புதன், 10 ஆகஸ்ட், 2022

ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுக்கு முந்தைய தங்க கிரீடம் கண்டுபிடிப்பு”:

kalaignarseithigal.com  : “ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுக்கு முந்தைய தங்க கிரீடம் கண்டுபிடிப்பு”: செல்வ செழிப்புடன் வாழ்ந்த தமிழர்கள்!
தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் முதல்கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது.


இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்றுஇடங்களில் நடந்து வருகிறது.
இந்த அகழாய்வு பணியில் 90 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் சி சைட் என அழைக்கப்படும் அலெக்சாண்டர் ரியா கடந்த 100 வருடங்களுக்கு முன்பு அகழாய்வு செய்த பகுதியில் 30 செண்டி மீட்டர் ஆழத்தில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டது.

ஆதிச்சநல்லூரில் 1902 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்தபோது தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் நடந்த 4 கட்ட அகழாய்வு பணியில் தங்கத்தால் செய்யப்பட்ட பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
தற்போது சுமார் 3 மீட்டர் ஆழத்தில் அகழாய்வு குழி தோண்டப்பட்டது. அந்த குழியில் 160 செண்டி மீட்டர் நீளமுள்ள நீளமான ஈட்டி போன்ற ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே இரும்பு பாத்திரம் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இரும்பு பாத்திரத்தின் மீது நெல் உமியின் படிமங்கள் ஒட்டிய நிலையில் காணப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முதலில் ஆதிச்சநல்லூர் தான் இந்த இரும்பு பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடர்ந்து நடைபெற்றஅகழ்வாராய்ச்சியில் தங்கத்திலான நெற்றி பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 3.5 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த தங்க நெற்றி பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்ததற்கான அடையாளமாக கருதப்படுகிறது.
தங்கத்திலான பொருள்கள் தொடர்ந்து கிடைத்து வருவது ஆராய்ச்சியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தங்கத்திலான நெற்றி பட்டயத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக