது எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

திமுகவினர் வீடுகளில் தேசியக்கொடி! கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும்! அண்ணாமலை வேண்டுகோள்! திமுகவினர் வீடுகளில் தேசியக்கொடி! கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும்! அண்ணாமலை வேண்டுகோள்!

தேசியக்கொடி ஏற்றுங்கள்
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடும் வகையில் வீடு தோறும் தேசியக்கொடி ஏற்றும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி வரும் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக தபால் அலுவகங்களில் தேசியக்கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.

ரேஷன் பொருட்கள் குறைப்பு
இந்நிலையில் பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் ரேஷன் கடைகளில் ரூபாய் 20 கொடுத்து தேசியக்கொடி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரேஷன் கடைகளில் தேசியக் கொடியை வாங்கும்படி மக்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும், 20 ரூபாய் கொடுத்து தேசியக்கொடி வாங்காவிட்டால் ரேஷன் பொருட்கள் அளவு குறைக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொடி வாங்கினால்தான் ரேஷன்
இதுகுறித்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ரேஷன் கடை ஊழியர் ஒருவர், தேசியக்கொடியை ரூ. 20 கொடுத்து வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தேசியக்கொடி வாங்க மறுப்பவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கக்கூடாது என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாஜக எம்.பி கண்டனம்
இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. எம்.பி வருண் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ரேஷன் கார்டுதாரர்கள் தேசியக் கொடியை வாங்கும்படி கட்டாயப்படுத்தப் படுகின்றனர். அவர்களுக்கு உரிமையுள்ள உணவு தானியங்கள் மறுக்கப்படுகின்றன. தேசிய கொடிக்கான விலைக்காக ஏழைகளின் உணவைப் பறிப்பது வெட்கக்கேடானது" எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி காட்டம்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மூவர்ணக்கொடி நமது பெருமை, அது ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் உள்ளது. தேசியத்தை ஒருபோதும் விற்க முடியாது. ரேஷன் கொடுக்கும்போது, ​​ஏழைகள் மூவர்ணக்கொடிக்கு 20 ரூபாய் கேட்கப்படுவது வெட்கக்கேடானது. மூவர்ணக்கொடியுடன், பாஜக அரசு நம் நாட்டின் ஏழைகளின் சுயமரியாதையையும் தாக்குகிறது" என்று ராகுல் காந்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

லைசென்ஸ் ரத்து
இந்த வீடியோ தீயாகப் பரவியதை அடுத்து, அந்த ரேஷன் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மக்களின் வசதிக்காகத்தான் ரேஷன் கடையில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. விருப்பப்படுபவர்கள் அவற்றை வாங்கிக்கொள்ளலாம். கட்டாயப்படுத்தி வாங்கச் சொன்னால் அது குறித்து புகார் செய்யலாம் என மாவட்ட ரேஷன் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக