விக்டர் ஐவன் - ஊடகவியலாளர்/ கல்விமான்)
நாட்டில் விசித்திரமான முறையில் விஷயங்கள் நடந்து வருகின்றன.
போராட்டக்காரர்களின் விருப்பு வெறுப்புகள் எதுவாக இருந்த போதும்,
போராட்டமானது அரசியல் அர்த்தத்தில் வழங்கிய முக்கியமான முடிவுகளில் ஒன்று பின்வருமாறு;
மிகப் பெருமளவான பொதுமக்களின் வாக்குப் பலத்துடன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்த, ஆட்சியதிகாரம் குறித்து எதுவுமே அறிந்திராத கோட்டாபய ராஜபக்ஷ,
தனது பதவிக்காலத்தில் பாதி நிறைவடைந்திருந்த நிலையில் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு,
ஒரே ஒரு ஆசனத்தை மட்டுமே உரித்தாக்கிக் கொண்டிருந்த , ஆட்சியதிகாரம் குறித்து நன்கு அனுபவம் வாய்ந்தவராக கருதப்படக்கூடிய ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் விருப்பின் பிரகாரம் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அவர் அந்தப் பதவிக்கு அமர்த்தப்பட்டபோது, தொடர்ச்சியாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் தவிர்த்து வரப்பட்டிருந்த காரணத்தினாலும்,
போராட்டக்காரர்களினால் ஏற்படுத்தப்பட்ட சவால்களின் முன்னும் தாக்குப்பிடிக்க முடியாமல் அரசு வீழ்ச்சியடையும் கட்டத்தில் இருந்தது.
பாரம்பரிய ஆட்சியாளர்களின் அரசை நிர்வகிக்கும் திறனும் பாரியளவில் இழக்க்ப்பட்டுப் போயிருந்ததால், போராளிகள் ஒரு கட்டத்தில் ஓரளவுக்கு அரசாங்கத்துக்கே கட்டளையிடும் அதிகாரத்தைப் பெறுமளவு அவர்களின் கை ஓங்கியது.
ஜனாதிபதி கோட்டாபயவின் பலவீனமான நிர்வாக முறையும் அந்த நிலைமை ஏற்படக் காரணமாக இருந்தது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற முதல் 48 மணித்தியாலங்களில் பாதுகாப்புப் படையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி,
போராளிகள் அரசிடமிருந்து பறித்திருந்த அதிகாரத்தை மீட்டு,
ஆட்சி நிர்வாக விடயத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த அராஜக நிலைமையை பெருமளவில் ஒழித்தார்..
புதிய ஜனாதிபதியின் கொள்கை போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும் விதியின் திருப்பமாக போராட்டக்கள செயல்பாட்டாளர்களின் முக்கிய அபிலாஷையாகக் கருதப்படும் "கட்டமைப்பில் ஆழமான மாற்றத்திற்கு" அவசியமான ஒரு கட்டமைப்பு சீர்திருத்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தின் வாயில்களைத் திறக்கும் கதாபாத்திரத்தை செயற்படுத்தும் நபராக,
பொதுமக்களால் அன்றி, வரலாற்றால் தெரிவுசெய்யப்பட்ட கதாபாத்திரமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாறியுள்ளார்.
சீர்குலைவு
2010 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததில் இருந்து, கட்டமைப்பில் ஆழமான மாற்றத்திற்கு வழிவகுக்கும் கட்டமைப்பு சீர்திருத்தத் திட்டத்திற்கு நாட்டை வழிநடத்த்ப்படாது போனால்,
நாடு பெரும் அழிவுக்கு தள்ளப்படும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன்.
இரண்டு பயங்கரமான மற்றும் மிகப்பெரிய கிளர்ச்சிகளை அரசு முறியடித்திருந்தாலும்,
அதன் பிறகும் தேசம் நல்ல நிலையில் அன்றி, அந்த கிளர்ச்சிகளால் ஏற்பட்ட கடுமையான காயங்களால், அது பலவீனமான மற்றும் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது.
கலவரத்தை அடக்கிய பாதுகாப்புப் படையினராலும் சிங்கள தமிழ் கிளர்ச்சியாளர்களாலும் பெருமளவிலான மக்களின் உயிர்கள் அழிக்கப்பட்டன,
அதனிலும் பார்க்க அதிகமான மக்கள் துன்புறுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர்.
கிளர்ச்சியாளர்களும் பாதுகாப்புப் படையினரும் போட்டி போட்டுக் கொண்டு சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விட்ட கொடூரம் சமூக மனதை சிதைத்து நோயுறச் செய்திருந்தது.
சட்டத்தை மேவி நிற்கும் ஒரு நிறைவேற்று ஜனாதிபதியைக் கொண்ட அரசியல் அமைப்பைப் பேணுவதால், நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பும் சமநிலையும் முற்றாக சிதைந்து,
ஒட்டுமொத்த நிறுவன கட்டமைப்பிலும் வியாபித்து ஊழல் என்பது ஒரு பயங்கரமான புற்றுநோயாக மாறியது,
சமூக அமைப்பில் இருக்க வேண்டிய நல்லிணக்கமும் ஒருங்கிணைவும் முற்றிலுமாக சிதைந்துவிட்டது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளும் ஒழுங்கற்ற மற்றும் தறிகெட்ட நிலையில் நிகழ்ந்து கொண்டிருந்தன.
ஆழமான சீர்திருத்தத் திட்டத்திற்கு நாட்டை வழிநடத்தாவிட்டால், ஒட்டுமொத்த அமைப்பும் சரிந்து,
நாடு அராஜக நிலைக்குத் தள்ளப்படும் என்பதை நான் அவதானித்திருந்தேன்.
உள்நாட்டுப் போரின் முடிவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குறித்த நிலைமையை விளக்க முயற்சித்த போதும்,
யுத்த வெற்றி கண்ணை மறைத்திருந்த ஜனாதிபதியால் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்த வேலைத்திட்டமும் நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடியின் அளவுக்குப் பொருத்தமான சீர்திருத்த வேலைத்திட்டமாக இருக்கவில்லை.
மாத்தறையில் நடபெற்ற மங்கள சமரவீர அவர்களின் வாழ்க்கை வரலாற்று வெளியீட்டு நிகழ்வில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து நான் ஆற்றிய உரையினாலும் அ
தற்கு அவர் நேர்மையாக பதிலளித்ததினாலும் மீண்டும் நானும் மங்கள சமரவீரவும் நெருங்கிய அரசியல் நண்பர்களானோம்.
அந்த உரையில், தேவையான சீர்திருத்தங்களை புறக்கணிப்பதால்,
நாட்டின் நெருக்கடி வெடிக்கும் சூழ்நிலையாக வளர்ந்துள்ளது என்றும், ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு, நாடு திவாலாகிவிடும் என்றும்,
இறுதியில் நாடு திவாலாகி, அராஜக நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என்றும் கூறினேன்.
அப்போது மங்கள நாட்டின் நிதியமைச்சராக இருந்தார், அவர் தனது நன்றி உரையில் எனது பகுப்பாய்வை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், நெருக்கடிக்கு தெரிந்தோ தெரியாமலோ பங்களிப்பு செய்ததற்காக பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார்.
அதன் விளைவாக, நாங்கள் இருவரும் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க வழிவகுக்கும் சீர்திருத்த வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடும் கட்டமொன்றிற்கு சென்றோம்.
அது தொடர்பில் மங்கள அழைப்பு விடுத்த இரண்டு கலந்துரையாடல்களில் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார். பழைய அரசியல்வாதிகள் மத்தியில் நவீன சிந்தனைகளைக் கொண்டிருந்த,
மாறிவரும் நவீன உலகத்தைப் பற்றிய கூர்மையான புரிதல் கொண்ட இரு அரசியல்வாதிகளாக இவர்கள் இருவரையும் கருதலாம்.
அரசு மற்றும் அரசியல் துறையில் ஏற்பட்டுள்ள சீர்குலைவு மற்றும் நிறுவன அமைப்புகளில் ஊடுருவியுள்ள ஊழல் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். அந்த கலந்துரையாடல்கள் மிகவும் நேர்மையான முறையில் நடந்த கலந்துரையாடல்களாகவே கருதலாம்.
அந்த இரண்டு பழைய தலைவர்களைப் பற்றி அந்த நேரத்தில் எனது கருத்து என்னவென்றால், யார் ஆட்சியில் இருந்தாலும், கட்டமைப்பில் ஆழமான மாற்றத்திற்கான சீர்திருத்தத் திட்டத்திற்கான கதவுகளைத் திறப்பதில் முன்னோடியாக பங்களிக்கூடியவர்களாக இருக்க முடியும் என்பதாகும்.
கோட்டாபய மற்றும் ரணில்
முன்னெடுக்கப்பட்ட இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த வேளையில், என்னால் தயாரிக்கப்பட்ட மறுசீரமைப்பு தொடர்பான வரைபுத் திட்டத்துடன் நான் ஜனாதிபதி கோட்டாபயவை சந்திக்க சென்றிருந்தேன்.
கட்டமைப்பில் ஆழமான மாற்றமொன்றை ஏற்படுத்தக் கூடிய மறுசீரமைப்பு செயற்திட்டமொன்றுக்கு நாட்டை வழிநடத்த முடிந்தால், கொடுப்பனவு நிலுவை நெருக்கடிக்கு மேலதிகமாக சமூக-அரசியல் நெருக்கடிகளைத் தீர்க்கும் வகையிலான ஆழமான மாற்றமொன்றை ஏற்படுத்திய வண்ணம்,
நாட்டின் செல்நெறியையும் சீரான வழித்தடத்துக்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் நான் அவரை சந்தித்தேன்.
நான் ஏற்கனவே இதைப் பற்றி எழுதி விட்டதால், ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகின்றேன். என்னுடைய முழுப் பிரேரணைக்கும் ஜனாதிபதி ஒப்புக்கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பிரேரணையின் கடைசி அங்கமான இந்த வேலைத்திட்டத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பார்வையாளராக ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டது என்னை மேலும் ஆச்சரியப்படுத்தியது என்றே கூற வேண்டும்..
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் எனது வேலைத்திட்டத்தை ஜனாதிபதி அவருடன் கலந்துரையாடியதுடன் பிரதமரும் அதுகுறித்து என்னுடன் கலந்துரையாடினார்.
எனது சீர்திருத்த யோசனைகளை பிரதமர் ஏற்கனவே அறிந்திருந்தார்,
மேலும் தற்போதுள்ள அமைப்பில் நல்ல மற்றும் ஆழமான மாற்றம் அவசியம் என்றும் அவர் கருத்து கொண்டிருந்தார்.
அந்தக் கலந்துரையாடலின் பின்னர், எனக்கும் பிரதமருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை பிரதமர் ஆச்சார்யா அருண குலதுங்க மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்.யு. ஹல்வதுர ஆகிய இரண்டு பேருக்கும் ஒப்படைத்திருந்தார்.
இது தொடர்பாக பிரதமர் அவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் எனது சீர்திருத்த ஆவணம் மிகவும் சிறியதாக இருந்தாலும் அதன் உள்ளடக்கம் மகாவலி திட்டத்தை விட பெரியது என பிரதமர் கூறியதாக அருண குலதுங்கவிடமிருந்து அறிந்து கொண்டேன்.
ஆனால் அந்த நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையால், அந்த யோசனைகள் வெற்று இடத்தில் மிதக்கும் விஷயங்கள் போல இருந்தன..
பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஜூலை 20ஆம் திகதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சீர்திருத்த வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜூலை 22ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைத்தார்.
புதிய ஜனாதிபதி தனக்கே முழுமையான அதிகாரம் இருந்த நிலையில் சீர்திருத்த வேலைத்திட்டம் பற்றி எப்படிச் சிந்திப்பார் என்ற ஆர்வத்துடன் அன்று அங்கு சென்றேன்.
ஆனால், மறுசீரமைப்பு பற்றிய அவரது உறுதியில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அவருடனான உரையாடலில் நான் விரைவாக உணர்ந்தேன்.
நாட்டின் நலனுக்காக தேவையான அனைத்து அடிப்படை சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது ஜனாதிபதி கொண்டிருந்த கருத்தாக இருந்தது..
கோல்ஃபேஸ் இளைஞர்களின் போராட்டத்தில் இனம், சாதி, மதம், பாலினம், கலாச்சாரம் ஆகிய காரணிகள் எப்படி முக்கியக் கூறுகளாகச் செயல்பட்டன என்பது குறித்தும் பேசினோம்.
முற்கால குல வேறுபாடுகளை ஒழித்து இன, மத, பாலியல் மற்றும் கலாச்சார சமூக குழுக்களுக்கு சமமான மனித கௌரவம் மற்றும் சம உரிமைகளை வழங்கும் அணுகுமுறையில் இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் மற்றும்
அதனை சீர்திருத்த வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாக மாற்றுவது குறித்தும் கலந்துரையாடினோம்.
இந்த கலந்துரையாடலில் முதலில் பங்குபற்றிய மூன்றாவது நபர் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி ஆவார்.
பின்னர் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் வெளிநாட்டு ஆலோசகர் ஷேனுகா சேனவிரத்ன ஆகியோரை அங்கு அழைத்த ஜனாதிபதி,
இந்த சீர்திருத்த வேலைத்திட்டத்தில் பாரவையாளராக செயற்படுமாறு அழைப்பு விடுக்கும் கடிதம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புமாறு பணித்தார்.
மிகவும் சக்திவாய்ந்த சர்வதேச பார்வையாளரைப் பயன்படுத்தி கட்டமைப்பில் ஆழமான மற்றும் நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுக்கும் கட்டமைப்பு சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கான வாயில்களைத் திறக்க ஜனாதிபதி காட்டிய உறுதியானது என்னை ஆச்சரியப்படுத்தியது என்று சொல்ல வேண்டும்.
விதியின் அதிசயம்
1999 இறுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்க வேண்டும். ஆனால் டவுன் ஹோல் வெடிகுண்டு சம்பவம் அந்த வெற்றியைத் தடுத்தது. அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் சாத்தியம் ரணிலுக்கே அதிகமாக இருந்தது.
ஆனால் வாக்ளிப்பதற்கு பிரபாகரன் விதித்த தடையால் அந்த வெற்றியும் தடுக்கப்பட்டது.
மகிந்தவை தோற்கடிக்க பொது வேட்பாளர் தேவை என்ற எண்ணத்தினால் 2015 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் சந்தர்ப்பமும் இல்லாமல் போனது.
அதன் பின்னர் வந்த 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் கூடிய காலம் ரணில் விக்கிரமசிங்க அரசியல் ரீதியாக எதிர்கொள்ள நேர்ந்த மிக மோசமான காலகட்டமாக இருக்கலாம்.
பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கட்சியால் ஒரு ஆசனத்தைக் கூட பெற முடியாமல் ரணில் தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்தார்.
அற்புதமான மற்றும் பயங்கரமான விஷயங்கள் அதன் பின்னரே அடுத்தடுத்து நடந்தன. ரணிலுக்குப் பிரதமர் பதவி கிடைத்ததும்,
வீடும் நூலகமும் எரிக்கப்பட்டதும்,
பின்னர் கோட்டாபய நாட்டை விட்டு ஓடிய பின் ஜனாதிபதியாக பதவியேற்றதும்,
பின்னர் பாராளுமன்ற வாக்கெடுப்பில் ஜனாதிபதி ஆனதும் இளைஞர் போராட்டங்களின் பக்க விளைவுகளாகவே கருதலாம்.
பழைய அரசியல் தலைமுறையினரிடையே அவர் அறிவார்ந்த ரீதியில் சிறந்தவராகவும் திறமையான இராஜதந்திரியாகவும் கருதப்படக் கூடியவர் ஆவார்.
கோட்டாபயவை ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படும் ஒரு பாத்திரமாகவும் ரணில் ஊடகங்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட ஒரு பாத்திரமாகவும் கருதலாம்.
அவர் இலங்கையை கொடுப்பனவு நெருக்கடியிலிருந்து விடுவிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதே நேரம்
நாட்டில் நிலவும் தற்போதுள்ள ஊழல், திறமையற்ற மற்றும் நியாயமற்ற அமைப்பில் சிறந்த மற்றும் ஆழமான மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு சீர்திருத்த திட்டத்திற்கு நாட்டை இட்டுச் சென்றால், அவரது பெயர் இலங்கையை காப்பாற்றிய மாவீரர் என்று வரலாற்றில் பொறிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக