சனி, 9 ஜூலை, 2022

பொதுக்குழுவுக்குத் தடை : மற்றொரு வழக்கும் தள்ளுபடி! நாற்காலியை தூக்கி வீசி OPS, EPS ஆதரவாளர்களிடையே அடிதடி மண்டை உடைப்பு

EPS - OPS மின்னம்பலம் : அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கேட்டு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் இடையே அதிகார மோதல் நிலவி வரும் நிலையில் எப்படியாவது பொதுக்குழுவுக்கு தடை வாங்கிவிட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு சட்டப்போராட்டத்தை நடத்தி வருகிறது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவுக்குத் தடையில்லை என்று தெரிவித்துவிட்டது. அதுபோன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பன்னீர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த இரு நாட்களாக விசாரணை நடைபெற்று பொதுக்குழு நடைபெறும் 11ஆம் தேதி காலை 9 மணிக்குத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கு தடையிட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டி பகுதியில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.சூரிய மூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், “அதிமுக அடிமட்ட தொண்டர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய பதவி பொதுச்செயலாளர் பதவி. அந்த பதவியைக் கலைத்துவிட்டு, தேர்தல் நடைமுறைகளை முறையாகக் கையாளாமல் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது” என்று கூறி ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 11ஆம் தேதி கூட்டத்தை நடத்த ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று கூடுதல் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு சென்னை 23வது உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி தாமோதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஈபிஎஸ் தரப்பில், ‘மனுதாரர் கட்சியின் உறுப்பினர் இல்லை என்பதால் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய உரிமை இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி பொதுக்குழுவுக்குத் தடை கேட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பொதுக்குழுவுக்கு தடை கேட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் வரும் 11ஆம் தேதி வரவிருக்கும் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் ஈபிஎஸ் -ஓபிஎஸ் தரப்பினர்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக