வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன் கடத்தல்’.. ‘1.5 கோடி அபேஸ்’.. சொந்தக் கட்சி நிர்வாகி?

tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  : ஈரோடு : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன், தன்னை ஒரு கும்பல் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்து ரூ.1.50 கோடி பணத்தைப் பறித்துச் சென்றதாக புகார் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன், தன்னை ஒரு கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்து பணத்தைப் பறித்து சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியவர்களில் ஒருவர் மட்டும் அடையாளம் தெரிந்ததாகவும், அவர் அதிமுக நிர்வாகி என்றும் அவர் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பணத்துக்காக கடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யாருக்கும் இடமில்லை.. அதிமுக என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி தான்..
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (45). அதிமுகவைச் சேர்ந்த இவர், கடந்த 2016 முதல் 2021 வரை பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார். தற்போது புஜங்கனூரில் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரனை ஒரு கும்பல் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்துள்ளது. பின்னர் 1.5 கோடி பணம் கொடுத்த பிறகு அவரை விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வழிமறித்த கார்
இச்சம்பவம் தொடர்பாக ஈஸ்வரன் கூறுகையில், செவ்வாய்க்கிழமை மதியம் புஜங்கனூரில் இருந்து எனது தனது பைக்கில் பவானிசாகர் ஸ்டேட் பேங்க் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் மல்லியம்பட்டி பிரிவு அருகே சென்றபோது பைக்கின் பின்னால் ஒரு கார் வந்தது. திடீரென ஓவர்டேக் செய்து பைக்கை வழிமறித்து காரில் இருந்து இறங்கிய 6 நபர்கள் கண்ணை மறைத்து துணியை கட்டி காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

கண்ணைக் கட்டி கூட்டிச் சென்றனர்
அரை மணி நேரம் கார் சென்றபின் அடையாளம் தெரியாத ஒரு வீட்டில் வைத்து அடித்து துன்புறுத்தினர். இதைத்தொடர்ந்து ஒருவர் 3 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் என்னை விடுவிப்பதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தினார். பணம் வீட்டில் உள்ளதாக கூறியதால் மிலிட்டரி சரவணன் அதிகாலையில் என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். வீட்டில் வைத்திருந்த பணம் ரூ.1.50 கோடியை கொடுத்தவுடன் ஏன்னை விட்டு விட்டுச் சென்றனர்.

1.50 கோடி பணம்
கடத்திச் சென்ற நபர்கள் தாக்கியதில் கால் தொடை மற்றும் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. பணம் கேட்டு மிரட்டி கடத்திச் சென்று அடித்து உதைத்து பணத்தை பறித்துச் சென்ற கும்பல் மீது பவானிசாகர் போலீசில் புகார் அளித்துள்ளேன். பணம் கேட்டு மிரட்டிய ஒருவரை மட்டும் அடையாளம் தெரிந்தது. அவர் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி மிலிட்டரி சரவணன் எனத் தெரிவித்துள்ளார்.
மேல் சிகிச்சை

மேல் சிகிச்சை

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன் பின்னர் கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். முதல்வர் வருகையால் பெரும்பாலான போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டதால் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக