மின்னம்பலம் : 3 தமிழறிஞர்களுக்கு கலைஞர் செம்மொழி விருது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் கலைஞர் செம்மொழி விருது வழங்கும் விழா இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆண்டுதோறும் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் கலைஞர் செம்மொழி விருதினை வழங்கினார்.
அதன்படி 2020ம் ஆண்டுக்கான கலைஞர் செம்மொழி தமிழ் விருது முனைவர் ம.ராஜேந்திரனுக்கு வழங்கப்படுகிறது.
2021ம் ஆண்டுக்கான விருது பேராசிரியர் நெடுஞ்செழியனுக்கும், 2022ம் ஆண்டுக்கான விருது பிரான்ஸ் நாட்டின் அறிஞர் ழான் லூயிக் செவ்வியார் ஆகியோருக்கு விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.அதனை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “சிங்கார சென்னையின் 383வது பிறந்தாள். சென்னை மேயராக நான் இருந்தபோது தான், மதராஸ் என்ற பெயரை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் சென்னையாக மாற்றினார்.
அதனையடுத்து இன்று நம்ம சென்னை, நம்ம ஊரு என்று எல்லோரும் கொண்டாடி வருகிறோம். தமிழ்நாடு என்று பெயர் வைத்தது போல், மெட்ராஸ் என்றழைக்கப்பட்ட இந்த தலைநகருக்கு சென்னை என்று பெயர் வைத்ததும் திமுக அரசு.
அதே போல் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தமிழுக்கு, செம்மொழி என்ற தகுதியை பெற்று தந்ததும் தமிழக அரசு தான்.
பிறமொழிகளின் உதவியின்றி இயங்க கூடியது நம் செம்மொழி தமிழ். மைசூரில் இயங்கி வந்த செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, சென்னைக்கு மாற்றியவரும் கலைஞர் தான்.
அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் சென்னை பெரும்பாக்கத்தில் 16.58 ஏக்கர் நிலம் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு தமிழக அரசு வழங்கியது. 1.45 கோடி செலவில் நிலத்தை சமன்படுத்தியும் கொடுத்தது.
அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு என் முன்னிலையில் இந்தாண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.
kalaingar semmozhi award
சொந்த பணத்தில் விருது அறிவித்த கலைஞர்!
கடந்த 2008ம் ஆண்டு நடந்த செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலக திறப்பு விழாவில் கலைஞர் மகத்தான அறிவிப்பு ஒன்றை செய்தார்.
எனது சொந்த பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை நிறுவனத்தின் பொறுப்பில் வழங்குகிறேன் என அவர் அறிவித்தார். அன்னை தமிழ் மீதான அன்பின் வெளிப்பாடு தான் அந்த அறிவிப்பு.
அதன்படி ஆண்டுதோறும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை வாயிலாக தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்கு ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை, பாராட்டுச் சான்றிதழ், கலைஞரின் உருவம் பொறித்த நினைவு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
kalaingar semmozhi award
இதற்கான முதல் விருது கடந்த 2010ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் வழங்கப்பட்டது.
2011 முதல் 2019ம் ஆண்டுகான விருதுகள் கடந்த ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் வழங்கப்பட்டது. இன்று 2020ம் ஆண்டுக்கான கலைஞர் செம்மொழி தமிழ் விருது முனைவர் ம.ராஜேந்திரனுக்கு வழங்கப்படுகிறது.
2021ம் ஆண்டுக்கான விருது பேராசிரியர் நெடுஞ்செழியனுக்கும், 2022ம் ஆண்டுக்கான விருது பிரான்ஸ் நாட்டின் அறிஞர் ழான் லூயிக் செவ்வியார் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக