சனி, 9 ஜூலை, 2022

மரணப் படுகைகளாகிவிட்ட தமிழ்நாட்டு சாலைகள்.

May be an image of car and outdoors

RS Prabu :  போர் தொடர்பான ஆங்கிலத் திரைப்படங்களில் வீரர்களை வழியனுப்புகையில் Come home alive, in one piece என்ற வாசகத்தை மனைவிகள், காதலிகள் சொல்லி விடை பெறும் காட்சி நிறைய வரும். இன்று தமிழ்நாட்டில்  அன்றாடம் வண்டியில் வேலைக்குச் சென்று வருபவர்களிடம் 'போய்ட்டு வாங்க' என்று வழியனுப்பாமல் 'அடிபட்டு செத்துடாம உயிரோட வந்து சேருங்க' என்று சொல்லி அனுப்ப வேண்டிய நிலைமை.
சாலை விபத்துகளில் அடிபட்டு இறப்பவர்களில் கார் ஓட்டுநர்களில் சுமார் 70% பேரும், இருசக்கர வாகன ஓட்டிகளில் சுமார் 50% பேரும் they deserve such a brutal death. இது ஒரு arrogant, irresponsible statement என்று சிலர் கருதக்கூடும்.


மாட்டு வண்டியிலோ, குதிரை மீதோ அமர்ந்து செல்லும்போது என்னதான் விரட்டினாலும், அடித்தாலும் அவை தவறுதலாக ஒரு அடி கூட  எடுத்து வைக்காது. சிறு காயம் என்றாலும் தாம் பயன்ற்ற சுமையாகிப் போவோம் என்பதுடன் கொல்லப்படவும் செய்யலாம் என்பது புரிந்தே பயணக்கின்றன. ஒருபோதும் இந்த மாடு அடுத்த மாடு அட்ஜஸ்ட் பண்ணி செல்லும் என்று நம்பி எங்கேயும் நுழைவதில்லை.
ஆனால் வாகனங்களில் செல்பவர்களில் பலருக்கு அதைக் கையாளும் திறனோ, நிதானமோ, சாலைகள் அமைப்புகள், போக்குவரத்து விதிகள் குறித்த புரிதல் இருப்பதில்லை. அதை அறிந்துகொள்ள வேண்டும், பாதுகாப்பாகச் சென்று வர வேண்டும் என்ற உணர்வும் இருப்பதில்லை. அறியாமை என்ற excuse எல்லா நேரத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
சாலைகளில் அலட்சியம், திமிர், தான் பெரிய புடுங்கி என்கிற ஆணவம், மற்றவர்களுக்கு ஆபத்து வருவதைப் பற்றி கவலைப்படாத பொறுப்பற்ற நடத்தை, சாலை விதிகள் என்பதே மீறுவதற்காகத்தான் என்கிற விட்டேத்தியான மனநிலை, ஓட்டுநர் உரிமமும், வண்டிக்கு காப்பீடும் இருந்துவிட்டால் Licenced to kill என்கிற மனப்பாங்கு கொண்டவர்கள் அடிபட்டு நார் நாராக கிழிந்து இறந்து விடுவதே சாலைகளில் பயணிக்கும் மற்றவர்களுக்கு நல்லது. RIP, இமயம் சரிந்தது, கண்ணீர் அஞ்சலி எல்லாம் போட்டுவிட்டு மற்றவர்கள் அவரவர் வாழ்க்கையைப் வாழப் போய்விடுவார்கள்.
அவர்களை நம்பி உட்கார்ந்து உடன் சென்றவர்கள், எதிரிலோ ஓரத்திலோ இயல்பாக வேலைக்குச் செல்லும்போது  இவர்களால் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள், ஊனமடைபவர்கள் நிலைமைதான் பரிதாபகரமானது.
அன்றாடம் 10 மணி நேரம் வேலை செய்வதில் ஆறு மணி நேரம் வண்டி ஓட்டிக்கொண்டே இருப்பவர்களுக்குத்தான் தெரியும் எத்தனை மென்மையான, அன்பான, பண்பான, பாசிட்டிவ் வைப் மனநிலையில் காலையில் கிளம்பினாலும் மதியத்துக்குள் ''போய் வேற எங்காவது மரத்துல அடிச்சு செத்து தொலையேண்டா தாயோலி'' என்று ஒருவனையாவது திட்டமால் பயணிக்க முடியாது என்று.  
சாலை வடிவமைப்பில் பிழை இருக்கிறது, சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் விபத்துகளில் அவற்றின் பங்களிப்பு 10% வருமா?
தமிழ்நாட்டில் வருடத்திற்கு சுமார் 17000 பேர் அடிபட்டு இறக்கிறார்கள், சுமார் ஒரு இலட்சம் பேர் காயமடைகிறார்கள். கணக்கில் வராத சிறு விபத்துகளால் காயம்பட்டு ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்பவர்கள் சுமார் ஐந்து இலட்சம் பேராவது இருப்பார்கள்.
இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் வளர்கிறது. விபத்து மூலம் ஏற்படும் அகால மரணங்கள், ஊனங்கள், காயங்கள், அழுகைகள், கண்ணீர்க் கதைகள், தாலி அறுப்புகள் குறைய வாய்ப்பே இல்லை.
வாகனங்கள் எண்ணிக்கை கூடினால் விபத்துகள் கூடத்தான் செய்யும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் இத்தகைய சின்னச்சின்ன விசயங்களைப் பொருட்படுத்தக் கூடாது, முதன் முறையாக கார், பைக் வாங்கிய தலைமுறை என்பதால் கொஞ்சம் முன்னபின்னத்தான் இருக்கும் போகப்போக சரியாகி விடும், கடுமையான சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துவது என்ற பெயரில் ஏழைகளைத்  துன்பத்துக்குள்ளாக்ககூடாது என்றெல்லாம் முட்டுக்கொடுப்பது பச்சை அயோக்கியத்தனமாகும்.
பெரிய மனிதர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அவர்களது  பிள்ளைகளும் சாலை விபத்தில் அகால மரணமடைகிறார்கள். புத்திர சோகம், கணவனின் அகால மரணம், மனைவியின் மரணம் என்பதெல்லாம் வசதி இருப்பவன், இல்லாதவன் அனைவருக்கும் ஒன்றுதானே.
இத்தனை கோர மரணங்கள் நம்மைச் சுற்றிலும் நடந்தாலும் அதைத் தடுக்கவும், முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க ஏன் political will என்பது உண்டாகவில்லை என்பது நம் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி.
Conspiracy theory-களில் நம்பிக்கை இல்லாத யதார்த்தவாதிகள் கூட மருத்துவமனை, ஸ்கேன் மையங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவப்பொருட்களின் மொத்த விநியோகத்தில் முதலீடு செய்துள்ள அரசியல்வாதிகளையும் அவர்களது யோக்கியதையையும் இணைத்துப் பார்த்து சிலவற்றைப் புரிந்துகொள்வதைத் தவிர்க்க முடியாது.
அரசாங்கப் புள்ளிவிவரத்தில் ஏற்றப்படாத, உயிரிழப்பு இல்லாத சிறு விபத்துகளில்தான் இன்று மிகப்பெரிய வணிகம் நடைபெறுகிறது. இதை rubbish statement என்று அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிடலாகாது.
சாலை விபத்து கேஸ்களில் திடீரென சுமார் 70% வராமல் போய்விட்டது என்றால்  மிகப்பெரிய மருத்துவமனைகள் கூட குறிப்பாக எலும்பு சிகிச்சையில் பிரபலமான பல மருத்துவமனைகளே கணிசமான வருவாய் இழப்பைச் சந்திக்கும் என்பதை மறுக்க முடியாது.
பொதுமக்களைப் பொறுத்தவரை எந்தவொரு காரியத்திலும் அரசு செய்யும் enforcement என்பதையே harassment என்றுதான் பார்ப்பார்கள். இதுவரைக்கும் அரசாங்கத்துடனான உறவும், அனுபவமும் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. உதாரணத்துக்கு ஒன்றியம் செய்த பண மதிப்பிழப்பு முதல் நமது பள்ளிக் கல்வித்துறை அறிவித்து வரும் பல self destructive orders வரை  ஏகப்பட்டது உண்டு.
கலைஞர் தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கிய காலத்துக்குப் பிறகு கடந்து ஐம்பது ஆண்டுகளாகத் தனியார் பேருந்துகளுக்குப் புதிய வழித்தட உரிமங்கள் வழங்கப்படவே இல்லை. லைசன்ஸ் ராஜ்யம், quota முறை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாலும் பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக சிதைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் மக்கள்தொகை வளரவே இல்லையா?
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை ஒழுங்குபடுத்தக் கொண்டுவரப்பட்ட மசோதா நீர்த்துப்போக ஒவ்வொரு டிரைவிங் ஸ்கூலுக்கும் ஒரு இலட்சம் வீதம் வசூல் வேட்டை நடத்தப்பட்டதை அப்போதைய வார இதழ்களைப் படித்தவர்கள் அறிவார்கள். அதை நடாத்தியவர் யார் என்பதும் நினைவிருக்கலாம்.
இன்றுவரைக்கும் update செய்யப்படாத evaluation system என்பது ஓட்டுநர் உரிமம் வழங்க 8 போட்டுக் காட்டுவதுதான். முன்பதிவு செய்து இரண்டு வருடம் காத்திருந்து Bajaj Chetak வாங்கியவர்கள் காலத்தில் போடப்பட்ட விதிமுறை அன்று போதுமானதாக இருந்திருக்கலாம்.
இதைவிட ஆகச்சிறந்த கேலிக்கூத்து Motor Cycle With Gear என்பதற்கு Activa வண்டியில் எட்டு போட்டால் போதும் என்பதுதான். உள்ளே என்னதான் CVT கியர்பாக்ஸ் இருக்கிறது என்றாலும் இன்னுமா இந்த விதிமுறையின் ஓட்டைகளை அடைக்க முடியாது?
ஓட்டுநர் உரிமம் பெற வாகனம் ஓட்டிக் காட்டுவதை காணொளிப் பதிவு செய்து ஐந்து வருடத்துக்காவது சேமித்து  வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு   விபத்து என்றாலும் அதை ஏற்படுத்தியவரது உரிமத்தை முடக்கி மறுபடியும் ஓட்டிக் காட்டி உரிமம் பெறச் செய்ய வேண்டும். ஒருவரது எழுத்துத் தேர்வு, ஓட்டுதல் தேர்வுக் காணொளிகளைக்  காப்பிட்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்டவர் தரப்பு பார்வையிட அனுமதி தரப்பட வேண்டும்.
கோயமுத்தூரின் ஸ்மார்ட் சிட்டி பட்ஜெட் சுமார் 1000 கோடி. நால்ரோடு சந்திப்பில் உள்ள சிக்னலை நீக்கி ஐந்து அடி விட்டத்தில் ரவுண்டானா அமைத்து வின்டேஜ் விளக்குத் தூண் போட்டார்கள். இப்போது மறுபடியும் சிக்னல் அமைக்கிறார்கள். குளக்கரைகளில் மிதிவண்டி ஓட்டப் பாதை அமைக்க பணத்தை வாரி இறைக்கிறார்கள்.
அப்பேர்ப்பட்ட மாநகரத்தில் உள்ள நான்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஒன்றில் ஓட்டுநர் உரிமம் வழங்க 8 போட்டுக் காட்டுவதை இந்த காணொளியில் பார்க்கலாம். முன்னர் சாக்கடை ஓரத்தில் உள்ள காலி இடத்தில் 8 போட்டனர். இப்போது அந்த பகுதியில் நெரிசல் அதிகமாகிவிட்டதால் கொடிசியா மைதானம் அருகில் வந்துவிட்டனர். மற்ற மூன்று அலுவலகங்களில் ஒன்று கோவில் மைதானத்தில் 8 போட அனுமதிக்கிறது.
நாமக்கல், சங்ககிரி போன்ற சிறு நகரங்களில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் கூட பயிற்சி ஓட்டுநர் ஆய்வு மைதானம் இருக்கிறது. ஆனால் அவைப் பயன்படுத்தப்படுவதில்லை என்பது வேறு கதை.
Heavy driving licence எடுக்க ஒரு பேருந்தில் விண்ணப்பதாரர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்று அவர்கள் ஓட்டுவதைப் பரிசோதிக்கும் அழகைப் பார்த்தால் 'உங்களைத்தான் நாசாவுல ராக்கெட் விட கவுன்ட் டவுன் பண்ண கூப்பிட்டாங்க' என்று அசந்து போய் சொல்வீர்கள்!
அவ்வப்போது உயர்நீதிமன்றம் தலையிட்டு சில விதிமுறைகளை  செயல்படுத்தும். பின்னர் சில மாதங்களில் அவை கண்டுக்கொள்ளப்படா.
வாகனங்களில் உள்ள Bumper-களை உயர்நீதிமன்றம் அகற்றச் சொன்னபோது உடனடியாக காவல்துறை அதை அமுல்படுத்தியது. இன்று பம்பர்கள் மேல் கொடூரமான கூரிய முனையுள்ள கொடிக் கம்பிகள், வேல், திரிசூலம், இரட்டை இலை, தாமரை, உதயசூரியன் இலச்சினை மாட்டப்பட்டு பல வாகனங்கள் சுற்றுகின்றன. காவல்துறைக்கு அதெல்லாம் இன்னும் தெரியவில்லை போலும்.
அதிலும் பம்பர் மீது வேல் கம்பியை நட்டு எலுமிச்சம்பழம் குத்தி வருபவர்கள் கொடூரத்தின் உச்சம்.
பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிபடும்போது கார்களின் in built பம்பர்கள் கொஞ்சம் உள்ளே நசுங்கி அவர்களுக்கு ஏற்படும் தாக்கத்தின் வீரியத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே உலகம் முழுவதும் பிளாஸ்டிக் அல்லது நாரிழைகளால் வடிவமைக்கப்படுகின்றன (Bolero வண்டியில் மட்டும் சில வருடங்கள்  in built steel bumper வந்தது, பின்னர் நிறுத்தப்பட்டுவிட்டது).
அடிபடுபவன் இருந்தால் என்ன செத்தால் என்ன என்று ஸ்டீல் பம்பர் மாட்டும் சில்லரைப்பயல்கள் 10 - 30 இலட்சத்தில் வண்டி வாங்குபவர்கள் மட்டுமே. அதற்குக் கீழும்,  மேலும் கொடுத்து வாங்குபவர்களுக்குத் தான் யார், தன்னுடைய தேவை என்பது என்ன என்ற புரிதல் இருக்கிறது என்றே சொல்லலாம்.
இடித்தவுடன் தூக்கி எறியப்பட்ட நபர் bonnet-இன் நுனிப்பகுதி அல்லது கண்ணாடி மீது விழுவதுதான் நடக்கும். சில எலும்பு முறிவுகளுடன் அந்த நபர் பிழைத்துவிடக்கூடாது என்பதற்காகவே பம்பர் மாட்டுவதுடன் அதில் வேல், திரிசூலம் போன்ற கூரிய கம்பி மாட்டி வைத்து வயிறோ, முகமோ, கழுத்தோ குத்தினால் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்துவிடும் என்று முடிவு செய்து விட்டார்கள் போல.
ஏதோ அறியாமையால் பம்பர் மாட்டி அதில் கூரிய கம்பியில் கட்சிக் கொடி கட்டினால் கெத்து என்று நினைத்துச் சுற்றுகிறார்கள் என்று எளிதாகப் பார்க்க முடியாது.
கோயமுத்தூர் மாநகர மேயரின் அலுவலக வாகனம், ஈரோடு மாவட்ட ஆட்சியரின் வாகனம் போன்றவையும் பம்பர், அதன் மேல் கொடி கட்டும் குத்துக் கம்பியுடன்தான் வலம் வருகின்றன. குத்துக்கம்பி மாட்டி கொடி கட்டாத அமைச்சர், சமஉ, அரசியல்வாதிகளின் கார் உண்டா? இவர்கள் எல்லாம் சட்டத்துக்குக் கட்டுப்படத் தேவையில்லாதவர்கள் அல்லவா?
சட்டத்தை இயக்கக்கூடிய, அதை செயல்படுத்தக்கூடிய அதிகார வர்க்கமே சாலைப் பாதுகாப்பு என்று வரும்போது  மயிருக்குக் கூட அதை மதிப்பதில்லை.
'இருபத்தஞ்சு லட்சத்துக்கு கார் வாங்கியிருக்கேன், இன்சூரன்ஸ் கட்டியிருக்கேன், எவன் மேல வேணும்னாலும் விட்டுத் தூக்குவேன், கம்பில மாட்டுனா குத்திக் கிழிப்பேன், ஒரு மயிறும் புடுங்க முடியாது, because I'm licenced to kill. மீறிப்போனா ஒருவாரம் வண்டி ஸ்டேஷன்ல நிக்கும், 304A-வுல எழுதச் சொல்லிட்டு போயிட்டே இருப்பேன்'  என்று சொல்லாமல் சொல்கிறார்கள் போல.
இன்னொரு மிகப்பெரிய தோல்வி நமது போக்குவரத்துக் காவல்துறை என்ற பிரிவு சிரிப்பு போலீஸ், டம்மி போலீஸ் வரிசையில் சேர்ந்துவிட்டதுமாகும். இந்த பிரிவில் வேலைக்கு வருபவர்கள் வேலை செய்வதைத் தூரத்தில் இருந்து சில மணி நேரங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும். தனியார் நிறுவனங்களில் இத்தகைய ஊழியர்களை அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு மேல் வைத்து சம்பளம் கொடுக்க மாட்டார்கள்.
கோயமுத்தூர் போன்ற பெரிய மாநகரத்தில் வேகத்தைக் கண்காணித்து அபராதம் விதிக்கும் தானியங்கிக் கேமராக்களை இன்னும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்  போன்றது என்று கருதி வாங்காமலேயே இருக்கிறார்கள்.  ஆனால் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் பாகங்கள் இங்கே தயாராகின்றன.
வருவோர், போவோரிடம் நூறு ரூபாய் வாங்கியே அன்றைய வசூல் இலக்கை முடித்துப் பழக்கப்பட்டதாலோ என்னவோ ஹெல்மெட் அணியாதது, wrong side entry, காப்பீடு இல்லாதது என எல்லாவற்றுக்குமே நூறு இருநூறு மட்டுமே அபராதம் விதிக்கிறார்கள்.
அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது தப்பில்லை என்று இன்று normalize செய்யப்பட்டுவிட்டது; அதனால் இப்போது காவல்துறை அதை ஒரு சீரியசான குற்றமாகக் கருதி அபராதம் விதிப்பதில்லை. அதுவும் கார் புளூடூத் உடன் இணைத்துப் பேசுவது தவறு என்று முக்கால்வாசிப் பேருக்குத் தெரியாது.
போக்குவரத்துக் காவல்துறையில் புலனாய்வுப் பிரிவைத் தவிர மீதியை  மொத்தமாகக் கலைத்துவிட்டு வட மாநில இந்தித் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்துவதால் எந்தக் குறையும் வந்துவிடாது. நிச்சயமாக இன்று வெள்ளுடையில் சாலைகளில் நிற்கும் காவலர்களை விட பத்து மடங்கு வேலை செய்வார்கள்!
ஏனெனில் enforcement-ஐ சக ஓட்டுநர்கள், சாலைப் பயனாளிகளே செய்ய முடியாது. அப்படி செய்து கொள்வார்களேயானால் அரசு என்ற அமைப்பே தேவைப்படாது என்பது தனி.
எல்லாவற்றையும் காவல்துறையே கண்காணித்து செய்ய ஆட்கள் இல்லை என்பது உண்மைதான். Police e eye என்ற செயலியைக் கோவையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது காவல்துறை. அதில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களைப் புகைப்படம் எடுத்து ஏற்றிவிட்டால் அபராதம் விதிப்பார்கள். இது ஒரு வகையில் பார்த்தால் நல்ல விசயம்தான்.
இத்தகைய participatory enforcement system கொண்டுவரும்போது அதில் பங்களிப்பவர்களுக்கு சிறிய அளவிலாவது reward இருக்க வேண்டும். ஒரு வகையில் காவல்துறையின் வேலையை எளிமைப்படுத்துகிறார்கள், செலவைக் குறைக்க உதவுகிறார்கள் எனும்போது அவர்களது உழைப்புக்கு மதிப்புக் கொடுக்கும் விதமாக 10% கமிஷன் வழங்கலாம்.
உதாரணமாக பம்பர் மாட்டியிருந்தால் 5000 ரூபாய் அபராதம். அப்படி மாட்டப்பட்ட வாகனம் ஒன்றைப் படம் எடுத்து அனுப்பித் தருபவருக்கு 10% கமிஷன் என்ற அடிப்படையில் 500 ரூபாய் வழங்குவதன் மூலம் மக்களுக்கு ஒரு வகையில் வருவாய் ஆதாரம் என்பதோடு விபத்துகள் குறையவும், காவல்துறைக்கு வேளைப்பளு குறையவும் செய்யும்.
தினமும் பத்து பம்பர் வைத்த வண்டிகளைப் படம் எடுத்து அனுப்பினால் 5000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்றால் யார்தான் செய்ய மாட்டார்கள்? மற்ற அனைத்துவிதமான சாலை விதிமீறல்களை, ஆபத்து விளைவிக்கும் நடத்தைகளைப் படம் பிடித்து அனுப்பினால் 10% கமிசன் கிடைக்கும் என்றால் இன்று பையில் ஒவ்வொருவரும் கேமரா வைத்திருக்கிறார்கள்.
பேஸ்புக்கில் கட்டுரை எழுதி நேரத்தை வீணடிக்காமல் ரோட்டோரமா போனை வச்சிகிட்டு நின்னு நாலு போட்டோ எடுத்துக் குடுத்தா வருமானமாவது வரும்ல என்று வீடுகளில் அறிவுரை சொல்லப்படும் நிலைமை வந்தாலும் தப்பில்லை.
எவன் எப்போ எங்கிருந்து போட்டோ எடுத்துப் போடுவான்னு தெரியாது, ஃபைன் வீட்டுக்கு வரும், அதைக் கட்டாமல்  வண்டியை விற்க முடியாது என்ற பயம் இருந்தாலே பாதிப் பேர் அடங்கி விடுவார்கள். அதற்கெல்லாம் பயப்படாத கால்வாசி நபர்கள் எப்படியும் தானாகவே அடிபட்டு செத்துப் போய்விடுவார்கள்.
விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு அரசாங்கமே குடிமக்களுக்குக் கமிசன் கொடுப்பதா என்று பீராய வேண்டியதில்லை.
இன்று யாராவது அடிபட்டு மருத்துவமனையில் சேர்ந்த உடனே விபத்து தொடர்பான வழக்கை நடத்தித் தருகிறோம் என்று கைச்செலவுக்குப் பணமும் கொடுத்து அன்போடு ஆறுதல் சொல்லும் புரோக்கர்கள் எல்லா மருத்துவமனை அருகிலும் நிற்கிறார்கள்.  
கட்டணமே இல்லாமல் இரண்டு மூன்று ஆண்டுகள் மோட்டார் வாகனத் தீர்ப்பாயத்தில் வழக்கு நடாத்திக் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகையில் 15% கட்டணமாக எடுத்துக் கொள்வது சாதாரணம். இதைக் கட்டணம் என்றும் சொல்லலாம், கமிஷன் என்றும் சொல்லலாம்.
நாம் சாலை விபத்தில் அடிபட்டுப் படுக்கையில் கிடந்தாலும் பலருக்குக் காசு, செத்தாலும் காசு என்று வியாபாரமாக எல்லாம் நடக்கும்போது விதிமீறல்களில் ஈடுபடுபவர்களைப் படம் பிடித்துத் தருபவர்கள் ஒருவகையில் விபத்துகளைத் தடுக்க உதவுகிறார்கள் என்பதால் அவர்களுக்குக் கமிஷன் கொடுப்பதால்  எதுவும் குறைந்துவிடப் போவதில்லை.
நம்முடைய ஆர்டிஓ அலுவலகங்களும், போக்குவரத்துக் காவல் துறையும் முற்றிலும் செயலிழந்த நிலையில் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட அமைப்புகள் என்று சொல்வதில் மிகைப்படுத்தல் எதுவுமில்லை.
ஐயமிருப்பின் யாராவது விபத்தில் அடிபட்டு FIR போட்டு, காப்பீட்டில் இழப்பீடு பெற்றவர்களின் அனுபவங்களைக் கேட்டுப் பாருங்கள்.  
சாலை விபத்துகளில் சுமார் 90% ஓட்டுனர்களின் தவறுகளால்தான் நடக்கிறது. என்னென்ன தவறுகள், ஏன் அதைச் செய்கிறார்கள் என்று அனைவருக்குமே தெரியும். அவனவன் பாதுகாப்பு அவனவன் கையில்தான் உள்ளது.
"இருந்தா இரு,  அடிபட்டு செத்தா சாவு, nobody cares" - இதுதான் நமது அரசாங்கங்கள் நமக்கு வழங்கியிருக்கும் சாலைப் பாதுகாப்புக் கொள்கை.  ஒரு சாக்கையோ, பிளெக்ஸ் பேனரையோ, துணியையோ போட்டு பாடியை மூடி விடுவார்கள். எப்படா அந்த ரெண்டு வண்டியையும் ஓரமா இழுத்து போட்டுட்டு டிராபிக்கை கிளியர் பண்ணி விடுவார்கள் என்று மற்றவர்கள் ஸ்டியரிங்கைக் குத்திக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.
அடுத்த பத்தாண்டுகளிலும் இதில் எந்த மாற்றமும் கொண்டுவர முடியுமா என்று தெரியவில்லை. அந்த சாக்குக்கு அடியில் கிடக்கும் பாடி நம்முடையதாக இருக்காமல் இருக்க எவ்வளவு கவனமாக இருக்க முடியுமோ அவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்.
ஆனாலும் அதில் 50% பங்கு மற்ற ஓட்டுநர்களின் கையில்தான் இருக்கிறது என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல்  reached home alive, in one piece என்று அந்தந்த நாளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக